ஆடிக்கிருத்திகை விழா

மினசோட்டா மாகாணத்தில் மேப்பிள் குரோவ் என்ற பகுதியில் அந்தப்பகுதி மக்களுக்கு பெருமை தரும் வகையில் இந்து கோவில் ஒன்று உள்ளது.

கோவிலின் பெயரே இந்துக்கோவில் என்பது தான் சிறப்பு . மிகச்சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக்கோவிலுக்கு இங்குள்ள இந்துக்கள் வருவது வழக்கம்.

எல்லா நாட்களும் கோவில் திறந்து இருந்தாலும் பெரும்பாலும் சனி, ஞாயிற்று கிழமைகளில் தான் இங்கு வருபர்களின் எண்ணிக்கை அதிகம்.

இந்தக் கோவில் இந்தியாவிலும் அமெரிக்காவில் உள்ள அதிக வசதி படைத்தவர்கள்,தொழில் அதிபர்கள் இந்த இந்துகோவிலை உருவாக்கியவர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். 


கோவில் கட்டுமானமும் ,உள்ளே விக்கிரகங்களும் மிகவும் அருமையாக வடிவமைத்து வைத்துள்ளனர்.கோவிலைச்சுற்றியும், கிழக்கு பகுதியிலும் ஏராளமான கார்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளன.கோவிலுக்கு நுழைந்ததும் தரை தளத்தில் வரவேற்பு, உடைகள் காலணிகள்வைக்கும் இடம் அமைப்பட்டு உள்ளது. எதிர்புறம் பெரிய அளவில் ஒரு அரங்கமும், உணவு அருந்தும் இடமும் உள்ளது.


அங்கிருந்து படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றால் முதலில் உள்ளது கொடிமரம்.அதைத் தொடர்ந்து செவ்வக வடிவில் ஒரு பெரிய ஹால் போன்ற அமைப்பு அதில் இடது புறமாக சென்றால் வரிசையாக எல்லா சாமிகளுக்கும் தனித்தனியான சந்நிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

தத்தாத்ரி(பிரம்மா ) ,சரஸ்வதி,துர்கா, ஜெயின் அம்மன், மீனாட்சி, கணபதி, சிவன், முருகன், லட்சுமி, வரதராஜ பெருமாள், ஆண்டாள், ராம் மந்திர், பாலாஜி, ராதாகிருஷ்ணன், ஐயப்பன், பூரிஜெகன்னாதர், நவக்கிரகங்கள், பைரவர், விஸ்வகர்மா,சத்தியநாராயணா, ஹனுமான் என சிலைகளுடன் காட்சி அளிக்கின்றன.


சிலைகள் சில நமது ஊர் விக்கிரகங்களாகவும், சில வடபகுதியில் உள்ளது போல் பளிங்கு கற்களாலும் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 

ஒரு குறிப்பிட்ட பூசாரிகள் அங்கு எல்லா நேரங்களிலும் இருக்கிறார்கள்.உள்ளே சந்நிதானத்தில் அர்ச்சனைக்கு பழங்கள் மட்டும் கொண்ட பை விற்பனைசெய்யப்படுகிறது.


பொதுவாக இங்குள்ள முருகன் கோவிலில் ஆண்டு தோறும் மிகச்சிறந்தமுறையில் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடி வருகிறார்கள்.

 இதில் கலந்து கொள்ள ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவேண்டும். ஆடிக்கிருத்திகை விழா இங்கு ஜுலை 30 ந்தேதி கொண்டாடினார்கள்.

  


பொதுவாக முக்கிய விழாக்கள் சனி ,ஞாயிறு கிழமைகளில் தான் கொண்டாடுகிறார்கள். முக்கிய பண்டிகை விழாக்கள் வேறு நாட்களில் வந்தாலும் , அந்த விழாவையொட்டி முன்போ, அல்லது பின்போ வரும் சனி,ஞாயிறு விடுமுறை நாட்களில் கொண்டாடிவருகிறார்கள்.


பொதுவாக விடுமுறை நாட்கள் என்றால் தான் இங்கு விழாக்களில் கலந்து கொள்ள முடியும் என்றகாரணத்தால் இவ்வாறு நடத்துகிறார்கள். ஆடிக்கிருத்திகை விழா சனிக்கிழமை நடந்தது. இந்த விழாவுக்கு நாங்கள் குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டோம்.


பத்து மணிமுதலே பக்தர்கள் கலந்து கொள்ள வருகைதந்தபடி இருந்தனர். கோவில் உள்புற வளாகத்தில் அனைவரும் அமர்ந்து கந்தசஷ்டி பாடல்களை பாடிக்கொண்டு இருந்தனர்.வளாகத்தில் அமர்ந்தால் நான்கு புறமும் உள்ள சந்நிதிகளை பார்க்க முடியும்.சிலர் காவடி எடுக்க விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். விழா நடத்துபவர்கள் காவடி தருவார்கள்.


இந்த ஆண்டு ஒரு பதினைந்து பேருக்குமேல் காவடி எடுத்தார்கள். இந்தக் கோவிலுக்கு என்று தனியாக தேர் ஒன்றும் உள்ளது.தேரில் வைப்பதற்கு முருகன், வள்ளி ,தெய்வானையுடன் உற்சவமூர்த்தியாக காட்சி தந்தார் . 

கோவில் உள்புறம் பூஜைகள் முடித்து காவடியுடன், உற்சவ மூர்த்தி அங்குள்ள தேருக்கு எழுந்தருளினார்.கோவிலைச்சுற்றி வெளிப்பிரகாரமாக தேரை வடம் பிடித்து வர, தேருக்கு முன்புறம் காவடியும் ,அதற்கு முன்புறம் ஆட்டம் பாட்டத்துடன் ஆண்கள் பெண்கள் சென்றனர்.


ஏறக்குறைய ஒரு மணிநேரம் இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்தது.தமிழர்கள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நடந்து சென்றனர் 'முருகனுக்கு அரோகரா' ,'கந்தனுக்கு அரோகரா' என்ற வாசகங்கள் வானை முட்டியது .


தேர் நிலைக்கு வந்தவுடன் மீண்டும் சந்நிதிக்கு வந்து அர்ச்சனை, தீபாராதனைகள் நடந்தன.அன்றைய தினம் அங்கு வாழைஇலையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இங்கு உணவு அருந்துவதற்கு வாழைஇலை சாப்பாட்டுக்கு என்று தனியாக ஒரு கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.


வந்திருந்த அனைவரும் வாழை இலையில் உணவு அருந்துவதற்கு முன் பதிவு செய்து கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இதே போல் கார்த்திகை ,பொங்கல் உள்பட முக்கிய விழாக்கள் இங்கு நடைபெறுவது வழக்கம் என்றும் தெரிவித்தார்கள்.. கோவில் தனியாக ஒரு இடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆடிக்கிருத்திகை விழாவை அமெரிக்காவில் உள்ள முருகன் கோவிலில் கண்டு தரிசனம் செய்ததும், அங்கு தமிழ் மக்களுடன் தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டதும் முருகனின் திருவருள் என்றே மகிழ்கிறோம் .


இறைவனின் தேரை நாம் இழுத்தால் நமது வாழ்க்கை பயணத்தை அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் ஆடிக் கிருத்திகை தேரோட்ட விழாவில் திரளாக கூடியிருந்த இந்து மக்கள் 'முருகனுக்கு அரோகரா' ,'கந்தனுக்கு அரோகரா' கோசம் செவியில் இன்றும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.


முருகனுக்கு தமிழ்க்கடவுள் என்ற ஒரு பெயரும் உண்டு அதை நிலை நிறுத்தும்விதமாக தமிழர்களை ஓரிடத்தில் சந்தித்து முருகனை தரிசித்தது என்றும் மறக்கமுடியாத நிகழ்வாகும் .

Share this Post:

எழுதியவர் சந்திரன்

உங்களுடைய கருத்து