பகவான் பூஜிக்கத் தக்கவர் என்ற எண்ணம் அர்ச்சுனனுடைய மனதில் விழித்தெழுந்தது. அந்தப் பாவனை மின்னல் போல அவர் உடலில் பாய்ந்து அர்ச்சுனனை தலை வணங்கச் செய்தது.
சரணங்களில் விழச் செய்தது, கைகளைக் கூப்பவைத்தது. மிகவும் வினயத்துடனும், சிரத்தையுடனும், பக்தியுடனும் பகவானைத் துதிக்க ஆரம்பித்தார்.
தேவனே! நான் உங்களுடைய திருமேனியில் எல்லா தேவர்களையும், அநேக பிராணி வர்க்கங்களையும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மதேவனையும், மகா தேவனையும், எல்லா ரிஷிகளையும், தெய்வீகமான சர்ப்பங்களையும் பார்க்கிறேன்.
“என் முன்னே இதோ
ஸ்ரீ கிருஷ்ணனாக நிற்கிறீர்களே இந்த திருமேனியிலேயே இவை எல்லாவற்றையும் காண்கிறேன்” என்கிறார்.
பிராணிகளை காட்டிலும் தேவர்கள் சிறந்தவர்கள். தேவர்களை காட்டிலும் பிரம்ம தேவனும், பரமசிவனும் தேவர்களுக்கு தேவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, தனித்தனியாக குறிப்பிட்டு கூறுகிறார் அர்ச்சுனன். பிரம்மதேவன் பகவான் விஷ்ணுவின் நாபியிலிருந்து வெளிவந்த தாமரை மலர் மீது வீற்றிருக்கிறார் என்று கூறும்போது…
“அவர் உதித்த கமலத்திற்கு ஆதாரமான உங்களுடைய ஸ்ரீமந்நாராயண சுரூபத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பால் உணர்த்துகிறார்.
அகிலலோக நாயகனே! உங்களை எண்ணில் அடங்காத கைகள், வயிறுகள், முகங்கள், கண்கள் கொண்டவராகவும் எல்லாப் பக்கங்களிலும் பார்க்கிறேன்.
அகிலாண்ட ரூபனே! உங்களுடைய முடிவான எல்லையைப் பார்க்கவில்லை. நடுப்பகுதியையும் பார்க்கவில்லை. மேலும், ஆரம்பத்தையும் பார்க்கவில்லை.
இந்த விராட் விஸ்வரூபம் எங்கே ஆரம்பிக்கிறது? எங்கே முடிகிறது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எங்கிருந்து எது வரை உங்கள் ரூபம் பரவி இருக்கிறது என்பதை அளவிட முடியவில்லை.
இப்படி அடி, முடி தெரியாத காரணத்தால் நடு எங்கே என்றும் தெரியவில்லை. எனக்கு முன்னும், பின்னும், இடப்புறமும், வலப்புறமும் மேலும், கீழும், நாற்புறமும் எங்கும் எல்லையற்று உங்கள் சுயரூபம் காணப்படுகிறது.
“எந்தப் பக்கத்தில் எல்லை. எந்தப் பக்கத்தில் முடிகிறது என்பதே தெரியவில்லை” என்கிறான் அர்ச்சுனன்.
மிகுந்த அழகும், ஒளியும் பொருந்திய கிரீடத்தைத் தலையிலே அணிந்தும், கையிலே கதாயத்தைத் தாங்கியும், சக்கராயுதத்தை தாங்கியும், தலையில் தேகமயமான கிரீடம் தரித்துக் கொண்டும் இருப்பதைப் பார்க்கிறேன்.
கொழுந்து விட்டெரியும் அக்னியும், ஒளிமயமான சூரியனும், எப்படி ஒளிப்பிழம்புகளோ, அதுபோல பகவானுடைய இந்த விராட் சுயரூபம் பன்மடங்கு ஒளி பொருந்தியது என்பதை அர்ச்சுனன் விளக்குகிறான்.
