1-தமிழ் கடவுள்:- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். இந்த நிலத்திற்கு உரிய கடவுள் முருகன். குறிஞ்சி நில மக்கள் பேசும் மொழி தமிழ்.தமிழ் கடவுள் முருகன்.
ஈசானம், வாமதேவம், அகோரம்,சத்தியோஜாய்தம் ,
தட்புருசம் என்ற ஐந்து முகத்துடன். அடியவர்களுக்கு அருள் கொடுக்கும் கீழ்நோக்குப் பார்வையுடன் கூடிய ஆறாவது முகமாகிய திருவதனம் இணைந்து ஆறுமுகங்களில் இருந்து அனல் பொறி பிறக்கச் செய்தார் சிவன்.
2-ஆறுமுகனாக பிறந்தார் முருகன். “அனலில் பிறந்து புனலில் வளர்ந்து” உருவாகிய காரணத்தினால் கந்தன் என்று பெயர் பெற்றார்.
“அழகு” என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ் கடவுள். தமிழ் வேறு முருகன் வேறு அல்ல .
முருகனுக்கு கண்கள் பன்னிரண்டு. தமிழுக்கு உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு.
முருகன் சிரமும், கரங்களும் பதினெட்டு. தமிழில் மெய் எழுத்துக்கள் பதினெட்டு.
முருகனுக்கு ஆயிதம் வேல் ஒன்று. தமிழ் எழுத்துக்களில் ஆயுதம் ஒன்று.
முருகனுக்கு முகங்கள் ஆறு. தமிழில் இன எழுத்துக்கள் ஆகிய வல்லினம், மெல்லினம், இடையினம் என இன
எழுத்துக்கள் ஆறு. எனவே, “முருகனே தமிழ்”” தமிழே முருகன்”. எனவே, நாவாரப்பாடி உருகி வழிபடுவது தமிழ் கடவுள் முருக வழிபாடு.
3- கார்த்திகை தீப வழிபாடு:- ஆறு முருகனும் ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் எனப் பெயர் பெற்றார்.
ஆறுமுகங்களைப் பெற்றதால் ஆறுபடை வீட்டையும் கொண்டவர் ஆனார்.
பழத்திற்காக நின்ற வீடு பழநீ, சூரனை போரில் வென்ற வீடு திருச்செந்தூர், தெய்வானையை மணம் புரிந்த வீடு திருப்பரங்குன்றம், தந்தைக்கு உபதேசம் செய்ய அமர்ந்த வீடு சுவாமிமலை, சீற்றம் தணிந்து வீடு திருத்தணி. வள்ளியை கலப்பு மணம் புரிந்த வீடு பழமுதிர்ச்சோலை. என அறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானை…..
கார்த்திகை மாதத்தில் 30 நாளும் தீபம் ஏற்றி வழிபடும் போது இல்லம் நல்லறமாக திகழும் .மேலும், இம்மாதத்தில் திருக்கார்த்திகை அன்று தீபம் ஏற்றி முருகன் வழிபடுவது தமிழர் வழிபாடுகளில் ஒன்று.
ஆறுபடை வீட்டில் எழுந்திருக்கும் முருகா ஆசானாய் வந்து
அரசாலும் முருகா
ஆசி மொழி தந்து வாழ்வளிக்கும் முருகா ஆதரவாய் ஒளி தந்து
உயர்வு தரும் முருகா
இருள் அகல
தீபம் ஏற்றுவோம்
இன்பம் பெறுக
தீபம் ஏற்றவோம்
இடர் களைய தீபம் ஏற்றுவோம் இசை வளர தீபம் ஏற்றுவோம் குருவான முருகனுக்கு
தீபம் ஏற்றுவோம்
குறிஞ்சித் தலைவனுக்கு
தீபம் ஏற்றுவோம்.
4-தனித்து இயங்கும் முருக வழிபாடு:- பழத்திற்காக ஆண்டியின் கோலத்தில் நிற்கும் மலை பழம்+நீ= பழநீ மலை. “பழம்” என்றால் “வித்து” தமிழுக்கு வித்தாகிய ஞானக்கடவுள் முருகன்.
பந்தம், பாசம், உறவு, பகை இவற்றிற்கு அப்பாற்பட்டவர் பழனி மலை முருகன். ஸ்ரீ பழனிஆண்டவர் என அழைக்கப்படுகிறார் .
அன்பே உருவான பாலமுருகன் பழத்திற்காகவா! தனியாக நின்றார்? மக்களுக்கு அருளும், ஞானமும் கொடுக்கவும், தனது கருணை பார்வையால் நலன்கள் தரவும் அல்லவா?
தனித்து நின்று தனக்கு என்று பக்தர்களை கொண்டு… குறைதீர்க்கும் வள்ளலாக உள்ளார் முருகன்.
அகோரே விஸ்வரூபம் எடுத்த வீரபத்திரன் பெரிய கோவில் தலங்களில் தனி சன்னதியில் மக்கள் குறை போக்கி உடல் ஆரோக்கியம், உள்ள ஆரோக்கியம், திருமண தடைகள் போக்கி வருகிறார். தனிக்கோயிலில் வீரபத்திரத்துக்கு ராமேஸ்வரம், திருக்கடையூர் போன்ற திருத்தலத்தில் உள்ளது.
5-மலைப்படி வழிபாடு:- மக்கள் தங்கள் குறைகளை முருகனிடம் சொல்லி குறை போக்க வேண்டி மலைபடிகளை நீரால் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து ஒவ்வொரு படியாக மஞ்சள் குங்குமம் வைத்துக் கொண்டே படியேறி முருகனை தரிசனம் செய்து தங்கள் குறை போக்கிய முருகனுக்கு நன்றி சொல்லும் வகையில் வழிபடுவது படி வழிபாடாகும்.
கனிவேண்டி சென்றாய்
பழனி மலைக்கு சென்றாய் தனியாக கோபத்தில் நின்றாய் தரணி காக்கவே நின்றாய் இனியவை செய்யவே வந்தாய் மலை மேல் வந்தாய் பனிக்கால குளிரிலும் நனைந்து படியேறி
வந்தோம் சரணம்!
6- வேல் வழிபாடு :-உலகினரே இவ்விடத்து வெயிலுக்கு ஒதுங்கி நிற்க உதவாத இந்த யாக்கையின் பயனற்ற நிழலை போல் மரண காலத்தில் ஆன்மா புறப்பட்டுச் செல்லும் இறுதி வழிக்கு உங்கள் கையில் உள்ள பொருளும் துணை செய்ய மாட்டாது. என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆதலால், கூர்மை மிகுந்து ஒளி செய்கின்ற வடித்தெடுத்த வேல் படை உடைய முருகப்பெருமானை வணங்கி!
ஏழைகளுக்கு எக்காலமும் நொய்யிற் பாதியள வாயினும் பங்கிட்டு கொடுங்கள்.
“வேல் “என்பது “ஞானம்” கூர்மை உடையதாகும். இதனை விளக்கும்
பரமாசிரியர் மணிவாசகனார் கூர்ந்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வரர்.
தங்கருத்தில்
” நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே” என்கிறார்.
” வேல் ஞானம்” ஒளிர்வது ஆகும். அறியாமை ஆகிய இருளை நீக்கும் தன்மை உடையது. இதனை உணர்த்தவே சுவாமிகள் “வையிற் கதிர்” என்று வேலைச் சிறப்பித்தார்.
“வடிவேல் “என்பது ஏனைய வேல் போல் உலைக் களத்தில் காய்ச்சி வடித்தது அன்று. பாசஞான பசுஞானங்களில் வடித்தெடுத்த பதிஞானம் என்பதாகும் .
ஒரு பொருளை தர்மம் செய்யும்போது தான் கொடுத்தாக எண்ணுவது கூடாது. முருகவேல் கொடுத்ததை தருகிறேன் என எண்ண வேண்டும்.
அவ்வாறு எண்ணிக் கொடுத்தால் பிறவாத இன்பம் பெறலாம். எனவே, வேலனை வாழ்த்தி வணங்கி வழிபடுவது வேல் வழிபாடாகும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.