“கேசவா! பக்தியோகம் என்பதையும், அதன் மூலம் பகவானைச் சிந்தித்துக் கொண்டே எவ்வாறு உபாசிப்பது என்பதை விவரியுங்கள்” என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! எனக்குப் பரமேஸ்வரனைத் தவிர வேறு யாருமில்லை அவரே எனக்கு எல்லாம் என்று அறிந்து தன்னலம் கருதாமல் மிகுந்த சிரத்தையுடன் அன்யோன்யமான பிரியம் செலுத்த வேண்டும்.
இதில் தன்னலமோ, அகம்பாவமோ இல்லாமல் எப்போதும் பூரணமாகவும், அசையாததாயும் இருக்க வேண்டும்.
வேறு பொருட்களில் சிறிதுகூடப் பற்று இருக்கக் கூடாது. அதன் காரணமாக கணநேரம் பகவானை மறந்தால் கூட அது பொறுக்க முடியாததாக ஆகிவிட வேண்டும். இதுதான் சிந்தித்துக் கொண்டே இருப்பதாகும்.
மேலும், பகவானுடைய குணங்கள், பிரபாவங்கள், லீலைகள் இவற்றைக் கேட்பதும், கீர்த்தனம் செய்வதும், அவருடைய திருநாமங்களை ஓதுவது, ஜபம் செய்வது இவைகள் எல்லாம் உபாசனைகள் ஆகும், என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! இவ்விதம் என்னிடம் மனதை ஈடுபடுத்தியவர்களான பிரியமான பக்தி செய்பவர்களை சீக்கிரமாகவே நான் மரண வாடிவான சம்சாரக் கடலில் இருந்து கரையேற்றுபவனாக ஆகிறேன்.
அதாவது, பிறப்பு, இறப்பு என்பதில் இருந்து முற்றிலும் விடுவித்து இங்கேயே தம்மை வந்து சேரும்படி செய்வதாகும். அல்லது இறந்த பிறகு வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று விடுவேன்.
ஓடக்காரன் பயணியை தன் ஓடத்தில் ஏற்றிக் கொண்டு அவனை அக்கரைக்குக் கொண்டு சேர்ப்பது போல பக்தி என்ற ஓடத்தில் இருந்து…
அவனுடைய சகல இன்னல்களையும், துன்பங்களையும்,விபத்துக்
களையும் விலக்கி வெகு விரைவில் அந்த பயங்கரமான சம்சாரக் கடலில் இருந்து, அக்கரை சேர்த்து என்னிடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். இதுதான் மரண வடிவாகிய சம்சாரக் கடலைக் கடப்பதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! என்னிடமே மனதை நிலை நிறுத்து, என்னிடமே புத்தியை ஈடுபடுத்து, அதற்குப் பிறகு என்னிடமே வாழ்வாய். இதில் சிறிதும் ஐயமில்லை என்கிறார்.
அர்ச்சுனா! ஒரு கால் மனதை என்னிடம் அசையாமல் நிறுத்தி வைப்பதற்கு முடியாவிட்டால் அப்போது பகவத் நாம கீர்த்தனம் செய்வது, இறைவன் திருநாமத்தை ஓதுதல் முதலிய பயிற்சி யோகத்தினால் என்னை அடைய விரும்பு என்கிறார்.
