கிருஷ்ணரின் கீதை -இரண்டாம் அத்தியாயம் ஞான உபதேசம்

கிருஷ்ணரின் கீதை - பகுதி -17

இரண்டாம் அத்தியாயம் - ஞான யோகம் 

இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜுனன் ,சோகம் தீர உபாயம் கூறுங்கள் என்கிறான்.

‘அர்ஜுனா ஆத்ம தத்துவம் பற்றி கேட்பதும் ,சிந்திப்பதும் ,தியானம் செய்வதும் ஞானயோகமாகும் என்கிற கிருஷ்ணன்,உறவினர்களிடம் கொண்ட அன்பால் இரக்கப்பட்ட அர்ஜுனன் ,நீர் நிரம்பிய கலங்கிய கண்களுடன் உட்கார்ந்திருக்கும் நிலைகண்ட கிருஷ்ணன்,’’ அர்ஜுனா,தகாத சமயத்தில் உறவுமோகம் எந்த காரணத்தினால் உன்னை வந்தடைந்தது,இது கோழைத்தனமல்லவா , சான்றோர்களால் கடைப்பிடிக்கப்படாதது சொர்க்கத்தை அளிக்காது, புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தக் கூடியதல்லவா ? ‘என்கிறார் கிருஷ்ணன்.

வீரத்தாயின் மகனல்லவா,என்ற கிருஷ்ணன் ஒரு சம்பவத்தை நினைவூட்டுகிறார்.

‘’கவுரவ-பாண்டவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைப்பதற்காக தூதனாக அஸ்தினாபுரம் சென்றிருந்த போது அத்தை குந்தியைச் சந்திக்கிறார் கிருஷ்ணன்.

‘’அப்போது கிருஷ்ணன் மூலமாக வீரமிக்க செய்தி சொல்லி அனுப்புகிறாள் குந்திதேவி.அப்படிப்பட்ட வீரமிக்க தாயின் மகனல்லவா நீ ….

‘’ மாபெரும் மகாரதிகளின் உள்ளங்களை எல்லாம் நிலைகுலையச் செய்யும் உன்னுடைய ஒப்பற்ற வீரம் எங்கே ?

‘’ உன் உடலில் ரோமங்கள் சிலிர்க்கின்றன,உடல் நடுங்குகிறது.காண்டீபம் நழுவி விழுகிறது. மனம் துயரத்தில் ஆழ்ந்து விட்டது. தலை சுற்றுகிறது.இத்தகைய கோழைத்தனம் உனக்கு எவ்விதத்திலும் எக்காலத்திலும் ஒவ்வாது என்கிற கிருஷ்ணன்….

மேலும் கூறினார், ‘’போருக்கு அஞ்சுவது கோழைகளுக்கே உரியது.சூரர்கள் அறவே தவிர்க்க வேண்டியதாகிய இழிந்த பலவீனம் உன்னையொத்த மாவீரனுடைய உள்ளத்தில் தலையெடுப்பது எவ்விதத்திலும் உகந்ததன்று .ஆகவே உடனே ‘’யுத்தத்திற்காக நிமிர்ந்து எழுந்து நில், என்கிறார் கிருஷ்ணன்.
‘’மதுசூதனா, நீங்கள் பாட்டனாரான பீஷ்மருடனும் குருநாதர் துரோணருடனும் போர் புரிய தூண்டுகிறீர்களே , அவர்கள் தைத்யர்களுமல்ல ,சத்ருக்களும் இல்லை.

அவர்கள் பூசிக்கத்தக்கவர்கள், உங்கள் இயல்பான குணத்துக்கு விரோதமாக ‘’இவர்களை எதிர்த்து யுத்தம் செய்'’ என்கிறீர்களே ,இந்தக் கொடிய பாவத்தை நான் எப்படிச் செய்வேன்?’’ என கேட்டான் அர்ஜுனன்.


பெரியோர்களைக் கொல்வது முற்றிலும் முறையற்றது.அவ்வாறு அவர்களைக் கொன்று பெறப் போவது என்ன?

மோட்சமும் இல்லை, தர்மமும் இல்லை, இவ்வுலகத்தில் பெறக்கூடிய செல்வமும்,அற்ப காம வடிவான போகங்கள் தானே? இவற்றின் மதிப்பு பெரியோர்கள் உயிரோடு இருப்பதற்கு ஈடாகாது .

போகங்கள் கூட பெரியோர்களைக் கொன்று பெறப்படுவதால் அவை ரத்தக்கறை படிந்தவை.ஆகவே அந்த போகங்களைப் பெறுவதற்காகப் பெரியோரைக் கொல்வது ஒரு போதும் நியாயமில்லை.

இச்செயல் செய்வதற்கு பிச்சை எடுப்பதால் கிடைக்கும் அன்னத்தைக் கூட உண்ணலாம் என்கிறான் அர்ஜுனன்.

சத்ரியர்கள் பிச்சை எடுக்கக் கூடாது .அதை உண்டு உடலை வளர்க்கக் கூடாது ,என்ற கட்டுப்பாடு இருந்தாலும் பெரியோர்களைக் கொன்று ராஜ்ய போகத்தை அனுபவிப்பதைக் காட்டிலும், இந்த நிந்திக்கத்தக்க செயல் கூட நல்லது தான் என்கின்ற அர்ஜுனன், நாம் என்ன செய்தால் நன்மை அடைவோம்,யுத்தம் செய்வதா ?யுத்தத்தில் இருந்து விலகுவதா ? இவ்விசயத்தை தீர்மானிக்க முடியவில்லை.

யுத்தம் செய்வதோ சத்ரிய தர்மம்.ஆனால் அதன் பயனாக விளைவதோ குலநாசம்.குலநாசம் பெரிய தோஷம் என்று கூறப்படுகிறது, என்ன செய்யலாம்..

யுத்தத்தில் நாமே ஜெயிப்போம் என்று வைத்துக் கொண்டாலும் கூட யுத்தம் செய்வது சரி என்று தோன்றவில்லை.

எவர்களைக் கொன்று நாம் வாழ விரும்பவில்லையோ, அந்த நமது சகோதரர்கள்,சுற்றத்தினர் அல்லவா இறப்பதற்காக நம் முன்னே நிற்கிறார்கள்.

‘நாம் வெற்றி பெற்றாலும் ,அந்த வெற்றி இவர்களைக் கொன்று தானே கிடைக்கும் ? எனவே நாம் எதைச் செய்தால் உசிதமாகும் என்பதை நிர்ணயிக்க முடியவில்லையே ?’’ என மனம் குழம்பி தவித்த அர்ஜுனன்,தர்மவிசயத்தில் குழம்பிய மனதுடையவனும் அதனால், கோழைத்தனத்தினாலும் , இருக்கும் நான் உங்களிடம் கேட்பதென்ன வென்றால் ,எந்த சாதனை உறுதியாக மேன்மை தர வல்லதோ அதை எனக்குக் கூறுங்கள்.நான் உங்கள் சீடன்,உங்களை சரணடைந்த எனக்கு அறிவுரை கூறுங்கள்'’என பணிகிறான், அர்ஜுனன் .

போதுமான செல்வ வசதி படைத்த ஒருவன் செல்வத்தில் மிகுந்த பற்றுக் கொண்டு பேராசையுடன் தானமளிக்கும் போதும் சுகபோகங்களில் பற்றுக் கொண்டு நியாயமான செலவுகள் செய்யும் போதும் ஒரு காசு கூட செலவழிக்க மனமில்லாமல் இருப்பவன் கருமி.

இது போல் பெரியோர், முன்னோர் மனித வாழ்வில் சாஸ்திர சம்பிரதாயங்களை கூறி இருப்பதை மறந்து சுகபோகங்களில் தன் வாழ்வை வீணடிக்கும் அறிவிலிகளும் ஒரு வகையில் கருமி என்பார்கள்.

ஆனால், இந்த இரண்டும் அல்லாத இரக்க சிந்தனையும்,தயாள குணமும் கொண்ட அர்ஜுனன் கருமி போல் சுருங்கக் காரணம்.

அர்ஜுனன் ஒரு இலட்சிய சத்ரியன் இயற்கையாகவே, வீரன், சூரன், கோழைத்தனம் கிடையாது.உறவினர்கள் மேல் உள்ள பற்றால் எது தர்மம் ?எது அதர்மம் என முடிவு செய்ய முடியாமல் உள்ளம் மயங்கியதால் …

உடல் நடுங்கி அங்கங்கள் வெலவெலத்து வாய் உலர்ந்து உடலில் எரிச்சலும்,நடுக்கமும், ஏற்பட்டு மனம் இயற்கைக்கு விரோதமான இந்த செயலால் கருமி போல் மன உளைச்சலுக்கு ஆட்பட்டான் அர்ஜுனன்.

அந்த நிலையில் தான் கிருஷ்ணனின் பாதங்களை சரணடைந்தான், அர்ஜுனன்.

கிருஷ்ணனுடன் உண்பது ,உறங்குவது, செல்வது எல்லாம் சமமாக இருந்தாலும் கிருஷ்ணனுக்கு சமமான நிலையில் தான் இல்லை என்ற உணர்வு அர்ஜுனனுக்கு வருகிறது.

சமமாகப் பழகினால் ஆலோசனை கிடைக்கலாம். உபதேசம் கிடைக்காது.தூண்டுதல் பெறலாம். இப்படிச் செய் என ஆணை கிடைக்காது.இப்போது இருக்கும் நிலையில் தூண்டுதலோ ,அறிவுரையோ போதாது.

‘’இப்படிச் செய்'’ என்று ஆணையிட வேண்டும்.இது தான் உனக்கு உகந்தது என்று வழிகாட்ட வேண்டும்.எனது, சோக, மோகங்களை களைந்து மங்கள நிலையை அடையச் செய்ய வேண்டும் அதற்குத் தேவை ஒரு குரு.

கிருஷ்ணனைக் காட்டிலும் சிறந்த குருநாதரை வேறு எங்கு தேடுவது.குருநாதரின் அமுத மழையை ,சீடன் என்ற வயலில் தானே பெறமுடியும்.எனவே ,தான் அர்ஜுனன் ,கிருஷ்ணா , நான் உனது சீடன் என்று சரண் அடைந்தான்.

குருவிடம் உபதேசம் பெற்றுக் கொண்டு தன் திறமையில் செருக்குக் கொள்பவருக்கோ, குருவைத் தவிர மற்றொருவரிடம் விசுவாசம் கொள்பவருக்கோ குரு கிருபையின் உண்மையான ஆசீர்வாதம் கிடைக்காது

                                                                                         -கீதை தொடரும்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து