தியான ‘பயிற்சியால் துன்பத்தை வெல்லும் சக்தியை பெற்றதனால் நம் மனம் ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றலைப் பெற்று விடும்.
அதற்கு ஒரு கதை கூட கூறுவார்கள்… ஒரு சீடர் தவம் செய்தாராம் அவர் இருந்த வழியாக ஒரு தாசி சென்றாளாம் அவளைப் பார்த்த கண்கள் அவள் அந்த தெருமுனை செல்லும் வரை பின்னால் சென்றதாம்.
அவள் சென்ற பின் நாம் தவறு செய்து விட்டோம். என எண்ணி மறுநாள் கண்களை மூடிக்கொண்டாராம்.
மறுநாள் அந்த தாசி ஆச்சீடனை கடக்கும் போது நறுமண வாசனை உடன் மலர்களின் வாசனையும் போட்டி போட்டுக் கொண்டு அவர் நாசியில் சென்று அவள் தெரு முனையை கடக்கும் வரை நாசி அவள் பின்னால் சென்று வாசம் பிடித்ததாம்.
அவள் சென்ற பின் மறுபடியும் தவறு செய்ததே உணர்ந்தவர். மறுநாள் கண்களை மூடிக்கொண்டு மூக்கை விரல்களால் பிடித்துக் கொண்டாராம்.
மறுநாள் தாசி சீடரை கடந்து சென்றாளாம் அவள் அது அணிந்திருந்த கொலுசு மணிகள் சத்தம் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்ததாம் .
அவள் தெருமுனையைக் கடக்கும் வரை காது அவள் பின்னால் சென்றதாம். அவள் சென்ற பின் மீண்டும் தவறு செய்ததை உணர்ந்த சீடன் மறுநாள் காதுகளில் பஞ்சுகளை அடைத்துக் கொண்டு கண்களை மூடி விரல்களால் மூக்கை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாராம்.
மறுநாள் அந்த தாசி வரும் நேரம் வந்து கொண்டு இருந்ததாம். இந்நேரம் அவள் வந்து கொண்டிருப்பான்..
நடந்து நம் அருகில் வந்திருப்பாள். நம்மை மெது மெதுவாக கடந்து இருப்பாள். தெருமுனைக்குப் போய் இருப்பாள். என மனம் அவள் பின்னால் போய்க்கொண்டிருந்ததாம்.
இப்படி அலைய விட்டுக் கொண்டு இருந்தால் இது தவமும் இல்லை. தியானமும் இல்லை .
கண்முன் ஒரு அழகிய பெண் சென்றாலும் அவள் கண்ணுக்குத் தெரியக்கூடாது. அவனுள் இருக்கும் கடவுள் சக்தி மட்டுமே தெரிய வேண்டும் .
கண்முன் மலைபோல் செல்வம் கொட்டி கிடந்தாலும் அதன் மேல் ஆசை வரக்கூடாது. பற்றற்ற நிலை வரவேண்டும்.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை மாறி எல்லோரும் சமம் என்ற சமநோக்கு நிலை வர ஐம்புலன் அடக்கம் வேண்டும். என்பதை,
பரமஹம்சர் பதுமைகளை வைத்து விளக்குவார். உப்பால் ஒரு பதுமை, துணியால் ஒரு பதுமை, கல்லால் ஒரு பதுமைகளை எடுத்து தண்ணீரில் போட்டால்…
முதல் உப்பு பதுமை கரைந்து விடும். ‘மனிதனைக் குறிக்கும்’ இரண்டாவது துணிப் பதுமை தண்ணீரை உறிஞ்சி உப்பி வரும் மாறாது இருக்கும். அது ‘உண்மையான பக்தனை குறிக்கும்’ மூன்றாவது கல் பதுமை நீரை ஒட்டவிடாது.அது கொஞ்சம் கூட ஞானம் நுழையாத இதயத்தை உடைய ‘உலகப்பற்று உள்ளவரைக் குறிக்கும்’. என்று விளக்குவதில் நன்கு புரியும்.
ஒரு அறிவாள் செய்ய வேண்டும் என்றால் இரும்பை பழுக்க நெருப்பில் காயவைத்து சம்பட்டியால் அடித்து… அடித்து வளைத்து செய்கிறார்கள்.
அதுபோன்று, நம் மனதையும் இறைவன் சோதனை என்னும் சம்பட்டியால் அடிக்க… அடிக்க மனம் பக்குவப்பட்டு தெளிந்த ஞான சக்தி பெறக்கூடிய வல்லமை பெற்று இறைவனை கண் முன் நிறுத்தி வழிபடும் ஆற்றல் பெருகுகிறது. அப்போது நம் மனதில் இறைவனை காணலாம்.