ஒவ்வொரு உயிரினமும் ஒரு நாள் மண்ணுலகில் பிறப்பு எடுக்கின்றது. பறவை தனக்கான ஒரு கூடுகட்டி அதில் முட்டை போட்டு அடைகாக்கிறது.
காற்று, மழை, புயல் இவற்றைக் கடந்து பத்திரமாக குஞ்சு வந்தால் தாய்மையில் மகிழ்ச்சி அடைகிறது.
அப்பறவை உணவு சேகரித்து குஞ்சுக்கு வாயில் ஊட்டி விட்டு இறகு முளைக்கும் வரை பாதுகாத்து ,பின் தானே உணவு தேட பயிற்சி கொடுக்கிறது .ஒரு பறவையை கவனித்துப் பார்த்தால் தெரியும்.
சிறு பறவை என்று அற்பமாக கூட நினைப்பவர்கள் உண்டு. அதன் பண்பு தனது ஜோடி பறவையுடனே சுற்றும் கூடுகட்டும், முட்டை போடும், அடைகாக்கும் ,குஞ்சு பொரிக்கும் ,உணவு கொடுத்து வளர்க்கும், பறக்க பயிற்சி கொடுக்கும் ,முழுமை அடையும் வரை அதன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளும்.பின் விட்டுவிடும் .
சிறு பறவை தனது வாழ்நாள் சாதனை அது .செம்மையாக செய்கிறது. காற்று புயலுக்கு முட்டை உடைந்தால், குஞ்சு கீழே விழுந்தால், அதன் பின் அதை சேர்க்காது. அடுத்த முயற்சிக்கு போய்விடும் .
இதில் ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஒரு குஞ்சு கீழே விழுந்தால் அதன் வாழ்நாள் மிகக் குறைவு என்பது அந்த பறவை தெரிந்து வைத்திருக்கிறது.
அதனால், அதை மனிதர்கள் எடுத்து வைத்தாலும், அக்குஞ்சை தள்ளி விட்டுவிடும். அந்த துயரத்தில் இருந்து பறவை மூழ்காமல் அடுத்த இயல்பான நிலைக்குப் போய் விடுகிறது. இதுதான் பறவை நமக்கு கற்றுத் தரும் பாடம்.
துன்பத்தை கடக்க நினைக்கும் ஒவ்வொருவரும் தன்னைத்தானே உணர்ந்து தெளிந்து உலக நன்மைக்காகவும். தங்கள் நலனுக்காகவும் அர்த்தமுள்ள வாழ்வை அமைத்து தெளிவாக எளிதாக துன்பத்தை கடக்க தன் குடும்பத்திற்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மை செய்ய முழுமனதுடன் தயார் படுத்திக் கொண்டால், துன்பம் கடந்து இன்பம் என்ற ஏணிப் படியில் ஏறலாம்.
இன்பம், துன்பம் இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றது. இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் மட்டுமே நம்மை வாழ வைக்கும்.
பிறவி எடுத்ததன் அர்த்தம் புரியும் இந்தப் பிறவி! பயன் உள்ள வாழ்வாய் அமையும்.
ஒரு ஆணும் ,பெண்ணும் திருமணம் செய்து கரு உண்டாகி அக்கரு பத்து மாதம் வளர்ந்து முழுமை பெற்று குழந்தை பிறக்கும் போது பெண் வலியைத் தாங்குகிறாள்.
குழந்தை பிறந்த பின் மகிழ்ச்சி அடைகிறாள். அக்குழந்தையை கையில் வாங்கும் தந்தை தன் இதயத்தில் தாங்கி மகிழ்ச்சி அடைகிறான் .
ஒரு இணையரின் வாழ்க்கை முழுமை அடைவது ஒரு குழந்தை பிறவி எடுக்கும் போது அதுவரை பல வலிகளைத் தாங்கி பெற்றோர் தாய், தந்தை என்ற வெற்றிப் படியில் ஏறி வெற்றி என்னும் ‘பிள்ளை ‘கனியை பெற்று விடுகிறார்கள். அதுவே அவர்களின் வெற்றியை நோக்கிய பயணம் ஆகிறது.