அர்ச்சுனா! துரோணரையும், பீஷ்மரையும், ஜயத்ரனையும், கர்ணனையும் அவ்வாறே என்னால் கொல்லப்பட்ட இன்னும் மற்ற அனேக போர் வீரர்களையும் நீ கொல்வாயாக! பயப்படாதே! போரில் எதிரிகளை ஐயமின்றி வென்று விடுவாய். ஆகவே, போர் புரிவாயாக! என்கிறார்.
துரோணாச்சாரியார் தனுர் வேதத்திலும் மற்ற அஸ்திர சாஸ்திரங்களை பிரயோகம் செய்வதில் மிகவும் வல்லவர். போர் கலையில் தேர்ச்சி பெற்றவர். யாரும் விழித்த முடியாது என்ற புகழ் அவருக்கு உண்டு. எனவே, அவரை வெற்றி கொள்ள முடியாது என்று அர்ச்சுனன் நினைத்தான். மேலும், அவர் தமக்கு குரு. அவரை வதைப்பது மகா பாவம் என நினைத்தான்.
பாட்டனாரான பீஷ்மருடைய வீரம் உலகப்புகழ் பெற்றது. பரசுராமர் போன்ற ஜெயிக்கவே முடியாத வீரர்களை அவர் தோற்கடித்திருக்கிறார்.
மேலும், தமது தந்தை சந்தனுவிடம் ஒரு வரம் பெற்று இருக்கிறார். அதன்படி அவராக விரும்பாத வரை எமனால் கூட அவருக்கு மரணம் ஏற்படாது. எனவே, பீஷ்மரை ஒரு காலும் வெற்றி கொள்ள முடியாது. மேலும், அவர் போற்றுதற்குரிய பாட்டனார். எனவே, அவரை கொல்வது பாவம். எனவே, அவரை கொல்ல மாட்டேன் என்று அர்ச்சுனன் பலமுறை சொல்லி இருக்கிறான்.
ஜயத்ரதனோ ஒரு சிறந்த வீரன். பரமசிவ பக்தனான அவன் பல கிடைத்தற்கரிய வரங்களைப் பெற்று யாராலும் வெல்ல முடியாதவனாகி விட்டான்.
துரியோதனின் சகோதரி துச்சலையை மணந்த படியால் பாண்டவர்கள் அவனுக்கு மைத்துனர்கள் ஆகிவிட்டார்கள். இயல்பான நல்ல மனதினாலும் உறவினர் என்ற முறையினாலும் கொல்லத் தயங்கினான்.
கர்ணன் தம்மைக் காட்டிலும் எவ்விதத்திலும் குறைந்த வீரம் உடையவன் அல்லன். என்று அர்ச்சுனன் மதித்திறந்தான். உலகமெங்கும் அர்ச்சுனனுக்கு ஈடான வீரன் கர்ணன் தான் என்ற பேச்சும் இருந்தது.
கர்ணன் பெரிய வீரன். பரசுராமனிடம் இருந்தும் அரிதான வில் வித்தைகளைப் பயின்று இருந்தான். ஆகவே, இந்த நால்வர் பெயரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டார் கிருஷ்ணன்.
அவர்களை கொல்வது எளிதன்று என்று அர்ச்சுனன் கருதினான். அவர்களை நான் கொன்று விட்டேன். நீ யாரையாவது வெல்ல முடியாமல் போகுமோ என்று சந்தேகப்பட வேண்டாம்.
இவர்களைக் கொன்றால் பாவம் நேருமே என்று பயப்படுகிறாயே, அதுவும் சரி அன்று. சத்திரிய முறைப்படி இந்த வீரர்களைக் கொல்வதற்கு நீ நிமித்தமாக மட்டும் இருப்பதால் உனக்கு எவ்வித பாவமும் நேராது.
மாறாக சத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்த பெருமையே வரும். ஆகவே, எழுந்திரு! அவர்களை வெற்றி கொள் என்று கட்டளை இடுகிறார். நிச்சயம் உனக்கு வெற்றி உண்டு. நீ உற்சாகமாக யுத்தம் செய்துதான் ஆக வேண்டும் என வலியுறுத்துகிறார்.
