தை மாதம் பூசம் நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும் விழா தைப்பூச விழா.
“தைப்பூசம்” என்ற உடனே ஞாபகம் வருவது பழனி ஆண்டவர் சன்னிதானம் தான்.
முருகன் குடி கொண்டு இருக்கும் மலைகளுக்கு எல்லாம் தைப்பூச விழா சிறப்புத்தான் என்றாலும் பழனி ஆண்டவர் கோவிலுக்கு நடை பயணம் வருவது தான் மிகச் சிறப்பாக கருதப்படுகிறது.
விலைவாசி போலுயர்ந்த மலைகள் தோறும்
வினைவாசி குறைந்தொழிய விளங்கும் வேலா
அலைவீசும் திருச்செந்தூர் கடலைப் போல
ஆயிர நூறாயிரமாய் அன்பர் கூடி
மலைவாழை உனைக்காண நடையைக் கொண்டோம்
மனவாழை அன்பென்னும் கனியைச் சிந்தக்
கலைவாழும் பழனிமலை ஆண்டியப்பா
கதிகாட்டி மனங்களிலே கனிவாய் அப்பா “
எனப் பாடிக்கொண்டு நடை பயணக் களைப்பு சிறிதும் இன்றி சிந்து பாடல்களையும் காவடி பாடல்களையும் பாடிக் கொண்டே வருவதே ஒரு அழகு தான் .
“அழகு”என்றால் முருகன். “முருகன்” என்றால் தமிழ் கடவுள். தமிழ் வேறு! முருகன் வேறு !அல்ல
முருகனுக்கு தோள்கள் 12 தமிழுக்கு உயிர் எழுத்துக்கள் 12
முருகனுக்கு உருவமும் அருளும் கரமும் பதினெட்டு தமிழில் மெய் எழுத்துக்கள் 18 முருகனுக்கு ஆயுதம் வேல் ஒன்று தமிழ் எழுத்துக்களில் ஆய்தம் ஒன்று.
முருகனுக்கு முகங்கள் ஆறு தமிழின் இன எழுத்துக்கள் ஆகிய வல்லினம், மெல்லினம் இடையினம் என இன எழுத்துக்கள் ஆறு. எனவே தமிழ் வேறு முருகன் வேறு அல்ல என்று நம்பப் படுகிறது.
“நா “படைத்திருப்பதே கந்தன் புகழ் பாடவே என உயிர் உள்ளவரை முருகன் புகழ் பாடிய கிருபானந்த வாரியார் தைப்பூச விழாவில் காவடி எடுப்பது தான் சிறப்பு என்கிறார்.
தைப்பூச விழாவில் காவடி எடுப்பது தான் சிறப்பு என தெரிந்து கொண்டோம். எத்தனை வகை காவடிகள் என தெரிந்து கொள்ள வேண்டாமா? இதோ! பார்ப்போம்…..
காவடியாம் காவடி கந்தவேலன் காவடி
கண்கொள்ளக் காட்சி தரும் கடம்பனுக்கு காவடி வேல்முருகன் நாமத்திலே விதவிதமாய் காவடி வெற்றிவேலன் காவடி வீரவேலன் காவடி
சிங்கார வேலனுக்கு சின்னச் சின்ன காவடி
வண்ணமயில் தோகையோடு ஆடிவரும் காவடி
பழனி மலை பாலனுக்கு பால் குடத்தால் காவடி
தென்பழனி வேலனுக்கு தேன் குடத்தால் காவடி
சுவாமிநாத வேலனுக்கு சந்தனத்தால் காவடி
பாலசுப்ர மணியனுக்கு பஞ்சாமிருதக் காவடி
ஆறுமுக வேலனுக்கு அழகு மயில் காவடி
வண்ண வண்ணக் காவடி வெற்றிவேலன் காவடி
மயூர நாதனுக்கு மச்சத்தாலே காவடி
குன்றக்குடி குமரனுக்கு குறைவில்லாத காவடி
பக்தரெல்லாம் கொண்டாடும் காவடியாம் காவடி
பாமாலை பாடியாடி நாடிவரும் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும் கந்தவேலன் காவடி
காவடியாம் காவடி காண வேண்டும் கண் கோடி
காவடியைப் பார்த்து ஆடிய நிறைவு நமக்குள்ளும் ஒட்டிக் கொண்டிருக்கும்.சிறிது சிந்து பாட்டையும் பார்ப்போம்….
மார்கழி போய்ப்புது மங்கலம் பொங்கும் தை
மாதம் பிறந்ததடி -தை
மாதத்துப் பூசத்தை மாது நினைத்ததும்
மன்றம் குலுங்குதடி
பாசம் மிகுந்ததைப் பூசம் நினைத்ததும்
பழனிமுன் தோன்றுதடி பெண்கள்
பாதம் பழனியின் பாதையைக் கண்டிடப்
பாய்ந்து குதிக்குதடி
என பாவையர் சிந்து பாடி பழனி மலை நாடி ஓடிவரும் காட்சியை கண் முன்னே கொண்டு வரும் திருவிழா தான் தைப்பூசவிழா.
அன்று தேர்த்திருவிழா சிறப்பு வாய்ந்தது அந்த நாளில் நாமும் கலந்து கொண்டு முருகன் வரும் தேர்வடத்தை இழுத்து நமது வாழ்க்கை வடத்தை அவனிடம் ஒப்படைப்போம்.
இந்த நாளில் நாமும் விரதம் இருந்து “கண்ணே நீ கந்தனை கண்டு மகிழ்வாய்” என கண்ணால் கண்டு மனதால் மகிழ்ந்து முருகன் அருளையும், அன்பையும்
பெறுவோமாக பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா !