கேசவா! மோகம் அடைவதில்லை என்பதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! எவர் இந்த இரண்டு மார்க்கங்களையும் தத்துவரீதியாக அறிந்து கொண்டு, எல்லா லோகங்களினுடைய போகங்களும் அற்பமானவை, அழியக் கூடியவை என்று உணர்ந்து பரமாத்மாவை அடையவும், சாதனங்களிலேயே ஈடுபடுகிறவர்களே மோகம் அடையாதவர்கள் என விவரிக்கிறார்.
அர்ச்சுனா! நீ இதற்கு தகுதி பெற்றவன். எனவே, நீயும் எப்பொழுதும் யோகத்தில் ஈடுபட்டவனாக இரு. பகுதி பிரதானமான கர்ம யோகத்தில் சிரத்தையுடன் ஈடுபடுவாயாக என்கிறான் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! மனிதப் பிறவி குறுகிய காலத்தது. எப்பொழுது மரணம் நேரும் என்பது தெரியாது.
தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் சாதனையில் ஈடுபடுத்த முயற்சி செய்ய வேண்டும்.
அவ்வாறு முயற்சி செய்யாவிட்டால், சாதனையின் இடை இடையே தடைபடும்.
தொடராமல் விட்டால் மறுபடியும் பிறக்க நேரிடும். ஆகவே, பகவானை அடைவதற்காக மனிதன் எப்பொழுதும் இடைவிடாது சாதனை புரிய வேண்டும்.
யோகி ஆனவன் இந்த ரகசியத்தை தத்துவ ரீதியாக அறிந்து வேதங்களை அத்தியாயனம் செய்வதிலும், யாகங்களைச் செய்வதிலும், தவம் செய்வதிலும், தானங்கள் செய்வதிலும், புண்ணியத்தின் பயன் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த எல்லாவற்றையுமே ஐயம் இன்றி கடந்து சென்று பரமபதத்தை அடைகிறான். எனக் கூறுகிறார் கிருஷ்ணன்.
கேசவா! யோகி என்று யாரை குறிப்பிடுகிறோம் என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! பகவானை அடையக்கூடிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்து சிரத்தையுடனும், பக்தியுடனும் இடைவிடாது ஈடுபட்ட மனிதன் யோகி எனப்படுவான் என்கிறார்.
இங்க வேதம், யக்ஞம்,தவம், தானம் என்ற சொற்களுக்கு என்ன பொருள்? புண்ணியப் பயன் அவற்றை கடந்து செல்வது இவற்றை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! இங்கு ‘வேதம்’ என்றால் அங்கங்களுடன் கூடிய நான்கு வேதங்களும், அவற்றை அடி ஒற்றிச் சொல்லும் சாஸ்திரங்களும் ஆகும்.
‘யக்ஞம்’ என்றால் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட முறைப்படி செய்யப்படுகின்ற பூஜை, ஹோமம் முதலியன ஆகும்.
‘தவம்’ என்றால் விரதம், உபவாசம், புலனடக்கம், சுயதர்மத்தைக் கடைபிடிப்பது போன்ற ஒழுக்கங்கள் ஆகும்.
‘தானம்’ என்ற சொல் அன்னதானம், கல்வி வழங்குதல், நிலம் வழங்குதல், கண் தானம், ரத்ததானம்,உடல் உறுப்பு தானம் இப்படி கொடுப்பது தானம் ஆகும்.
சாஸ்திர வேதங்களை கற்பது, பூஜைகள் செய்வது, இறைவனை நினைப்பது, விரதம் இருப்பது, தன்னால் முடிந்த அளவு பிறருக்கு கொடுத்து தானம் செய்வது போன்றவற்றால் கிடைப்பதுவே ‘புண்ணியம்’ ஆகும்.
இவற்றின் பயனாகவே மற்ற லோகங்கள் சென்று வரும் புண்ணியம் கிடைக்கிறது. இவை யாவும் அழியக்கூடியவை என்று அறிந்து இவற்றில் பற்று வைக்காது ஒதுங்கி வாழ்தல் அவற்றை கடப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! ‘ஆத்யம்’ ‘பரம்’ என்றெல்லாம் சொல்வதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா!என்னை அடைந்தவர் திரும்பி வந்து சம்சார சக்கரத்தில் உழல வேண்டியது இல்லை. அதுதான் எல்லாவற்றிற்கும் முதன்மையானது, உயர்ந்தது, மேலானது. அதுவே, ஆத்யம், பரம் எனப்படுகிறது.
பரமகதியை அடைவது திவ்ய புருசனை அடைவது, பரமபதத்தை அடைவது, பகவத் சுயரூபத்தை அடைவது என்றெல்லாம் கூறப்படுகிறது. என்று விவரித்துக் கூறுகிறார் கிருஷ்ணன்.
எட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது
