இறைவன் நம் முன் ஏன் வரவிவரவில்லைல்லை? என்பது சிலரது கேள்வியாக இருக்கிறது.
“இறைவன் என்பவன் யார்?” எல்லாம் தெரிந்தவன், வல்லவன், எங்கும் நிறைந்தவன், ஆக்கமும் அவனே, அழிப்பதும் அவனே, அப்படிப்பட்ட கடவுள் நம்முடன் வந்தால் திருப்பி அனுப்புவோமா ?மாட்டோம்.
அதுதான் உண்மை! கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கடவுள் மீதுதான் மரியாதையும், மதிப்பும் அதிகமாகிறது.
ஒரு மந்திரி நமது ஊருக்கு வந்தால் நாம் என்ன செய்கிறோம். எங்களுக்கு தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும், சாலை வேண்டும் என்றெல்லாம் கூறி மனு கொடுத்து அவரை உரிய நேரத்திற்குப் போக விடமாட்டோம்.
அப்படிப்பட்ட நாம் இறைவனே! வந்து விட்டால் !சும்மா விடுவோமா? சொர்க்கத்தை இங்கே கொண்டு வந்து விடுங்கள். இல்லையென்றால் உங்களைப் போக விடமாட்டோம்.
என்று கூட கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! ஆகவே ,நம் முன் இறைவன் வரமாட்டான்.
” எத்தனையோ மகான்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்றார்கள் நமக்கு இறைவனின் தரிசனம் கிடைக்காததற்கு காரணம்?”
நம் முன்னோர்கள் கடைபிடித்த வழியை நாம் கடைபிடிக்கவில்லை. சிலர் நினைக்கலாம் முன்னோர்கள் செய்தவைகளை நாங்கள் கடைபிடிக்கிறோம். என்று….
அவர்கள் தவம் செய்தார்கள். நாமும் தவம் செய்கிறோம், அவர்கள் தியானம் செய்தார்கள். நாமும் தியானம் செய்கிறோம், அவர்கள் வெயில் ,மழை இவற்றை சகித்துக் கொண்டார்கள். நாமும் அவற்றை சகித்துக் கொள்கிறோம். ஆனால்,
அவர்களுக்கு கிடைத்த பலன் நமக்கு கிடைப்பதில்லை அது ஏன் ?
அவர்கள் தங்களுக்கு எதிலும் ஆசைகள் இருக்கக் கூடாது என்பதற்காக தவம் செய்தார்கள். நாமோ நம் மனதில் உள்ள ஆயிரம் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக தவம் செய்கிறோம்.
இறைவனின் பாதங்களைப் பற்றுவதே வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்தார்கள் 24 மணி நேரமும் இறைவன் திருவடிகளை சரணம் என நினைத்திருந்தனர்.
நாமும் தியானம் செய்கிறோம். எதன் மீது பணத்தை எப்படி சேர்ப்பது! அதை எப்படி இரட்டிப்பாக்குவது !என்று 24 மணி நேரம் பணத்தைப் பற்றிய நாம் தியானித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த காரணங்களில் தான் அவர்கள் பெற்ற பலனை நாம் பெறவிடாமல் தடுக்கின்றன.
மனதில் உள்ள ஆசைகளுக்காக இறைவனை வழிபடுவது சரியல்ல. ஆசைகளைப் போக்கிக் கொண்டால் தான் உண்மையான சுகத்தை அடைய முடியும்.
வருகின்ற ஆசைகளை தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வதில் நாம் வெற்றி அடைய முடியாது. ஆசைகள் தீராமல் வருத்தம் தான் மிஞ்சும்.
ஆசை யாருக்கும் நிறைவு தராது .பத்து ரூபாய் நம்மிடம் இருந்தால் 100 ரூபாய் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
ஆயிரம் ரூபாய் இருப்பவர் லட்சாதிபதியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். லட்சாதிபதியாக இருப்பவர் கோடீஸ்வரராக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். இதற்கு முடிவு தான் எங்கே?
நமது மனதில் ஆசைகள் இல்லாமல் இருக்க முயற்சி செய்து இறைவன் பாதங்களைப் பற்றுவது ஒன்றுதான் தேவை என்ற நிலை வந்தால்!
நமக்கு இறைவனின் அருள் நிச்சயமாக கிடைக்கும். இறைவனுக்கு யார் மீதும் விருப்போ! வெறுப்போ கிடையாது.
மனிதர்கள் அவரவர் செய்த கர்மாக்களுக்கு தகுந்த பலனை இறைவன் கொடுக்கிறான்.
நீதிபதி எல்லோருக்கும் சமமாக தண்டனை கொடுப்பதில்லை. அவரவர்கள் செய்த தவறுகளுக்கு தகுந்த தண்டனையை அவர் அளிக்கிறார்.இதற்காக யாராவது நீதிபதியை நிந்திக்க முடியுமா?
அதுபோல் நாம் செய்த கர்மாக்களுக்கு தகுந்த பலனை இறைவன் கொடுப்பதால் அவனை நாம் குறை கூற முடியாது.
ஒருவன் தனக்கு பரம சுகம் வரவேண்டும் என்று விரும்புகிறான். பரம சுகம் வேண்டுபவன் உலக விசயங்களில் மூலம் சுகம் கிடைக்கும் என எண்ணக்கூடாது .அது இறைவனின் அருளால் தான் கிடைக்கும். ஆகவே,
ஒருவன் மிகுந்த பக்தியுடன் இறைவனை ஆராதித்து அவனது அருளைப் பெற வேண்டும் .
இறைவனை பக்தியுடன் ஆராதிப்பது எவ்வாறு என நினைக்கலாம்! நாம் செய்யும்பூசையோ, ஜெபமோ மற்றவர்கள் பார்ப்பதற்கு அல்ல !நாம் செய்யும் நல்ல காரியம் விளம்பரத்தை எதிர்பார்த்து செய்யக்கூடாது.
நாம் செய்வது இறைவனுக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரிவதற்காக அல்ல! என்பது நமக்கு நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும்.
சிலர் பூசை செய்யும் போது தங்கள் விருப்பங்களை எல்லாம் அடைவதற்காக நிறைய சொற்களை சேர்த்துக் கொள்வார்கள். இது தேவையா? நமக்கு என்ன வேண்டும். என்று இறைவனுக்குத் தெரியாதா?
நாம் எதுவும் சொல்லத் தேவையில்லை ?அவனுக்கே எல்லாம் தெரியும் .அவன் திருப்தி அடைந்தான் என்றால் இனி நமக்காக வேண்டியது எதுவும் இல்லை.
குசேலன் பகவானுடைய அரண்மனைக்குச் சென்ற போது தனக்கு இது வேண்டும்? அது வேண்டும்? என்றெல்லாம் சொல்லவில்லை.
ஒரு பிடி அவலை பகவானிடம் கொடுத்தான். இதனால் கிருஷ்ண பரமாத்மாவிற்கு சந்தோசம் ஆகட்டும். என்ற ஒரே எண்ணத்துடன் கொடுத்தான்.
அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார். தனக்கு திருப்தி ஆகிவிட்டது என்றார் பகவான். அதே சமயத்தில் குசேலன், குபேரன் ஆகிவிட்டான்.
சகலமும் தெரிந்த பகவானிடம் நாம் ஒன்றும் கேட்க வேண்டியதில்லை. என்பதற்கு இது ஒன்று மட்டும் போதாதா! அதனால், நாம் செய்யக்கூடிய நல்ல காரியமோ? பூசையோ பிரசாரத் திற்காக அல்ல.
அவற்றினால் இறைவன் திருப்தி அடைய வேண்டும் என்ற என்று நம் எண்ணம் இருக்க வேண்டும். பகவானுடைய பெயரை பக்தியுடன் சொன்னால். அதுவே ,பெரிய தர்மம் ஆகும்.
பத்து நிமிடமாவது இறைவனின் பெயரைச் சொன்னால்! அது பெரும் நற்காரியமாகும்.
சிலர் பூசை செய்து கொண்டே இருப்பார்கள். அப்போது அவர் சிந்தனை ஆயிரம் யோசனை செய்து கொண்டிருப்பார். அவனிடமிருந்து இவ்வளவு பணம் வரவேண்டும்! இவன் மீது கேஸ் போட வேண்டும்! என்று பல யோசனையுடன் இருப்பார்கள்.
அது தவறு! பத்து நிமிடமாவது மற்ற செயல்களை மறந்து மனதை ஒருநிலைப்படுத்தி பகவானுடைய பூசையில் கவனம் செலுத்தினால் நிச்சயம் இறையருள் கிடைக்கும்.
மனதை அலைபாய விட்டு பல மணி நேரம் பூசைசெய்வதை விட குறைந்த நேரம் பூசை செய்தாலும் பக்தியோடு செய்தால் அது விசேசமான பலனை தரும். ஆகவே,
பக்தியுடன் இறைவனின் பாதத்தில் வணங்கி சிறம் தாழ்த்தி சரணாகதி அடைந்தால். இறையருளும், சகல நலனும் தானே கிடைக்கும்.