''திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் ''

பழமொழிக் கதைகள் ''திணை விதைத்தவன் திணை அறுப்பான்
வினை விதைத்தவன் வினை அறுப்பான் ''
====================ஒரு ஊரில் குப்புவும்,சுப்புவும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.குணங்கள் மாறுபட்டு இருந்தாலும் ,நட்புடன் இருந்தார்கள்.


குப்பு பூச்சி, பாம்பு, இவற்றை கண்டால் அடித்துக் கொன்று விடுவான்.அதில் அவனுக்கு அத்தனை சந்தோசம்.


சுப்பு உயிர்களைக் கொல்லக் கூடாது.உயிர்களிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்ற கொள்கை உடையவன் சுப்பு.
குப்புவிடம் எத்தனையோ முறை உயிர்களைக் கொல்லக் கூடாது என்று எடுத்துச் சொல்லியும் அவன் செவிகளில் இவை விழவில்லை.
இருவரையும் சோதிக்கும் நாள் ஒன்று வந்தது.


குளத்தில் இருவரும் குளித்துக் கொண்டு இருந்தார்கள். குளத்தில் தண்ணீர்ப் பாம்பு ஒன்று வருவதை கண்ட சுப்பு கரைக்கு வந்துவிட்டான்.


குப்புவோ..நீந்திப் போய் தண்ணீர்ப் பாம்பின் வாலைப் பிடித்து தலையைச் சுற்றி ..சுற்றி... அடித்தான்.இதை எதிர் பார்க்காத பாம்பு சீறியது.குப்பு விடவில்லை.நீந்தி கரைக்கு வந்து தரையில் சுழற்றி ...சுழற்றி ...அடித்துக் கொன்று விட்டான்.


இதைப் பார்த்த சுப்பு மிகவும் வருத்தப்பட்டான். மேலும் ஒரு உயிரை தேவையில்லாமல் கொன்று விட்டாயே என வருத்தப்பட்டு தனது வீட்டிற்குச் சென்று விட்டான். குப்புவும் வீட்டுக்கு கிளம்பினான்.


கொன்ற பாம்பின் துணைப் பாம்பு இதைப் பார்த்துக் கொண்டு இருந்ததை இருவருமே கவனிக்க வில்லை.
மறுநாள் குப்பு தூங்கிக் கொண்டு இருந்த போது ...புஸ்..புஸ்.... என சத்தம் கேட்டு கண் விழித்துப் பார்த்தான்.
அவன் எதிரில் பாம்பு சீறியபடி நிற்பது கண்டு நிலை குலைந்து போனான்.


உடல் எல்லாம் வேர்த்து தண்ணியாக கொட்டியது. பயத்தில் கத்தக் கூட திறன் இல்லாமல் அம்மா...அம்மா.....என கத்தினான். அந்த சத்தம் அவனுக்கு மட்டுமே கேட்டது.


தனது சக்தியை முழுக்க பயன்படுத்தி அம்மா...என கத்தியவன் தன் நினைவு மறந்து அப்படியே மயக்கமானான்.
தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளியவைத்த அவன் அம்மா ... என்ன உடம்புக்கு என்ன செய்கிறது ,என அன்புடன் விசாரித்தாள்.


அவனைச் சுற்றி அப்பா, அம்மா,தம்பி,தங்கை அனைவரும் கவலை நிறைந்த முகத்துடன் சூழ்ந்து கொண்டு இருந்தார்கள்.


சுற்றி தன் கண்களை சுழலவிட்ட குப்பு, பாம்பு இல்லாதது கண்டு நிம்மதி மூச்சு விட்டு,தன் முன் நின்ற பாம்பு நினைவா, கனவா என யோசித்தான்.
எதுவாக இருந்தால் என்ன நம் உயிர் எவ்வளவு முக்கியம் என நான் பயந்தேன். இது போல் தானே ஒவ்வொரு உயிரும் நினைக்கும். இதை புரிந்து கொள்ளாமல் எத்தனை உயிரை கொன்றேன்.இனி எந்த உயிரையும் கொல்ல மாட்டேன் என உறுதி எடுத்துக் கொண்டான் மனதிற்குள் குப்பு.


''திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்'' என்பது எவ்வளவு உண்மை.


சுப்பு நிம்மதியாக தூங்கி எழுந்து தனது பணிகளைச் செய்து கொண்டு இருந்தான்.,

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து