இந்தப் பிரபஞ்சம் இன்பமயமாக மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்!” “நல்லவைகள் மட்டும் நடந்தால் எத்தனை சந்தோசங்களை அனுபவிக்கலாம்!”
ஏன் தான் இத்தனை துன்பங்களை கொடுக்கிறானோ! இறைவன் என அழைத்துக் கொள்ளும் வார்த்தைகள் தான் அடிக்கடி எல்லோரிடம் கேட்போம்.
அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். அதனால், தான் இந்த வார்த்தை அவர்கள் வாய் உச்சரிக்கிறது.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
இறைவனுக்கு ஈடு இறைவன்தான் அவரது பாத கமலங்களை பக்தியுடன் நினைப்பவருக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலையை மாற்றுவது கடினம். என்பது பொருளாகும்.
ஒருவன் முன் வகை வகையாக இனிப்பு வைத்திருக்கிறார்கள். எல்லாமே அவருக்கு பிடித்தமான இனிப்புகள்.
பார்த்தவுடன் முகத்தில் சந்தோசம். அதே சந்தோசத்துடன் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்.
சிறிது சாப்பிட்டவுடன் நாக்கு திகட்டுகிறது.இருந்தாலும் இனிப்பின் மேல் உள்ள ஆசையால் இன்னும் எடுத்து சாப்பிடுகிறார்.
இப்போது ஒரு வகையான குமட்டல் வருகிறது. ஆசை இன்னும் விடவில்லை. இன்னும் சிறிது எடுத்து சாப்பிடுகிறார்.
வாந்தி வருகிறது வாந்தி எடுத்த பின் உடல் சோர்வு ஏற்பட்டு படுத்து விடுகிறார்.
சுறுசுறுப்பான மனிதர் அவருக்கு பிடித்த உணவை ஆசைப்பட்டு அதிகம் சாப்பிட்டதன் விளைவு உடல் சோர்விற்கு தள்ளப்பட்டார்.
ஒருநாள் இப்படி என்றால் நாள்தோறும் இவ்விதம் சாப்பிட்டால். சாப்பிட கூட எழுந்திருக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்க நேரும்.
ஒரு உணவே இப்படி என்றால்…..! ஆசைப்பட்ட எல்லாம் எளிதாக கிடைத்தால். தேடல் என்பது இல்லாமல் போகும்.
இதற்கு கண்ணதாசன் அவர்கள் ஒரு விளக்கம் சொல்கிறார்கள் எதிரில் பரந்த கடலில் கடல் நீர் இருக்க… குடிநீரைத் தேடி அலைய வைக்கிறான் இறைவன்.
உப்பு நீராக கடல் நீர் இருப்பதால்தான், அடிநீரைத் தேடி முயற்சிக்கிறான். முயற்சி வரவேண்டும் என்றால் துன்பம் இருக்க வேண்டும்.
துன்பம் இருப்பதால்தான் அதை எதிர்க்கும் துணிவும் தன்னம்பிக்கையும் பிறக்கிறது. தன்னம்பிக்கை பிறப்பதால் தான் வாழ்வில் சாதிக்க முடிகிறது.
சாதனை செய்தவர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் எதிர்ப்புகள், தடைகள், துன்பங்கள் இல்லாமல் இல்லை.
ஒவ்வொரு தடை கற்களையும் படிகற்களாக மாற்ற முடிந்தவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். எனவே,
தவறுகள், தடைகள் இவற்றின் மூலம் தான் மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். என்பதற்காக இறைவன் ஆசையை தூண்டி விடுகிறான்.
கிணற்று நீரில் தனது பிம்பத்தை பார்த்த சிங்கம் வேறொரு சிங்கம் இருப்பதாக எண்ணிக் கிணற்றில் குதித்து உயிர் விடுகிறது.
மனிதன் பிம்பத்தை பார்க்கிறான். தனது உருவம் என தெரிந்து அமைதியாக இருக்கிறான். இது போல் நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் ஒன்றுதான்…
இரண்டாக எண்ணும் போது தான் ஆசை வருகிறது. அதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதினால் பாவங்களை செய்கிறான்.
பாவங்கள் செய்வதால் பிறவி உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் வந்துவிட்டால்… ஆசை, கோபம், பாவம் ,பிறப்பு, துன்பம் இவற்றிலிருந்து மீண்டு விடலாம்.