பிரார்த்தனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. தனிமனித பிரார்த்தனை
2. கூட்டு பிரார்த்தனை.
தனி மனித பிரார்த்தனை:- முனிவர்கள் தவ வலிமையை பெருக்கிக் கொள்ளும் பிரார்த்தனை.
அசுரர்கள் இறைவனை நோக்கி தவம் இருந்து பெற்ற பிரார்த்தனை.
மனிதர்கள் இறைவனை நினைத்து வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை. இப்படி தனிப்பட்ட ஒருவர் செய்யும் பிரார்த்தனை தனி மனித பிரார்த்தனையாகும்.
கூட்டுப் பிரார்த்தனை குடும்பத்தினர் கூடி பிரார்த்தனை செய்யும் பிரார்த்தனை.
உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து வணங்கும் பிரார்த்தனை. மக்கள் எல்லோரும் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை இவை எல்லாம் கூட்டுப் பிரார்த்தனை ஆகும்.
இதில் எது சிறந்தது என ஆய்வதை விட “எண்ணம்” சிறந்ததாக இருக்க வேண்டும். பிரார்த்தனை ஒரு அபூர்வ சக்தியை கொடுக்கவல்லது. அற்புதங்களை நடத்த ஆற்றலை தரவல்லது.
எத்தனை துன்பம் வந்தாலும் இறைவா! என மனம் உருகி நினைக்கும் போது மனப்பாரம் குறைந்து இலவம்பஞ்சு போல் லேசாகி போவதை ஒவ்வொரு மனிதனும் உணர முடியும்.
அப்படி அவன் உணரும்போது இறைவன் மேல் எல்லா பாரத்தையும் இறக்கி வைத்து விட்டு நிம்மதியாக இருக்கவும், தூங்கவும் முடிகிறது.
டாக்டரால் கைவிடப்பட்ட எத்தனையோ நோயாளிகள் பிரார்த்தனையால் குணமடைந்தை டாக்டர்களே ஒப்புக் கொள்வார்கள்.
சில சமயங்களில் டாக்டரே இந்த’ கேஸ் ‘முடிந்து போனது. பிரார்த்தனை செய்யுங்கள் ஒருவேளை… என இழுப்பார்கள் .
அந்தப் பிரார்த்தனைக்கு ஒரு ‘சக்தி ‘இருப்பது மறுக்க முடியாத உண்மை. உடலை சுத்தம் செய்ய தினம் குளிக்கிறோம். மனதை சுத்தப்படுத்த இறைவன் மேல் வைத்திருக்கும் அன்பு, பக்தி அதன் மூலம் நாம் நம்மை ஒரு முகப்படுத்தி தியானம் செய்யும் நிலை அதுவே பிரார்த்தனையாகும்.
நாள்தோறும் இறைவனை பிரார்த்திக்கும் போது மனம் தூய்மையாக இனம் புரியாத ஆனந்த நிலையை அடைய முடியும்.
நான் நாள்தோறும் இறைவனை வணங்குகிறேன். அமைதியோ, ஆனந்தமோ கிடைக்கவில்லையே! என வருந்துபவர்கள் உண்டு.
தனக்காகவே வேண்டி பொன் வேண்டும், பொருள் வேண்டும், மண் வேண்டும், மனை வேண்டும், என தொடர்ந்து வேண்டும்…. வேண்டும் என வேண்டும்போது ஆசை அதிகரித்து. அதுவே, பேராசையாக விஸ்வரூபம் எடுத்து அந்த விஸ்வரூபம் நம்மை விழுங்கி விட்டபின் நாம் எப்படி அமைதியோ, ஆனந்தமோ பட முடியும்.
உங்களிடம் எதுவுமே இல்லை என்றாலும் பரந்த மன நிறைவுடன் தன்னைப் பற்றி சிறிதும் நினையாமல் பிறர் வருந்துவதை பார்த்து இறைவா! இவர் துன்பம் போக்கு என வேண்டும் போது…
பிறருக்காக பிரார்த்தனை செய்யும் மனம் கண்டு இறைவன் மனம் மகிழ்ந்து அவர்கள் துன்பம் போக்குகிறான். அந்த நிலைகண்டு ஏற்படும் மகிழ்ச்சியே ஆனந்த நிலையாகும்.
வள்ளலார் வாடிய பயிரை கண்டபோது எல்லாம் தான் வாடியதால் தான் உயர்ந்த உன்னத நிலையே அடைய முடிந்தது. பிரார்த்தனை என்பது கட்டுப்பாடுடன் அமைந்த நெறி முறையாகும்.
அதற்குப் பயிற்சி அவசியம். அந்தப் பயிற்சியே ஆற்றலாக வெளிப்படுகிறது. அந்த ஆற்றலை உலக நன்மைக்காக உழைக்கும் மனம் கொண்டதாக விளங்குகிறது.
மன வலிமையின் உச்ச நிலை அறிக்கை தான் தியானம் என அழைக்கப்படுகிறது.
சொல்லும், செயலும் ஒன்றைப் பற்றி ஒன்றி செல்ல வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி.
பொறுமையைக் கடைப்பிடித்து இருப்பதே மிகப்பெரிய பிரார்த்தனை யாகும் என்கிறார் புத்தர் .
மனதில் பொறுமையும், சலனமின்மையும் இருக்கும் போது யார் என்ன கூறினாலும் அதில் மனம் கவலை கொள்ளாது. அமைதியுடன் தனது இலக்கை நோக்கிச் செல்லும்.
இலட்சியத்துடன் உலக சக்தியோடு தொடர்பு கொள்ளும் போது மனதிற்குள் ‘சக்தி ‘பாயத் தொடங்கும். இதனால் மனம் புத்துணர்ச்சி பெற்று ஆன்ம பலம் கிடைக்கிறது.
அந்த ஆன்ம பலம் கிடைக்கும்போது நாம் இறைவனுடன் ஒன்றாக கலந்து ஐக்கியம் மாகிறோம்.
ஒருவனிடம் செல்வம் நிறைந்திருந்தாலும் அவனால் மன அமைதியுடன் வாழ முடியாது. மனம் அலைபாயும் உள்ளத்துடன் வாழ்ந்து கொண்டு உலண்டு கொண்டு இருப்பான்.
இறை பக்தி கொண்ட ஒருவன் வாழ்வில் இன்பம், துன்பம் இரண்டையும் சமமாய் ஏற்றுக் கொண்டு. அமைதியான வாழ்வு வாழ்வான். அந்த வாழ்வை அவனுக்கு கொடுப்பது பிரார்த்தனையே ஆகும்.
கடவுளை முறையான வழியில் தேடுகிறவர்களுக்கு அவன் தென்படவே செய்கிறான். என்கிறார் மேல்நாட்டு அறிஞர் ‘பர்ன்ஸ்’ என்பவர்.
ஒரு மனிதனுக்கு ஒரு நாள் உணவு இல்லை என்றால் அவன் எத்தனை துன்பப்படுகிறான். அதே போன்று பிரார்த்தனை இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது என்கிறார் மகாத்மா காந்தி.
அந்த உயரிய நிலையை நாமும் அடைய வேண்டும். என்றால், முறையான பிராத்தனையால் நம் மனதை ஒருமுகப்படுத்தி உயர்வு அடையலாம்.
இறைவன் என்பவன் எங்கோ! இருக்கிறான் என நினைக்க வேண்டாம். உண்மையான பக்தியால் அவனை நம் அருகில் கொண்டு வர முடியும். அப்படி நாம் கொண்டு வந்து விட்டால், நம் கண்கள் பிரகாசமாகும்.
நமது சிந்தனையில் எப்போதும் தெளிவு உண்டாகும். இறைவன் நம்முடனே இருப்பதாக ஒரு ஆத்ம திருப்தி வந்துவிடும்.
நமது மனம் இறைவனை சிந்திக்க… சிந்திக்க ஆழமாக போய் உள்ளே போகிறோம். அவ்வாறு போகும்போது இறுதியில் ஒரு புள்ளியில் முடிவடைகிறது. அப்புள்ளியே ஒளிபிழம்பு என்கிறார்கள் ஞானிகள் .
அந்த லேசான அரிய ஒளி பிழம்பில் நாம் இந்த பிரபஞ்சத்துடன் ஐக்கியமாகி விடுகிறோம். நாம் ஆழ்ந்த பிரார்த்தனை செய்யும் போது நமக்கு இத்தகைய அனுபவம் கிடைக்கிறது.
இப்படிப்பட்ட அனுபவம் தினந்தோறும் கிடைக்கும் போது நாம் தூய்மை அடைந்து மேன்மை அடைகிறோம் எனவே எல்லோரும் தூய்மையும் ,மேன்மையும் அடைய வேண்டும் என்றால் இறைவனின் திருவடியை சரணடைய வேண்டும் அப்படி சரணடைந்த இந்த உடல் புனிதம் அடைகிறது.
மனத்தால் எல்லா உயிர்களையும் நேசிக்க முடிகிறது. அவ்வாறு நேசிக்கும் போது அதுவே இறைவனுக்கு செய்யும் உண்மையான பிரார்த்தனையாக, பூஜையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.