அப்பளக்குடுமி தாத்தா கதைகள்

அப்பளக்குடுமி தாத்தா கதைகள்

 நிறைமதியன்
--------------------------அப்பளக்குடுமி தாத்தா உள்பட சிறுவர்,சிறுமிகள் கூடி இருந்தார்கள்.
தாத்தா கதை சொல்ல ஆரம்பித்தார். அப்போது....
கூட்டத்தில் ''போடா நொண்டி'' என்று குரல் கேட்டு தாத்தா திரும்பினார்.


''கால் ஊனம் என்பதற்காக கேலி பேசக்கூடாது. ஒருவர் உடல் ஊனமாக இருக்கலாம்.ஆனால்,மனம் வலுவாக இருக்கும்...''
...அதற்கு ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள்''என்றார்.


..'ஒரு ஊரில் ஏழு அண்ணன்களும், ஒரு தங்கையும் இருந்தார்கள். அதில் கடைசி அண்ணனுக்கு ஒரு கால் நொண்டி .அவனது பெயர் நிறைமதியன்.
தம்பியை அண்ணன்கள் அவ்வளவாக கவனிப்பதே கிடையாது.இருந்தாலும் கடைசி தம்பி தன்னம்பிக்கையும், புத்தி கூர்மையும் உள்ளவனாக விளங்கினான்.


தங்கை கமலாவிடம் அண்ணன்களுக்கு மிகுந்த அன்பு.அவளை அவர்கள் கண் இமை போல் காத்து வந்தார்கள்.தங்கை 'எள்'என்றால் இவர்கள் 'எண்ணெய்'யாக நின்றார்கள்.


எது கேட்டாலும் வாங்கிக் கொடுத்து அவளை சந்தோஷமாக வளர்த்து வந்தார்கள்.


அவளும்,பெரியவளாக வளர்ந்து விட்டால். தங்கப் பதுமைபோல் காணப்பட்டாள்.வளர்ந்து விட்டாலே ஒழிய குறும்புத் தனமும்,சிறுபிள்ளைத்தனமும் இருந்து கொண்டே இருந்தது.


ஒருநாள் அவள் தோழிகள் எல்லோரும் பக்கத்தில் இருக்கும் தோப்பிற்கு எலந்தப்பழம் பறிக்கச் சென்றார்கள்.


கமலாவையும் அழைத்தார்கள். அவளும் அண்ணனிடம் சொல்லிவிட்டு தோழிகளுடன் சென்றாள்.
பெண்களாகச் சேர்ந்தால் அரட்டைக்கு பஞ்சமா ?என்ன..

.
பேச்சும்,சிரிப்பும்,கேலியுமாக தோப்பிற்கு சென்று மரத்தில் ஏறி பழம் பறித்தார்கள்..


மரத்தின் உச்சியில் நல்ல பழமாக இருபதைக் கண்ட கமலா சற்றும் யோசிக்காமல் மளமள என்று ஏறி விட்டாள்.


பழம் பறிக்கும் மும்முரத்தில் யாரையும் கவனிக்காது பறித்துக் கொண்டு இருந்தாள்.


தோழிகள் எல்லோரும் மரத்தில் இருந்து கீழே இறங்கியதை கவனிக்கவே இல்லை கமலா.


தோழிகள் எல்லோரும் கமலா மரத்தின் உச்சியில் இருப்பதை கவனிக்காமல் அனைவரும் வீட்டுக்குச் சென்று விட்டார்கள்.
சில மணி நேரம் கழித்துதான் நிலைமையை புரிந்து கொண்டால் கமலா/


தன் தோழிகள் தன்னை கவனிக்காது போய் விட்டதை நினைத்து வருந்தினாள். அதற்குள் இருட்டத் தொடங்கி விட்டது.
இனி எப்படி தனியாகப் போவது என பயந்து கீழே இறங்காமல் அப்படியே மரத்தில் உட்கார்ந்து விட்டால் கமலா.


தோழிகள் எல்லோரும் பேசிக்கொண்டே வந்ததால் கமலாவை கவனிக்கவே இல்லை.அவள் வீடு வரும் போது தான் அவள் எங்கே ? என பார்த்து திடுக்கிட்டனர்.


எல்லோருக்கும் பயம் வந்து விட்டது.கமலா மீது அண்ணன்கள் வைத்திருக்கும் பாசம் எல்லோருக்கும் தெரியும்.எனவே தயங்கியபடி கமலா வரவில்லை என்பதை திக்கி திக்கி கூறி முடித்தார்கள்.


இவர்கள் மேல் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு இருட்டிவிட்டது தங்கை தனியாக இருப்பாளே /


அந்தப்பகுதியில் புலி, சிங்கம் நடமாடுவதாக கூறுவார்கள்.தங்கையின் நிலை என்னவோ/எதோ/என ஆறு அண்ணன்களும் புறப்பட்டார்கள்.


கடைசி அண்ணனும் வருவேன் என்று கூறவே வேண்டாம்.நீ இங்கே இரு நாங்கள் சீக்கிரம் திரும்பி விடுவோம் என்று கூறிவிட்டு தங்கையை தேடி புறப்பட்டார்கள்.


தனியாக இருந்த கமலாவிற்கு இருட்ட....இருட்ட பயத்துடன் நடுக்கமும் வந்து விட்டது.
என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டே இருந்தால்.


அப்போது அந்தப்பக்கமாக வந்த சிங்கம் அழும் குறள் கேட்டு மரத்தின் உச்சியைப் பார்த்தது.
அழகுதேவதை போல் ஒரு பெண் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆனந்தக் கூத்தாடியது.இவ்வளவு அழகான பெண்ணை இதுவரை நான் பார்க்கவே இல்லை .இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொல்ல வேண்டும் என்று எண்ணியது.


எப்படியும் நம் இருப்பிடம் கூட்டிக் கொண்டு பொய் விட வேண்டும் என்று எண்ணிய சிங்கம்,கமலாவைப் பார்த்து...,


'பெண்ணே ...பெண்ணே ..உண் கையால் ஒரு பழம் பறித்துப் போடு என்று கேட்டது.அவளும் சிங்கத்தைப் பார்த்து பயந்து ஒரு பழம் போட்டாள்.
'உண் தலையால் ஒரு பழம் போடு'', என்று மீண்டும் சிங்கம் கேட்டது.


அவளும் தலைமேல் வைத்து ஒரு பழம் போட்டாள்.


''உண் காலால் ஒரு பழம் போடு'' என்று சிங்கம் கூறியது.


அவளும் கால் இடுக்கில் வைத்து ஒரு பழம் போட்டாள்.


''உன் முடியால் ஒரு பழம் போடு'' என்றது சிங்கம். அவள் முடியில் கட்டி ஒரு பழத்தை கீழே போட்டாள்.
இதை எதிர் பார்த்த சிங்கம் அவள் முடியை பிடித்து அப்படியே இழுத்தது.


அவளும் கீழே விழுந்தாள். விழுந்ததும் பயத்தில் மயக்கமாகிவிட்டாள்.சிங்கம் தன் முதுகில் கமலாவை வைத்துக் கொண்டு தன் குகைக்கு தூக்கிச் சென்றது.


அண்ணன்கள் ஆறுபேரும் வந்து ''கமலா..கமலா' என்று தேடினார்கள்.கமலாவை காணாமல் அழுது புலம்பினார்கள்.கமலா இல்லாமலே வீடு திரும்பினார்கள்.


மீண்டும் தங்கையைத் தேடிப் போக கட்டிச் சோறு செய்து கொண்டனர்.


'''நொண்டிக்கு தவுட்டுக் களியும் கொக்கு கறியும் '' கொடுத்து கிளம்பு ஆயத்தமானார்கள்.


இதைக் கவனித்த நிறைமதியும் நானும் தங்கையைத் தேடி வருவேன் என அடம் பிடித்தான்.


இவனுடன் தொந்தரவாகப் போய் விட்டது என்று அவனையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்கள்.


ஊர் எல்லையைக் கடக்கும் வரைத் தேடியும் கமலா கிடைக்கவில்லை.காட்டுப் பகுதிக்கு வந்து விட்டார்கள்.


பசி தாங்கவில்லை.சரி சாப்பிடலாம் என சாப்பட்டை எடுத்தார்கள்.ஆறுபேர் கொண்டு வந்த சாப்பாடும் ஊசி விட்டது .
நொண்டி கொண்டு வந்த களிமட்டும் அப்படியே இருந்தது.


ஊசிப்போன சாப்பாட்டை எப்படிச் சாப்பிடுவது பசி வேறு கண்ணை இருட்டிக் கொண்டு வருகிறது.சாப்பிடவில்லை என்றால் தங்கையைத் தேடி போக முடியாமல் போய்விடும்.வேறு வழியில்லாமல் நொண்டித் தம்பியிடம் ''எங்களுக்கும் கொஞ்சம் களி கொடு ''என்று கேட்டார்கள்.


''தம்பியும் நான் களி தருகிறேன்,நான் கேட்டது எல்லாம் தரவேண்டும்.அப்படி தருவது என்றால் தான் களி தருவேன், இல்லை என்றால் தரமாட்டேன்''என்று கூறி விட்டான்.


''இருக்கும் பசியில் இவன் வேறு என முணு..முணுத்துக் கொண்டு ,சரி நீ என்ன கேட்டாலும் தருகிறோம்.எங்களுக்கு களி கொடு'' என உறுதி சொன்ன உடன்....


''நிறைமதியனும் களியும் ,கொக்கு கறியும் ''கொடுத்தான் .


சாப்பிட்ட உடன் பயணத்தை ஆரம்பித்தார்கள்.


காட்டுக்கு பக்கத்தில் ஒரு கழுதை மேய்ந்து கொண்டு இருந்தது.இதைப் பார்த்த நிறைமதியன்,''அந்த கழுதை எனக்கு வேண்டும் அண்ணா'' என்று கேட்டான்.


''கழுதைக்காரன் வந்தால் வண்ணாந் தொறையில் வைத்து அடிப்பான் வேண்டாம்'' என்றார்கள்.


''அப்பா என் தவுட்டுக் களியும், கொக்கு கறியையும் கொடுங்கள்'' என்றான்.


''இவனுடன் தொந்தரவாப் போச்சு'' என்று கழுதையைப் பிடித்து வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள்.


சிறிது தூரம் போயிருப்பார்கள்.ஒரு தென்னை மரம் சாய்ந்து கிடந்தது. அதைப் பார்த்த நிறைமதியன்,'எனக்கு இந்த மரம் வேண்டும்'' என்று அடம் பிடித்தான்.


இவ்வளவு பெரிய மரத்தை எப்படி தூக்கிச் செல்வது என்று கூறவே...


''அப்ப என தவுட்டுக் களியும் ,கொக்கு கறியையும் கொடு'' என்று கேட்டு அழ ஆரம்பித்தான்.


''இவனுடன் தொந்தரவாப் போச்சு'' என்று அலுத்துக் கொண்டு மரத்தை வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள்.


சிறிது தூரம் போகவும் பெரிய எறும்புகள் போய் கொண்டு இருந்தது.அதைப் பிடித்து தரும்படி கேட்டான் நிறைமதியன்.
வேறு வழியில்லாமல் எறும்பையும் பிடித்துக் கொடுத்தார்கள்.


சிறிது தூரம் வரவும் ஒரு குகை தெரிந்தது.அதற்குள் போய் பார்க்கலாம் என்று போய் பார்த்தார்கள்.


அங்கே தங்கை கமலா...அழுது கொண்டு இருந்தாள்.தங்கையைப் பார்த்ததும் ,'கமலா..கமலா...என்று கட்டிப்பிடித்து அழுதார்கள்.


தங்கை பயத்துடன் அண்ணா/ சிங்கம் வேட்டைக்குப் போய் இருக்கிறது.வரும் நேரம் ஆகி விட்டது.எனவே ,மேலே ஒரு குகை இருக்கிறது அதில் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள் என்று தங்கை கூறினாள்.


அண்ணன்கள் எல்லோரும் போகப் போனார்கள்.


உடனே நிறைமதியன் எனக்கு எறும்பு, கழுதை, மரம் எல்லாம் எடுத்து வரவேண்டும் இல்லை என்றால் என் ''தவுட்டுக் களியையும் கொக்கு கறியையும் ''தாங்க என்று அடம் பிடித்தான்.


''இவனுடன் தொந்தரவு தாங்க முடியவில்லை''நேரம், காலம் தெரியாமல் என்றவர்கள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மேலே போனார்கள்.


சிறிது நேரம் கழித்து சிங்கம் குகைக்கு வந்தது.


என்ன.. மனித வாடை அடிக்கிறது.என்று மோப்பம் பிடித்துக் கொண்டு வந்தது.


சிங்கத்தின் குரல் குகையில் கேட்டவுடன், எனக்கு தண்ணீர் வேண்டும் அண்ணா/ என கேட்டான் நிறைமதியன்.


கீழே சிங்கத்தின் குரல் கேட்கிறது.சிந்தாமல் தண்ணீர் குடி என எச்சரித்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தார்கள்.
'' மடமட என குடித்தவன்'' பாதி தண்ணீரை கீழே சிந்தினான்.


தண்ணீர் ஒழுகி சிங்கத்தின் மீது விழுந்தது.


'' இது என்ன?'' என சிங்கம் அதட்டியது.


''உங்களுக்காக சாப்பாடு செய்து ரசம் வைத்திருந்தேன், எலி தட்டிவிட்டிருக்கும் போல் இருக்கிறது'' என்றாள் கமலா.
இந்தப் பெண் வந்ததில் இருந்து 'உம்' என்று என்று இருந்தாளே இன்று நமக்காக ரசம் எல்லாம் வைத்ததாக சொல்கிறாளே என்ற சந்தோஷத்தில் நாக்கால் நக்கி சாப்பிட்டது சிங்கம்.


''மேலே என்ன தட்டி இருக்கும் என பார்த்து வருகிறேன்'' என்ற சிங்கம் மேலே ஏறப்போனது.


அப்போது நிறைமதியன் அண்ணன்களிடம்,''அண்ணா எனக்கு ஒரு பாட்டு வருகிறது பாடட்டுமா ?'' என்று கேட்டான்.


''முடியாது நீ பாடினால் நாம் எல்லோரும் சிங்கத்திடம் மாட்டிக் கொள்வோம்'' என்று மறுத்தனர்.


'என் கொக்கு கறியும் ,தவுட்டுக் களியும் தாங்க'' என்று காத்த ஆரம்பித்தான்.


''இவனிடம் வாங்கி சாப்பிட்டது தப்பாப் போச்சு .மெதுவா பாடித் தொலை'' என்று கூறியது தான் தாமதம்.


கட்டெறும்பை எடுத்து கழுதையின் காதில் போட்டு விட்டான்

.
எறும்பு கழுதையின் காதில் போய் கடித்து விட்டது.


அவ்வளவு தான் கழுதை கால்..கால்...என்று காத்த ஆரம்பித்து விட்டது.


இந்த சத்தத்தைக் கேட்ட சிங்கம் ,மேலே போகாமல் ,'' யார் அது?'' என்று கர்ஜித்தது.


அண்ணன்கள் எல்லோரும் பயந்து போய் நடுங்கிக் கொண்டிருந்தனர்.


நிறைமதியன் சற்றும் பயப்படாமல், N'' நான் தான் உன்னை கொல்ல வந்த எமன் '' என்று கத்தினான்.


''எங்கே என் முன் வா /தைரியம் இருந்தால் '' என்று சிங்கம் கர்ஜித்தது.


நிறைமதியன் உடனே ,''எனது ஒரு காலை மட்டும் காட்டுகிறேன் தைரியம் இருந்தால் நீ மேலே வா'' என்று கூறினான்.
பின் தென்னை மரத்தை எடுத்து கிழே இறக்கினான்.


ஒரு காலே இவ்வளவு பருமனாக இருந்தால் உடல் முழுவதும் பார்த்தால் பயங்கரமாக இருக்கும் போல் இருக்கிறது.குரல் வேறு இப்படி கத்துகிறது.


நம் உயிர் உடலில் இருக்க வேண்டுமானால் இங்குஒரு நொடி கூட இருக்கக் கூடாது தப்பித்தோம் பிழைத்தோம் என்று சிங்கம் ஓடி விட்டது.


இதைப் பார்த்துக் கொண்டிருந்த அண்ணன்களுக்கு ஒரே சந்தோசம்.


நிறைமதியனை எவ்வளவு கேவலமாக நினைத்தோம்.அவனால் அல்லவா இன்று தங்கையையும்,நம்மையும் காப்பாற்ற முடிந்தது என்று எண்ணினர்.


சரி, சிங்கம் திரும்புவதற்குள் தப்பித்து விடுவோம் என்று தம்பியை தூக்கிக் கொண்டு வண்டியில் ஏற்றினார்கள்.
தகையையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.சிங்கம் மோப்பம் பிடித்து வந்தாலும் வந்து விடும் என்று வீட்டிற்கு முன் விறகு கட்டைகளை அடுக்கி நெருப்பு மூட்ட தயாராக வைத்தார்கள்.


சிங்கம் எப்படியும் பழிவாங்க வரும் என்று காத்திருந்தார்கள்.


சிங்கமும் சிறிது நேரம் கழித்து சந்தேகப்பட்டு குகைக்கு திரும்பியதுஅங்கு கழுதையைத் தவிர வேறு யாருமில்லை.பனைமரம் கீழே கிடந்தது.எல்லாவற்றையும் பார்த்த சிங்கம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டு மோப்பம் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தது.


சிங்கம் வருவதைப் பார்த்த அண்ணன்மார்கள் நெருப்பைச் சுற்றி வைத்து விட்டு ஓடினார்கள்.
சிங்கம் அவர்களைப் பிடிக்க பாய்ந்து ஓடி வந்து நெருப்பில் விழுந்து இறந்தது.


எந்த தம்பியை நொண்டி என்று தாழ்வாக நினைத்தோமோ அந்த தம்பியின் அறிவு கூர்மையால் எல்லோரும் தப்பினோம் என அக மகிழ்ந்து தம்பி, தங்கையுடன் சந்தோசமாக இருந்தார்கள்.


''பார்த்தீர்களா சிறுவர்களே யாரையும் குறைத்துமதிப்பிடவும் கூடாது.ஊமை என்று கேலி பேசவும் கூடாது. ''


 ''திறமை எல்லோரிடமும் உண்டு என்பதை புரிந்து இருப்பீர்கள்.நீங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றவர் '' 

நேரமாகிறது அமைதியாக வீட்டுக்கு போங்கள் ''.என்றவர்,தானும் எழுந்து துண்டை தோளில் போட்டுக்கொண்டு நடையைக் கட்டினார்.
===================Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து