கேசவா! ‘செய்யத்தக்கது, செய்யத் தகாதது என்ற தீர்மானம் செய்வதற்கு சாஸ்திரம் தான் சான்று’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற ஒழுங்கு முறைகள் வேதங்களிலும், வேதங்களின் ஆதாரத்தில் தோன்றிய புராண, இதிகாசங்களிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்படுகின்றன.
ஆகவே, இந்த விசயத்தில் மனிதன் தன் மனம் போனபடி நடக்காமல் சாஸ்திரங்களின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும். சாஸ்திரங்களில் விதித்தவற்றைச் செய்தே தீர வேண்டும். தடை செய்தவற்றைச் செய்யக்கூடாது என்கிறார்.
கேசவா! ‘நீ சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட கடமையை ஆற்றக் கடவாய்’ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! சாஸ்திரங்களில் கூறப்பட்டதை மதித்து கடமைகளை முறைப்படி ஆற்ற வேண்டும். பற்று அற்ற நிலையில் செய்ய வேண்டும். தடுக்கப்பட்டவற்றைச் செய்யக்கூடாது. இவ்விதம் கடைபிடித்தால் என்னை அடைய உதவும். ஆகவேதான், கடமையை சாஸ்திர முறைப்படி செய் என்கிறார் கிருஷ்ணன்.
பதினாறாவது அத்தியாயம் நிறைவுற்றது.
பதினேழாவது அத்தியாயம்.
சிரத்தைகளின் உபாய யோகம்.
இந்தப் பதினேழாவது அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சிரத்தையில் உறுதி பெற்றவர்களின் நிலை பற்றிக் கேட்கிறான் அர்ச்சுனன்.
மூன்று விதமான சிரத்தைகளைப் பற்றியும், சிரத்தைக் கேற்ப அமையும் மனிதனின் செயலைப் பற்றியும் கூறுகிறார்.
பூஜை, யக்ஞம், தவம் முதலியவற்றில் சிரத்தைக்கு உள்ள தொடர்பைக் குறிப்பிட்டுக் கடைசியில் சிரத்தை இல்லாதவர்களின் செயல்கள் வீண் என்று கூறி முடிக்கிறார்.
இவ்விதம் இந்த அத்தியாயத்தில் மூன்று வித சிரத்தைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கூறுவதால் இதற்கு ‘சிரத்தைகளின் உபாய யோகம்’ என்று பெயர்.