உணவே மருந்து -சித்தவைத்தியம் - பகுதி 1

சித்த மருத்துவம் தோன்றிய காலம் என காலத்தை கூற முடியாது.புல்,பூண்டுகள் முளைத்த காலமே
தமிழ் மருத்துவ காலம்.சித்த மருத்துவத்தின் மொழி தமிழ்.திசை தெற்கு,காது வழியாக கேட்டு கை
வைத்தியமாகச் செய்யப்படுவதே சித்த மருத்துவமாகும். தமிழ் மருத்துவம், வீட்டு வைத்தியம் என்று
அழைப்பார்கள்.

தமிழ் மண்ணுக்கு ஒரு அற்புதமான சக்தி உண்டு.மண்ணில் முளைக்கும் செடி,கொடிகள் அனைத்திற்கும்
ஒரு மருத்துவ குணம் உண்டு.காய்கறி ஆகட்டும், கீரை வகைகள் ஆகட்டும், சமயலுக்கு பயன்படுத்தும்
மளிகை சாமான்கள் ஆகிய மஞ்சள் ,இஞ்சி,புண்டு,கடுகு,மிளகு,சீரகம் சுக்கு,வெந்தயம்,வெங்காயம் என
எல்லாவற்றிலும்மருத்துவ குணம் உண்டு.

எண்ணெய் என எடுத்துக்கொண்டால் கடலை,எள்ளு,தேங்காய்,வேம்பு, இலுப்பை,சூரியகாந்தி என எல்லாவற்றிற்கும் மருத்துவ குணம் உண்டு.பால்,பாலில் இருந்து கிடைக்கும் தயிர்,மூர்,வெண்ணெய்,
நெய் என அனைத்தும் மருத்துவ குணமுடையது.

தமிழர்களின் உணவுக்கு மருத்துவ குணம் இருப்பதால் எளிதாக மருத்துவம் செய்து குணப்படுத்திக் கொள்ளும்
முறையும் இருந்தது.மருத்துவத்திகாக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது .
நாகரீக வளர்ச்சி காரணமாக சித்த மருத்துவத்தின் பலனை அதிகம் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற நிலையில் காலத்தை ஓட்டிக்கொண்டு
இருக்கிறார்கள்.இயற்கையை மறந்து செயற்கை முறையில் சென்றதால் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருக்கக்
கூடிய “மைகேல் ஜாக்சன்”வலி நிவாரணி மாத்திரைகளுக்கு அடிமையாகி தன் உயிர் துறந்து எத்தனையோ
ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திவிட்டார்.

இறைவன் படைப்புகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தால் அற்புதமாக இருக்கும்.நம் முன்னோர்களை
மட்டும் அலட்சியப் படுத்தவில்லை,அவர்களை விட்டுச் சென்ற சித்த மருத்துவத்தையும் தான்.செலவே
இல்லாமல் சமையல் அறையில் இருக்கும் பொருள்களை வைத்தே நோய் போக்கக்கூடிய முறை
தெரியாமல் ஐந்தாயிரம் ,பத்தாயிரம் என செலவு செய்து சேமிப்பு இல்லாமல்,கடன் வாங்கி வட்டிகட்டி
இப்படி துன்பப்படும் மக்கள் தான் அதிகம்.சித்தர்கள் இயற்கையோடு பல ஆண்டுகள் வாழ்ந்து சமாதியாகி இருக்கிறார்கள்.அவர்கள் இன்றும் இவ்வுலகிற்கு
நன்மைகள் செய்கிறார்கள் என்பதை உணர்ந்தவர்கள் அறியலாம்.மறுப்பவர்கள் அறியமுடியாது.
:சித்த மருத்துவம்
காலத்தால் முந்தியது
கையாள்வதில் சிறந்தது
செலவால் குறைந்தது
பலனால் மிகுந்தது
தகுதியால் உயர்ந்தது’ என்றால் அது மிகையல்ல.

நமத மூதாதையர்கள் கையாண்ட மருத்துவம் வழி……வழியாக வந்து கொண்டே இருக்கிறது .நாகரீகம்
என்ற முகத்தால் மறையக்கூடாது.மேகம் கலைவது போல் மோகமும் கலைந்துவிடும்.அப்போது சித்த
மருத்துவத்தின் மகத்துவம், மருத்துவமாக நிலைக்கும்.

இன்று வீட்டில் பொருளாதார நிலை கட்டுக்குள் அடங்காமல் நிலைகுலைந்து போகக் காரணம் மருத்துவச்
செலவுகளும் ஒன்று என்று சொல்லத்தான் வேண்டும்.இயற்கைக்கு மாறாக நடக்கும் போதுஎல்ல்லாம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாக தவறியதே இல்லை.

இன்று பெண்கள் வலி வந்து குழந்தை பெற்றுக் கொள்வதில்லை.இயற்கையாக நடப்பதற்குக் கூட பொறுமை
இன்றி கர்ப்பப்பையை எடுத்து விடுகிறார்கள்.எல்லாம் அவசரம் எதற்காக இந்த ஓட்டம்.ஒரு நிமிடம்
சிந்திப்போம்.சந்தோசத்தை தொலைத்து எதைப் பெறப்போகிறோம் மருந்து வேண்டாம் ,மாத்திரை வேண்டாம்,
வீட்டில் இருக்கும் உணவில் உள்ள மருத்துவக் குணத்தை தெரிந்து கொண்டு உண்டாலே போதும்.
‘வைத்தியருக்கு கொடுப்பதை
வணிகருக்கு கொடு ‘ என்பார்கள்.நம் முன்னோர்கள் வணிகப் பொருளை வைத்தியம் ஆக்கிய விதத்தைப் பார்ப்போமா/அதற்கு முன் சில
மருத்துவப் பாடல்களைப் பார்ப்போம்.


“வாழ்வதற்காகச் சாப்பிடுங்கள்
சாப்பிடுவதற்காக வாழவேண்டாம்”

“உடலுக்கு அழகு உழைப்பு
உள்ளத்திற்கு அழகு நல்லுணர்வு ”

தவறான ஆசைகள் நோயிற்கு காரணம்
ஒழுங்கான வாழ்வே ஆரோக்கியம் ”

“நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம்” -பழமொழி

“உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது”
முது மொழிக் காஞ்சியில் கூடலூர் கிழார் கூறுகிறார்.

“இழிவு அறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
கழிபேர் இரையாண்கண் நோய்”

சிற்றுண்டி,பேருண்டிகளை அடிக்கடி விரும்பி உண்பவர்க்கு நீரிழிவு போன்ற தீராத நோய்கள் எளிதில்
வரும் என்கிறார்.

“மீ தூண் விரும்பேல்”
“நுண்மை நுகரேல்”
“நோய்க்கு இடம் கொடேல்”

“மீ தூண் விரும்பேல்”
“நுண்மை நுகரேல்”
“நோய்க்கு இடம் கொடேல்”

என்று ஆத்திச் சூடியில் ஔவையார் கூறியுள்ளார்.

வடை,முறுக்கு போன்ற திண்பண்டங்களைவிரும்பி அடிக்கடி உண்ணும்போது நோயுண்டாகும்.அளவு அறிந்து
உண்ணும்போது நோய்க்கு இடம் கொடுக்க அவசியம் இல்லை.எனவே ,அதிகம் உணவை உண்டு அவதிப்படாமல்
அளவுடன் உண்டு நோய்க்கு இடம் கொடுக்காமல் வாழச்சொல்கிறார் ஔவையார்.

மேலும் குழந்தைகள் உண்டபின் வைப்பது, மீதியாகி வீணாக கூடாதே என்று சாப்பிடுவது இப்படி பல
காரணங்களினால் பெண்கள் உணவு வகைகளை தேவை இல்லாமல் சாப்பிட நேரிடும்.அதனால் உடல்
பருத்து அழகுகெட்டு காட்சி தருவார்கள்.உடல் அழகைபேணி காக்க வேண்டும் என்று எண்ணிய ஔவையார்,

“உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு”
“பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்”

என்று கொன்றை வேந்தனில் கூறுகிறார் ஔவையார்.

“அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
தயக்க துவரப் பசித்து ”

காலம் அறிந்து அளவோடு பசித்த பின் உணவு உண்டு வந்தால் மருந்தின்றி நீண்ட நாள் வாழலாம் என்று
வள்ளுவரும் கூறியுள்ளார்.

இதே கருத்தை தேரையார் வாகடம் என்னும் நூலில்

“மூலஞ்சேர் கறி நுகரோம் மூத்தயி ருண்போம்
முன்னைநாள் செய்தகறி அமுதெனிம் அருந்தோம்
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்
நமனார்க்கிங் கேதுசுவை நாமிருக்கு மிடத்தே”

எனக் கூறியுள்ளார் .

வாழ்வின் சுழற்சி

புவியில் பூக்கும் பூக்கள் எல்லாம்
பூசைக்கு உகந்ததல்ல
மனதில் பிறக்கும் ஆசைகள் எல்லாம்
வாழ்விற்கு சிறந்ததல்ல

கொட்டும் மழை நீரெல்லாம்
பயன் அடைவதில்லை
பிறக்கும் மனிதர் எல்லோரும்
உயர்ந்த எண்ணம் கொள்வதில்லை

இடியும் மின்னலும் வானுக்கு
மாறி வருவதுண்டு
இன்பமும் துன்பமும் வாழ்வுக்கு
மாறி வருவதுண்டு

பருவகால சுழற்சி போல்
வாழ்வின் சுழற்சி அறிந்தால்
இயற்கை யெல்லாம் இன்பமாய்
இனிய வாழ்வு நம்கையில்.

Share this Post:

எழுதியவர் மல்லிகா

உங்களுடைய கருத்து