12-குழந்தை கவனிப்பு
குழந்தைக்கு மென்மையான பருத்தி துணிகளால் ஆன துணிகளை உடுத்து விட வேண்டும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் சோப்பு மிருதுவானதாக இருக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றி பயன் படுத்தக்கூடாது.
அவர்களுக்கு துடைக்கும் துண்டும் மிருதுவானதாக இருக்க வேண்டும். அழுத்தமான துணிகள் கொண்டு துடைக்கும் போது குழந்தைக்கு உடல் வலி உண்டாகும்.
குழந்தையுடன் வெளியில் செல்லும்போது குழந்தைக்கு வேண்டிய துண்டு சிறு துணிகள் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.
எண்ணெய் தேய்த்து குளிக்க வைக்கும் போது வெதுவெதுப்பாக எண்ணையை சூடு செய்து தேய்க்க வேண்டும். குளித்தபின் மென்மையான தொண்டால் துடைத்து. கை மடிப்பு, கால் மடிப்பு, கழுத்து போன்ற பகுதிகளில் பவுடர் போட்ட பின் உடல் முழுவதும் முன்பின் பகுதியில் போட்டு கைகளால் மென்மையாக தேய்த்து விட வேண்டும்.
ஒரே இடத்தில் தூங்க வைப்பது நல்லது. தலையை மென்மையாக கோதி விடுவது தட்டிக் கொடுப்பது போன்ற செயல்களால் அம்மாவின் அரவணைப்பை உணர்ந்து குழந்தைகள் தூங்கி விடுவார்கள்.
தொட்டிலில் போட்டு தாலாட்டுப் பாடி தூங்க வைத்து பழக்கலாம். அல்லது மென்மையாக தொட்டிலில் ஆட்டி தூங்க வைத்து பழக்க வேண்டும். நமக்கு இருக்கும் வேலைகளில் அவசரத்தில் தூங்கு தூங்கு என அதற்றியும், வேகவேகமாக தொட்டிலை ஆட்டியோ! தூங்க வைத்தால் குழந்தை பயத்தில் தூக்கத்தை மறந்து அழ ஆரம்பித்து விடும்.
அவ்வாறு தூக்கம் கெட்டு அழ ஆரம்பிக்கும் குழந்தை சீக்கிரம் வீரிட்டு கத்த ஆரம்பித்து விடும். பின் தூங்க வைப்பது மிகவும் கடினம் ஆகிவிடும். எனவே, அன்பும், மென்மையும் குழந்தை இடம் காட்டுவது மிக மிக அவசியம்.
சிறு குழந்தையாக இருக்கும்போது இருந்தே இந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும் என்பதாக அதாவது எழுந்தவுடன் குழந்தையை சுத்தப்படுத்துவது ‘ஆய்’ போக பழக்கப் படுத்துவது. துணி மாற்றுவது, பால் கொடுப்பது, தூங்க வைப்பது. இப்படி அந்தந்த நேரத்தில் தினம் செய்தால் குழந்தைகள் புரிந்து கொண்டு நம்முடன் அவர்கள் ஒத்துழைக்க பழகிக் கொள்வார்கள். இவ்வாறு குழந்தையில் இருந்து நல்ல பழக்கங்களை சிறுக, சிறுக கற்பித்தால் பசுமரத்த ஆணி போல் அவர்கள் மனதில் பதிந்து செயல்படுவார்கள்.
குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை இதை…இதைச் செய்யும் என்ற பட்டியல் நம்மிடம் இருந்தால் குழந்தை கவனிப்பும். வேலை செய்வதும் எளிதாகப் போகும்.
குழந்தைகள் ஒவ்வொரு செயல்கள் செய்யும் போதும் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். பேசும்போதும் அவர்கள் பேச்சில் அக்கறை காட்ட வேண்டும். சிறு குழந்தை தானே என்ற அசட்டையாக இருந்தால் பின் திருத்த கஷ்டப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டாக சில குழந்தைகள் அப்பாவை போடா என்பார்கள். குழந்தை போடா என்கிறான் என்ற முதலில் சந்தோசமாக இருக்கும். வளர்ந்து பெரியவன் ஆன பின்பு மரியாதை இல்லாமல் பேசும்போது வருத்தமாக இருக்கும். எனவே, நாம் எல்லாவற்றிலும் அக்கறையுடன் இருக்க வேண்டும். குழந்தை ஒரு களிமண் மாதிரி தான் அவர்களை நாம் எப்படி வடிவம் கொண்டு வருகிறோமோ அப்படியே அவர்கள் உருமாறுவார்கள்.
தவறாக மட்டும் பேசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேசக்கூடிய குழந்தைகளால்தான் எதிர்காலத்தை சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை இருக்கும்.
சிறுவர்களுடன் விளையாடும் போதும் கவனமாக இருக்க வேண்டும். கை சூப்புவது போன்ற செயல்கள் செய்தால். உடனே, எடுத்து விட வேண்டும். நாம் வேலை செய்யும் வரை விரலை வாயில் வைத்து சூப்பட்டும் என இருக்கக் கூடாது.
நமக்கு அப்போது சவுரியமாக இருக்கும் செயல். அவர்கள் வளர்ந்த பின்பும் மறக்க முடியாமல் திணறுவார்கள். பலருக்கு எத்துப்பல்லாக முளைத்து விடும். அது பிற்காலத்தில் குழந்தையின் மன உளைச்சலுக்கு வித்திடும்.
சில குழந்தைகள் திக்கி… திக்கி பேசுபவர்களைப் பார்த்து. உடனே, அவர்களும் அது போல் பேசுவார்கள். உடனே கண்டுபிடித்து திருத்த முட்பட வேண்டும். இப்படி குழந்தைகள் செயல்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாக இருக்கும்.
நாம் அவர்களை பாராட்டும் படியான நல்ல செயல்களுக்கு மட்டும் பாராட்ட வேண்டும். அதே சமயம் அவர்களுக்கு நம்மிடத்தில் பயமும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதட்டல், கண்பார்வை இவற்றில் பயம் காட்டினாலே போதும் இதை விடுத்து எப்போதும் அடித்துக் கொண்டும் திட்டிக் கொண்டும் இருந்தால்…
அக்குழந்தைக்கு தப்பு செய்தால் இரண்டு அடி தானே விழும் என்ற மாதிரி நினைத்து தப்பு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தப்பு செய்யாமலே திட்டுகிறார்கள் தப்பு செய்து விட்டு திட்டு வாங்கினால் போயிட்டு என்ற மனநிலைக்கு பெற்றோரே மாற்றும் நிலையை உருவாக்கி விடக்கூடாது.
குழந்தை வளர்ப்பும் ஒரு கலையே அதை அனுபவித்து வளர்க்கும் போது சொர்க்கமே நம் வீட்டில்தான் வேறு எங்கோ இல்லை.