பில்வமங்களர்
(லீலாசுகர்)
பக்தி ரசம் நிரம்பிய ‘கிருஷ்ண கர்ணா மிருதம்’ எந்தன் நூலை இயற்றிய பில்வமங்களரை எடுத்துக்காட்டாக கூறலாம்.
தென்னாட்டில் கிருஷ்ணவேணி நதிக்கரையில் ஒரு கிராமத்தில் ராமதாசர் என்ற பெயர் கொண்ட பக்தரான அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
அவருடைய குமாரர் பில்வமங்களர் நல்ல கல்வி அறிவுடையவர், அமைதியான இயல்பு, நன்னடத்தை உடையவர்.
தந்தையை சிறுவயதிலேயே இழந்து விட்டார். தீய சேர்க்கையில் சோர்ந்து தீய நடவடிக்கைகளை கைக்கொண்டார்.
வேசியின் வீட்டிலேயே பலியாக கிடந்தார். இரவு, பகலாக பாவச் செயல்களில் ஈடுபட்டார். சிந்தாமணி என்ற பெயர் கொண்ட அவ்வேசி ஆற்றின் அக்கரையில் குடியிருந்தாள்.
தந்தையின் திவசம் வந்ததால் அந்த பகல் முழுவதும் தன் வீட்டிலேயே இருக்க நேர்ந்தது.
இருந்தாலும் மனம் முழுவதும் வேசியின் நினைவாகவே இருந்தது. திவசம் முடிய மாலைப் பொழுது ஆகிவிட்டது.
அப்போதே வேசியின் வீட்டிற்கு ஓடினார். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் இன்று போக வேண்டாம் எனத் தடுத்தும் கேட்கவில்லை.
ஆற்றங்கரைக்கு ஓடினார். புயல் அடித்தது. பெருமழையாகப் பொழிந்தது. ஓடக்காரர்கள் ஓடங்களை மரங்களில் கட்டி விட்டார்கள்.
பில்வமங்களர் ஓடக்காரர்களை எடுக்கும்படி வேண்டினார் உயிருக்கு பாதுகாப்பு எண்ணி ஓடக்காரர்கள் மறுத்துவிட்டார்கள்.
இவர் மனமோ எதையும் யோசிக்காமல் வெள்ளத்தில் குதித்து விட்டார். வெள்ளத்தில் அடித்து வந்த ஒரு பெண்ணின் அழுகிய சடலத்தைப் பற்றிக் கொண்டார். அது ஒரு மரக்கட்டை என எண்ணி அதைப் பற்றிய படியே இறை அருளால் கரை சேர்ந்தார்.
காமவெறியினால் தன்னிலை இழந்தவர். பிணம் என்பதையும் உணரவில்லை. அதன் நாற்றத்தையும் உணரவில்லை.
ஓடிப்போய் சிந்தாமணி வீட்டை அடைந்தார். வீட்டுக் கதவு அடைந்திருந்தது சுவர் ஏறி குதித்துப் போக நினைத்தார்.
சுவரில் வழலை ஒன்று கயிறு போல் தெரிந்தது அதைப் பிடித்து ஏறி உள்ளே சென்றவர் சிந்தாமணியை எழுப்பினார்.
அவரைப் பார்த்ததும் பதறிப் போனவள், இந்த பயங்கரமான இரவில் நதியைக் கடந்து, பூட்டிய வீட்டில் எப்படி நுழைந்தீர்கள்? என வினவினாள் சிந்தாமணி.
பில்வமங்களர் கூறினார், கட்டையைப் பிடித்துக் கொண்டு வெள்ளத்தில் நீந்தியும், கயிற்றைப் பிடித்துக் கொண்டு சுவரில் ஏறி வந்ததாகவும் கூறினார்.
மழை நின்றிருந்தது. சிந்தாமணி விளக்கை கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். சுவரில் கொடிய கருநாகம் தொங்கிக் கொண்டு இருந்தது.
ஆற்றங்கரையில் பெண்ணின் அழுகிய பிணம் கிடந்தது. பில்வ மங்களரும் பார்த்தார். அவர் உடல் நடுங்கியது.
சிந்தாமணி அதட்டிக் கூறினாள், “ஐயா! நீ பிராமணன் தானே!” இன்று உன் தகப்பனாருக்கு திவசம் தானே!
எலும்பும், சதையும் ஒட்டி வைத்த இந்தக் கூட்டின் மீது உனக்கு இவ்வளவு ஆசையா! உன்னுடைய எல்லா தர்மங்களையும், கர்மங்களையும் இதற்காகத் துறந்து விட்டாயே!
