தமிழர்களின் அடையாளம் பொங்கல் விழா

தை முதல் நாள் அன்று  தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா பொங்கல் விழாவாகும் .இது  மகரத்திருநாளாக உலகில் உள்ள  தமிழர்களால் சமயங்கள் கடந்து கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகவும் இதை கொண்டாடுகிறார்கள்.

மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் பொங்கல் பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா முன் காலங்களில் இந்திர விழா என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. நல்ல மழை பொழியவும், நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர். பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. 

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் நன்கு விளைந்த நெல்லை வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.

உழவுத் தொழிலுக்கு,உறுதுணையாக விளங்கும் மாடுகளுக்கு  நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!

பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். 
இவ்வளவு பெருமை வாய்ந்த பொங்கல் திருநாள் இப்போது கிராமங்களில் கூட மக்கள்  சம்பிரதாயத்துக்காக கொண்டாடும் நிலையாக மாறிவிட்டது .அதற்கு காரணம் மக்கள் விவசாயம் செய்வதற்கான பருவமழை சரியான தருணங்களில் பெய்யாமல் பொய்த்துப்போனது.

விவசாய பணிகளுக்காக தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைச்சலில் வெற்றிபெறவும், தன்னிறைவு பெறவும்   முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மகிழ்ச்சியும் , துள்ளலும் குறைந்து போய் விட்டது. பொங்கல் திருநாளையொட்டி  பட்டி தொட்டிகளில் மஞ்சு விரட்டும் எனும் மகிழ்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.
இப்போது அதற்கும் தடை ஏற்பட்டுவிட்டதால் இயல்பாகவே மக்கள் மனதில் பழைய உற்சாகம் குன்றிப்போய்விட்டது.கிராம மக்கள் சோர்ந்து போய் விட்டனர். எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கடன்தொல்லைகளுக்கு ஆளாகி வருத்தம் அடைந்து உள்ளனர்.

இந்த  தைப்புத்தாண்டில் இருந்து மழை பொழியவும் ,மகிழ்ச்சி நிறையவும் ,உழவும் ,தொழிலும் செழிக்கவும், ,கிராமங்கள் தோறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடையவும் , விவசாயிகளுக்கு அனைத்து மக்களும் உறுதுணையாக இருக்க சபதம் எடுப்போம்.  

பொங்கலோ பொங்கல் என்ற மகிழ்ச்சி குரல்; இன்னும் பலமாக எங்கும் ஒலிக்கட்டும் . 
Share this Post:

எழுதியவர் சந்திரன்

உங்களுடைய கருத்து