சுதந்திரத்தை போற்றுவோம்.

சுதந்திரத்தை போற்றுவோம்.
=====================


இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகிவிட்டன.1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது.


இன்றைய இந்தியர்களில் பலர் சுதந்திரமாக நமது தாய்மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்முதல் காரணம், நமது தேசிய தலைவர்களும்,விடுதலை போராட்ட வீரர்களுமே.


இதற்கு வித்திட்டவர்களை,போராடியவர்களை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.ஏன் என்றால் நேற்று நடந்ததை இன்று மறந்துவிடும் நிலையில் வாழ்பவர்கள் மனிதர்கள். எனவே நமது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்கள் போராடி பெற்றுத்தந்த சுதந்திரத்தை நமது இளைய தலைமுறையினருக்கு நினைவூட்டவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.


நமது சுதந்திரத்திற்காகப் போராடிய பலர் இன்றும் பல இடங்களில் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் சொல்லவேண்டியது நமது கடமையாகும்.


சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய அளவில் சிறந்த வளர்ச்சி பெற்றுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தியா இப்போது ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவு பெற்று சிறந்து விளங்குவதே இதற்கு சான்றாகும். நமக்கு தேவையான உணவு , உடை உறைவிடம், போன்றவற்றில் நாம் மெச்சத் தகுந்த அளவில் முன்னேறி வருகிறோம்.சிந்தனை திறனும்,அறிவாற்றலும் மிகுந்த எழுச்சி மிக்க இளைஞர்கள் இருப்பதே இந்தியாவின் மிகப்பெரிய சொத்து .


அத்துடன் அறிவியல், தொழில் நுட்பம் போன்றவைகளிலும் நாம் சிறந்த முறையில் உலகம் போற்றும் அளவுக்கு உயர்ந்து வருகிறோம். இந்த நன்னாளில் நாம் நாட்டுக்கு உண்மையாகவும், நேர்மையானவர்களாகவும் நடந்து கொண்டால் நம் நாடு விரைவில் வல்லரசாக மாறி விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.அதை ஒவ்வொரு இந்தியனும் தனது கடமையாக உளமார தேசியக்கொடி முன்பு உறுதி ஏற்றுக்கொள்ளவேண்டும்


சுதந்திர தின நாளில் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து, உரையாற்றுவார். இவ்விழாவில், முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் எனப் பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஒவ்வொரு பிரஜைக்கும் முக்கியமான தினம் என்பதால், அனைவரும் தங்களது வாழ்த்துக்களை, இந்நாளில் தங்களது பிரியமானவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.


மாநிலத்தலைநகரங்களில் முதல்வர்கள் கொடிஏற்றி சிறப்புக்கள் செய்வார்கள்.தலைவர்கள், ஆட்சியாளர்கள் தேசியக் கொடியேற்றி ஏற்றுவார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்படும் .


தேசபக்தியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி, தேசப்பற்றை வளர்ப்போம்! வளர்க இந்தியா/ஜெய்ஹிந்த்./

Share this Post:

எழுதியவர் சந்திரன்

உங்களுடைய கருத்து