கேசவா! சகுன தியானம் செய்யும் போது எந்தக் கடவுளை நினைத்து தியானிக்க வேண்டும் என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்
அர்ச்சுனா! பகவானுடைய கல்யாண குணங்கள் பிரபாவங்கள் தத்துவம் ரகசியம் இவற்றை அறிந்து மனிதன் தன்னுடைய விருப்பம் இயல்பு தகுதிக்கேற்றவாறு
எந்த உருவத்தில் எளிதாக மனம் ஈடுபடுமோ அந்த உருவத்தை நினைத்து தியானம் செய்யலாம்.
பகவான் ஒருவர் ஆயினும், எல்லா உருவங்களிலும் அவரே தான் நிறைந்திருக்கிறார். எனவே, ஒரு உருவத்தில் மட்டும் குறிப்பிட்டு தியானம் செய்யப்படுகிறது என என்ன வேண்டாம் என்ற கிருஷ்ணன்.
அர்ச்சுனா முடிவற்றதும் எல்லையற்றதும் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்ததுமான சம பாவனை, அமைதி, இரக்கம், அன்பு, பொறுமை, இனிமை, வாக்சாதுதூர்யம், ஆளுமை, பெருந்தன்மை, நட்பு முதலியவை பகவானுடைய கல்யாண குணங்கள் ஆகும்.
ஆற்றல், ஐஸ்வரியம், ஆன்மீக ஒளி, சக்தி, சாமர்த்தியம், நிகழ முடியாததையும் நிகழ்த்தி காட்டுதல் முதலியன பிரபாவங்களாகும்.
நீராவி, மேகம், மழைத்துளிகள், பனி முதலியன எல்லாம் தண்ணீர் தானே! அதுபோல சகுண, நிர்குண, சாகார, நிராகார, சட,சேதன, அசைவன, அசையாதன, சத், அசத் முதலியவை எல்லாமே பகவான் ஆவான் என்பதே தத்துவம் ஆகும்.
பகவானைக் காண்பது, அவருடன் உரையாடுவது, அவரைத் தொடுவது, சிந்திப்பது, கீர்த்தனம் செய்வது, அர்ச்சனை செய்வது, வணங்குவது, துதிகளால் போற்றுவது இவற்றால் பாவிகளைக் கூட மிகவும் புனிதர்களாக ஆக்கிவிடும்.
பிறப்பற்ற, அழிவில்லாத சர்வலோக மகேஸ்வரனான எல்லாம் அறிந்த முழுமையான சக்தி படைத்தவரும், எல்லோரிடமும் சமபாவானையோடு இருக்கிறவருமான பகவானே தெய்வீக அவதாரத்தை ஏற்று வெளிப்படுகிறார்.
தெய்வீக குணங்கள் பிறபாவங்கள், தத்துவம் முதலியன சிந்தனைக்கு எட்டாதவை, எல்லையற்றவை, தெய்வீகமானவை அவரைப்பற்றி அவரைத் தவிர வேறு யாரும் அறியக் கூட முடியாது. இது இறை ரகசியமாகும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! மனதைத் தன் வசப்படுத்திய யோகி ஆத்மாவை இடையறாது பரமேஸ்வரனான என்னுடைய சுயரூபத்தில் இணைத்துக் கொண்டு என்னிடம் விளங்குகின்ற பரமானந்தத்தின் பெருநிலையாகிய அமைதியை அடைகிறான்.
இந்த யோகம் மிகுதியாக உண்பவற்கு கைகூடாது, அறவே உண்ணாமல் இருப்பவனுக்கும் கைகூடாது,மிகுதியாக உறங்கும் இயல்புடைய வனுக்கும் கைகூடாது,
எப்போதும் விழித்துக் கொண்டே இருப்பவனுக்கும் கை கூடாது.
அதாவது, அள்ளி அள்ளி அதிகமாக சாப்பிடுவதால் தூக்கமும் சோம்பலம் அதிகரிக்கும். ஜீரண சக்தி குறையும் பலவித நோய்கள் உண்டாகும். அதனால், சோர்வு உண்டாகும்.
உண்ணாமல் இருந்தால் ஆசனத்தில் நிலைத்து உட்கார்ந்து இருக்க முடியாது. பரமாத்மாவிடம் மனதைச் செலுத்த முடியாது.
ஆகவே, தியான யோகி கட்டாயம் எளிதான சீரணிக்கும் அளவு உண்ண வேண்டும். அதிகமாக உண்பதும் கூடாது, உண்ணாமல் இருப்பதும் கூடாது என்கிறார் கிருஷ்ணன்.