இந்து கோயில்களுக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உண்டு. சிவன், பார்வதி, கணேசன், முருகன் என குடும்பமாக கோயிலில் குடி கொண்டு இருந்து அருள் ஆசி வழங்குகிறார்கள்.
குடும்பமாக வாழ வேண்டும் என வாழ்வியல் தத்துவத்தை விளக்கி கற்பிப்பதே திருக்கோயில் ஆகும்.
மனிதன் வாழ முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதில் இந்து கடவுள்களின் நோக்கமும் கூட…
இறைவனுக்கு மனைவி உண்டு. மனிதனுக்கும் மனைவி உண்டு. இறைவனுக்கு குழந்தைகள் உண்டு .மனிதனுக்கும் குழந்தைகள் உண்டு. அருளும், அறிவும், அன்பும் நிறைந்த இடம் கோயில் இந்த மூன்று மூன்றும் மனிதனின் வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும் என உணர்த்துவதே கோயில் தத்துவமாகும்.
அருளும் குணமும், அன்பான நேயமும், அறிவான வாழ்வும் வாழ்ந்தால் இறையருள் உண்டாகி வீடு பேறு அடைய வழி வகுக்கும் என்பதை நமக்கு சொல்லிக் கொடுப்பது ஆலயமாகும்.
மனிதன் தனக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தாய், தந்தையாக விளங்குகிறான். இறைவன் எல்லோருக்கும் வெறுப்பு இன்றி தாய், தந்தையாக விளங்குகிறான்.
தாழ்ந்தவன் ,உயர்ந்தவன் என்ற பாகுபாடு எல்லாம் இறைவனுக்கு இல்லை. எந்த மனிதன் உடல் வருத்தி, உள்ளம் வருத்தி தன்னை சரணாகதி அடைகிறானோ! அவனுக்கு வரம் கொடுத்து அருளும் குணம் ஒன்றே அவனுடையது.
உண்மையான பக்திக்கு மட்டுமே அடிபணிபவன் இறைவன். இறைவனை நாம் எவ்வாறு நினைக்கிறோமோ! அவ்வாறாக வந்து அருள்பவன் இறைவன்.
ஐந்து தீபம் கோயிலில் தீவார்தனை காட்டுவார்கள். பஞ்சமுக தீபம் காட்டிவிட்டு பின் ஒரு தீபம் காட்டுவார்கள். மனித உடலில் உறுப்புகள் ஆகிய ஐந்து புலன்களையும் அடக்கி ஒருமுகப்படுத்தி பார்க்கும்போது நான் இருக்கிறேன் என இறைவன் அருள்பான் என்பதை காட்டவே அத்தீவார்த்தனை காட்டப்படுகிறது.
எண்ணங்களால் உயர்ந்தவன் இறைவன் என்பதால் தான் கோயிலின் கோபுரம் உயர்ந்து நிற்கிறது.
அவரவர் செய்யும் பாவம், புண்ணிய பலனாகவே இன்ப, துன்பத்தை அடைகிறான். அதற்கு இறைவன் காரணம் அல்ல. என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் அருள் உள்ளம் கொண்டவன். தன்னை நாடும் பக்தர்களுக்கு எந்த துன்பத்திலும் காக்க வல்லவன் இறைவன். எனவே, தாயும் தந்தையுமாக இருந்து நம்மை காக்கும் இறைவன் நமது குடும்பம் வாழ வைக்கும் தெய்வம்.