பகவான் கேசவன் இவ்வாறு ஆறுதல் கூறிய பிறகும் கூட அர்ச்சுனனுக்கு பகவானுடைய நெடிய பயங்கர விஸ்வரூபத்தைப் பார்த்த பயம் நீங்கவில்லை.
நடுங்கிக் கொண்டே அந்த விஸ்வரூபத்தை மறைத்துக் கொள்ளுமாறு அவர் பகவானை வேண்டுகிறார் என்று கூறுகிறார் சஞ்சயன்.
பகவானே! உங்களுடைய திருநாமம், குணங்கள், பிரபாவம் இவற்றைக் கீர்த்தனம் செய்வதாலேயே உலகம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது, அன்பு கொள்கிறது.
பயந்துபோன அரக்கர்கள் எல்லாத் திசைகளிலும் ஓடுகின்றனர். மேலும், சித்தர்களின் கூட்டம் அனைத்தும் வணங்குகிறார்கள். இவை எல்லாம் தான் கண்ட காட்சிகளாக அர்ச்சுனன் வர்ணிக்கிறான்.
தேவ தேவா! உலக நாயகனே! உலகத்திற்கு இருப்பிட மானவரே! அழியாத சத்,சித், ஆனந்த பரபிரம்மமான பரமாத்மா நீங்களே! ஆகவே, உங்களை வணங்குவது எல்லா பரமபதமாகவும் இருக்கிறீர்கள்.
“உங்களுடைய ரூபங்கள் எல்லையற்றன எண்ணற்றன. அவற்றின் எல்லையை அடைந்தவர்கள் யாரும் இல்லை” என்கிறார்.
“அகில உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் நீங்கள் ஊடுருவி இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாத இடமே இல்லை” என்று கூறுகிறான் அர்ச்சுனன்.
வாயுதேவனும், எமனும், அக்னி தேவனும், வருணனும், சந்திரனும், மக்களுக்குத் தலைவனான பிரம்ம தேவனும், பிரம்மதேவனுக்குத் தந்தையும் நீங்களே.
உங்களை பல்லாயிரக் கணக்கான முறை வணங்குகிறேன். மீண்டும்… மீண்டும் திரும்பத் திரும்ப வணங்குகிறேன். அப்போதும் மன நிறைவு ஏற்படவில்லை. அதனால், மேலும்… மேலும் வணங்குகிறேன் என்கிறான்.
நீங்கள் எல்லோருக்கும் ஆத்மா எங்கும் நிறைந்தவர். எல்லோமும் ஆனவர்.
ஆகவே, உங்களுக்கு முன்புறத்திலும் பின்புறத்திலும் மேலும், கீழும், இடப்பறமும், வலப்புறமும், எல்லாப் புறமும் வணங்குகிறேன்.
உலகில் நீங்கள், இல்லாத இடமே இல்லை. எங்கும் நிறைந்த உங்களை எல்லாப் புறங்களிலும் வணங்குகிறேன். நீங்கள் எல்லாம். உண்மையில் உங்களைத் தவிர உலகில் வேறு பொருள் எதுவுமே இல்லை. இதுவே என் தீர்மானம் என்கிறான் அர்ச்சுனன்.
உங்களுடைய ஒப்பற்ற மகிமையையும், பெருமையும் அறியாததால் நான் உங்களை எனக்கு சமமான நண்பன் என்று நினைத்திருந்தேன்.
அதனால் தான், பேசும்போது உங்களுக்கு உரிய கௌரவத்தையும் எல்லோராலும் போற்றுதலுக்குரிய உங்களுடைய பெருமையும், நினைத்துப் பார்க்கவில்லை. அன்பினாலும், அசட்டையினாலும் நான் மிகப்பெரிய பிழை செய்து விட்டேன்.
அறிய,,பெரிய, தேவதைகள், மகரிஷிகள் எல்லாம் உங்கள் சரணங்களில் விழ்ந்து வணங்குவதைத் தங்களுடைய பாக்கியம் என்று கருதுகிறார்கள்.
“அத்தகைய உங்களுடன் நான் சரிசமமாகப் பழகி விட்டேன். இதற்காக கிருபை கூர்ந்து எனக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும்” என வேண்டுகிறான் அர்ச்சுனன்.
