இறைவனிடத்தில் ஈடுபாடும், தேவர்களை வழிபடுவதும், பெற்றோர் முதலிய பெரியோர்களுக்கு செய்யும் பணிவிடைகள். தானம், தர்மம், தவம் ,வேள்விகளில் கலந்து கொள்வது ஆசிரமம் வாழ்விற்கு ஏற்றபடி தம்மை எளிமையாக்கி கொள்வது.
மனத்தூய்மையுடன் கூடிய தைரியத்தால் தன்னை அடக்கி சப்தம் போன்ற இந்திரிய விசயங்களைத் துறக்க வேண்டும்.
தனிமையில் இருந்து, சிறிதளவேஉண்டு ,பேச்சையும் மனதையும் அடக்கி. எப்போதும் தியானம், யோகத்தில் ஈடுபட்டு வைராக்கிய வாழ்வை மேற்கொண்டு…
அகங்காரம், மமகாரம், கர்வம், காமம், குரோதம், அபிமானம் போன்றவற்றை எல்லாம் விட்டொழித்து ,சாந்தநிலையை அடைந்தவன் தான் பிரம்மத்தை அடையும் தகுதியை பெறுகிறான்.
“பிரம்மமாகவே” ஆனவன் உள்ளம் தெளிந்தவனாகி விடுகிறான். அவன் வருத்தம் அடைவதில்லை, ஆசைப்படுவதும் இல்லை, அனைத்து உயிரையும் சமமாய் பாவிக்க ஆரம்பிப்பான். அவனே, இறைவனின் பக்தியைப் பெறுகிறான்.
“இறைவன் யார்?” என்றும் இறைவன் செயல்பாடும், முழுமையாக பக்தியினால் அறிந்து கொள்வான். உள்ளதை உள்ளபடி அறியும் இறைவனுல் கலந்து விடுவான்.
இறைவனே கதியென சரணம் அடைந்தவனை நிர்கதியாக விடுவதில்லை. அவன் பாதகமலத்தை பற்றியவர் வாழ்வில் நிலையான ஒரு இடத்தை தருகிறான்.
எந்த கர்மங்கள் செய்தாலும் மனம் இறைவனையே நாடி… அவன் செயல் புத்தி எல்லாம் இறைவனே கதியென அடைந்தவர்க்கு, இறைவன் அருள் கிட்டி இடையூறு நீங்கி பிறவி கடலையும் நீந்தி விடுவான்.
ஆண்டவனை வழிபடுவது ஒரு பலன் என்றால், அடியவரை வழிபடுவது இரண்டு மடங்கு பலன் தரும். அடியவர் உள்ள கோயிலில் ஆண்டவன் உறைகின்றான் .எனவே, அடியார் வழிபாடு உயர்ந்தது.
அதை உணர்ந்து இறை அடியார்களை வணங்க வேண்டும் .இதற்காக வாரியார் ஒரு உதாரணம் கூறுவார் அஞ்சல் தலைமை நிலையத்தில் இட்ட அஞ்சல். அஞ்சல் பெட்டிக்கு வராது. ஆனால் ,அஞ்சல் பெட்டியில் இட்ட அஞ்சல் தலைமை நிலையத்திற்கு வந்து சேர்ந்துவிடும் .
அதுபோல, ஆண்டவனுக்கு தந்த ஒன்று அடியாருக்கு சேராது. அடியாருக்கு தந்தது ஆண்டவனுக்கு சேரும். தலைமை நிலையம் இறைவன். அஞ்சல் பெட்டி அடியார்கள் .என்பதை உணர வேண்டும் என்பார் .எனவே,
கோயில் தலங்களில் மூலக்கடவுளை வணங்குவது மட்டும் போதாது. அடியார்களையும் வழிபட வேண்டும் .இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு புராணக் கதை உண்டு.
குலேச பாண்டியன் என்ற மன்னன் தன்னுடைய நாட்டில் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். அவன் இலக்கியம் போன்ற நூல்களில் தெளிவு கொண்டு விளங்கினான்.
முத்தமிழ் சங்கத்தில் மன்னனும் கூட இருந்து சிறப்புடன் நடத்தி வந்தான்.
மன்னன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன் என்பதை கேள்விப்பட்ட இடைக்காட்டு சித்தர் என்னும் புலவர் பாண்டிய மன்னனைக் கண்டு தான் இயற்றிய தமிழ் பாடல்களைப் பாடிக் காட்ட வேண்டும் என்று நினைத்தார்.
குலேச பாண்டியன் அவைக்கு ஒருநாள் சென்று பாடினார். அப்பாடலில் சொல்சுவை, பொருட்சுவை என அனைத்தும் சிறந்து விளங்கின. ஆனால்,
மன்னன் மனதில் காப்பு உணர்வு இருந்ததால் தலையசைத்தல், முகம் மலர்தல் முதலான பாவனைகளை காட்டாமல் இருந்தார் .
இதைக் கண்ட இடைக்காட்டுச் சித்தர் மன வருத்தம் அடைந்தார். உடனே, சோமசுந்தர கடவுள் திருமுன்னே சென்றார்.
” எம்பெருமானே” இம்மன்னன் கல்வி, கேள்விகளில் சிறந்தவன் என்பதை கேள்விப்பட்டு அவர் முன்னே பாடல்களைப் பாடினேன். ஆனால்,
அவர் ஒரு வார்த்தை கூட பாராட்டாமல் இருந்துவிட்டார். அவர் உண்மையிலேயே என்னை அவமதிக்கவில்லை. சொல் வடிவமாக விளங்கும் அங்கயற் கன்னியாகிய அம்பிகையையும், அதன் பொருள் வடிவமாக விளங்கும் தேவரீரையும் அவமதித்ததாகத்தான் அதன் அர்த்தம். என மனம் நெகிழ்ந்து முறையிட்டார்.
இதை தன் திருச்செவிகளால் கேட்ட சோமசுந்தர கடவுள் இடைக்காட்டு சித்தர்
மனமகிழ்வு அடையும் வகையில் தன் ஞானமயமான லிங்க வடிவத்தை கண்ணுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டார்.
திருக்கோயிலுக்கு வடபுறத்தில் வருகின்ற வைகை ஆற்றின் தெற்கே ஒரு கோயிலை தோன்றச் செய்து அங்கே எழுந்தருளினார்.
சங்கப் புலவர்களும் அங்கு சென்றடைந்து கூடியிருந்தார்கள்.
காலையில் சிவலிங்க மூர்த்தியை வணங்க வந்த அடியார்கள் அவற்றைக் காணாமல் திகைத்தனர். உடனே ,மன்னனிடம் இது பற்றி முறையிட்டனர்.
இதைக் கேட்ட பாண்டிய மன்னன் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானான். பின் தன் உணர்வு பெற்றவனாய், தன் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் குவித்து எம் குல தெய்வமே!
நான் என்ன குற்றம் செய்தேன். தாங்கள் எங்கே எழுந்தருளி உள்ளீர் .என்று பலவாறு புலம்பினான்.
அப்போது பாண்டிய மன்னனை நோக்கி வந்த சிலர் வைகை ஆற்றுக்கு தென்புறத்தில் திருவாலவாய் கடவுள் ,பார்வதி தேவியாரோடு எழுந்தருளி உள்ளார்.
அவரைச் சுற்றி சங்கப் புலவர்கள் சூழ்ந்துள்ளனர், என்று கூறினார் .இதை கேட்ட பாண்டிய மன்னன் உடனே வைகை ஆற்றின் தென்கரையை அடைந்தார். அங்கே ,
எழுந்தருளியுள்ள பெருமானை கண்டு வணங்கினான். , அவன் திருவடிகள் சிவக்கவும், மதுரை நகரம் எல்லாம் துன்பப்படவும், உலகநாயகியான எம் அன்னையுடனே இங்கே எழுந்தருளியதற்கு என்ன காரணம் ?என்று கேட்டார். பின்னர் தேன் விளங்கும் நறுமணம் கமல் மாலை தரித்த சடையுடனே போற்றி! இடப்பாக கொடி விளங்க இடப்ப வாகனத்தில் விளங்குபவனே போற்றி! என பலவாறு போற்றினான் .
அப்போது வெள்ளியம்பல வானராகிய கூடலழகர் பாண்டியனே நீ இடைக்காட்டு சித்தர் பாடிய செய்யுளை அவமதித்தாய் நான் அப்புலவன் மீது கொண்ட கருணையால் இங்கே வந்தோம் என்று அசரீதவாக்காக கூறினார்.
இதைக் கேட்ட பாண்டியன் தன் குற்றத்தை பொறுத்து அருள் புரிய வேண்டும் .என்று மேலும்… மேலும் பிரார்த்தனை செய்தார்.
பின்னர், சோமசுந்தர கடவுள் மன்னனை கோயிலுக்குச் செல்லுமாறு கூறினார்.
பின்னர் தம்முடன் சங்கப் புலவர்களையும் அழைத்துக்கொண்டு மதுரையை அடைந்தார்கள்.
பாண்டிய மன்னர் சங்க மண்டபத்தில் செம்பொன்னாளான ஆசனத்தில் இடைக்காட்டு சித்தரை அமரச் செய்து வெண்பட்டாடை தரித்து, முத்து மாலையையும் தரித்து விளங்கச் செய்தான்.
அதன் பின் ரத்தின, பொன், ஆபரணங்களும், முத்துமாலைகளும் அளவில்லாமல் வழங்கினான்.
மேலும், பணியாளர், தானிய, திரவியங்கள், யானை, குதிரைகள், மட்டும் விளைநிலங்களை தானமாக அளித்து சங்கப் புலவர்களே நான் இடைக்காட்டு சித்தருக்கு செய்த குற்றத்தை பொறுத்தருள்க! என்று வணங்கி கூறினார்.
“அதைக் கேட்ட சங்கப் புலவர்கள்” மன்னா! உன்னுடைய குளிர்ந்த சொல் மழையால் எங்கள் கோபம் குறைந்தது.
என் கடவுளாகிய திருவாலவாய் பெருமான் கருணையால் உமக்கு மிகுந்த புகழும், குறையாத நிதியமும் உண்டாகும் என வாழ்த்தினார்கள்.
இறையருள் பெற்றவர்கள் சோதனை அடையும்போது அவர்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து அருள் புரிவதோடு, நாம் அவர்களை வணங்கும்போது அவர்கள் மூலமாக நாம் வேண்டுவன இறைவனிடத்தில் எளிதாக சென்று விடுகிறது. எனவே, இறையருள் பெற்ற அடியவர் வழிபாடும் மிகச்சிறந்தது.