பள்ளிக்கூடத்தில் நான் படிக்கும் போது விடுமுறை நாட்களில் வீட்டில் நடக்கும் பலவகை திறனாய்வு போட்டிகளில் அண்ணன்களுடன் கலந்து கொண்டு நானும் நல்ல கருத்துக்களைச் சொல்வேன்.எழுதுவேன். .நான் கூறியவைகளில் சிறந்த கருத்துக்களைப் பார்த்தவர் என் அம்மா.
அன்றொரு நாள் எங்கள் வீட்டில் ஒரு விளையாட்டு. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கவிதை எழுத வேண்டும். அதில் சிறந்ததை எங்கள் அப்பா தேர்வு செய்வார். அன்று தேர்வு செய்யப்பட்ட கவிதை ” புதிய திசை” என்னுடையது. என் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.
சென்னை இசைக்கல்லூரியில் படிக்கும் போது இசையுடன் ‘மழைத்துளி’ கவிதை நூலினை வெளியிட்டது இசையுடன் இயற்கையை நான் ரசித்ததற்கான வெற்றி .
என்னுள் இருந்த கவித்திறனை நெருப்பாக்கியது ‘பூந்தணல்’ கவிதை நூல் .இன்றுவரை நான் கவிஞனாக இருந்திட என் குடும்பத்தினர் முழுக் காரணம்.
விரல் பிடித்து மொழி கொடுத்து கற்பனை பயம் உடைத்து சிந்தனை அறிவூட்டி ஊக்குவித்து உயரப் பறக்க உற்சாகப்படுத்திப் பார்த்து ரசித்து இருக்கும். என் குடும்பத்தினர், வசந்தவாசல் கவி மன்றம் , தமிழக கவிஞர் கலை இலக்கிய மன்றம் ,அனைத்துலக தமிழ் மாமன்றம்,புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை கவிதை வானில் கவி மன்றம் இப்படி மன்றங்கள் என் கவித்திறனை ஊக்கப்படுத்தியதால் சமுதாய சிந்தனையும் ,இயற்கை ரசிப்பும் என்னை எழுதவைக்கிறது .
உலகமே கூடி உழைத்தாலும் உன் உள்ளம் எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறுகிறாய். அதுவே உன் பேச்சிலும் எழுத்திலும் கொட்டிக் கொண்டிருக்கும்.
சரியென்றோ தவறென்றோ தெரியாது. சரித்திரம் பெயர் சொல்லுமா? மனம் அறியாது. உலகத்து மகத்துவம் அன்பென்று உணர்ந்து நின்றேன். இயற்கை மட்டுமே இயல்பு என்று இருந்து விடுவேன். ஒழுக்கம் தவறாமல் உழைத்திடுவேன். நம்பிக்கை குறையாது நிலைத்திடுவேன். இது தான் என் எழுத்தின் மையப்புள்ளி. மனநிறைவு ஒன்றே என் எழுத்தின் மைதீராது பார்த்துக் கொள்ளும்.
இவண் இசைக்கலைமணி ச.ம. பால கிருஷ்ணன்.எம்.ஏ.,