ஒருவருடைய வாழ்வு மேன்மை அடைவதற்கும். தாழ்ந்து போவதற்கும் அவர் மனமே காரணமாகும்.
மனதின் எண்ணமே செயல் பாட்டுக்கு காரணமாகிறது. ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளுமா நல்ல எண்ணங்கள் நிறைந்து இருக்கிறது.
அதை எல்லோரும் பயன்படுத்துவதை விட தீய எண்ணங்களில் கவனம் செலுத்தி தங்கள் சக்தியை விரயம் செய்து மனதை துன்பத்தில் தள்ளி வேதனையாகிய கடலில் தத்தளிக்கிறார்கள் .
பக்தி என்ற போர்வையில் பகட்டான ஆடம்பரத்தில் தங்களை வெளிக்காட்டி கொள்பவர்கள். உண்மையான பக்தியாளர் என இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பக்தி என்பது மனத்
தூய்மையில் பிறப்பதாகும்.
இறைவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பிற்கு மட்டுமே இறைவன் கட்டுப்படுகிறான். எளியோர் என்ற பாகுபாடு எல்லாம் அவனுக்கு கிடையாது.
உண்மையான அன்பு எங்கு இருக்கிறதோ! அங்கு ‘வா ‘என அழைத்தால் தயங்காமல் வந்து நிற்பவன் இறைவன்.
இதற்கு நமது முன்னோர்கள் ஒரு கதை கூறுவார்கள். ராமு, சோமு என்ற நண்பர்கள் சாமி தரிசனம் காண கோயிலுக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.
செல்லும் வழியில் ஒரு கண்மாய் இருந்தது. அதில் கெண்டை மீனும் கெளுத்தி மீனும் துள்ளி விளையாடின. சூரிய ஒளி மீனின் செதில்களில் பட்டு பளபளர்த்தது.
கண்ணை கவர்ந்து நாக்கில் எச்சில் ஊறியது இருவருக்கும். ராமு கூறினான் சோமு மீனை பிடித்து சுட்டு சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு போகலாமா? என்றான்.
உடனே சோமு வேண்டாம்! வேண்டாம்! கோயிலுக்கு செல்லும்போது மீன் சாப்பிட்டுவிட்டு செல்லக்கூடாது என்றான்.
அவன் வாய் இப்படி கூறினாலும் அந்த மீனை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என அவன் மனம் நினைத்து. நாக்கு ருசித்தது.
ராமு ,மீன் சாப்பிடும் எண்ணத்திலிருந்து மீண்டவனாக இல்லை. சோமு! நான் இந்த மீனை பிடித்து சுட்டு சாப்பிடத்தான் போகிறேன் என்றான்.
இதைக் கேட்ட சோமு கோவிலுக்கு என வந்துவிட்டு மீனை சாப்பிடுவதாவது. நீ சாப்பிட்டு வா! நாள் சாமி தரிசனம் காணப் போகிறேன் என சோமு சென்று விட்டான்.
ராமு தனது தோளில் கிடந்த துண்டை விரித்து மீனைப் பிடித்தான். பக்கத்தில் கிடந்த சுல்லிகளை எல்லாம் பொறுக்கி வந்தான். ராம செயல்கள் இப்படி இருந்தாலும்…
அவன் மனமோ! இந்நேரம் கோயில் அருகில் சோமு சென்றிருப்பான். நான் தான் போகாமல் இந்த மீனை கண்டதும் சவளப்பட்டு போனேன். என மனம் எல்லாம் கோயிலை நினைத்துக் கொண்டிருந்தது.
சோமு கோயில் சன்னதி முன் நின்று கண்களை மூடி சாமியை நினைத்தான் .ராம மீனை சுட்டு சுவைப்பது போன்ற காட்சி தான் மனக்கண்ணில் வந்தது.சே..! என கண்களைத் திறந்து கடவுளே! எனப் பார்த்தான்.
கடவுள் தரிசனம் கண்டாலும் மனம் ராமுவை சுற்றி சுற்றியே வந்து கொண்டு இருந்தது.
அதே நேரத்தில் ராமு மீனை சுட்டு திருப்தியாக சாப்பிட்டு விட்டு ,குளத்தில் குளித்து நனைந்த உடைகளுடன் அப்படியே கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் கண்டான்.
ராமுவிற்கு கடவுள் அருள் கிடைத்தது. மோட்சம் போனதாக கூறுவார்கள். நம் மனதை ஒருமுகப்படுத்தி தான் இறைவனை வணங்க வேண்டும். அப்படி வணங்கும் போது தான் இறைவன் அருள் கிடைக்கும்.
மனம் ஓரிடமும் செயல் ஓரிடமாக இருந்தால்… கடவுள் அருளும் கிடைக்காது. நாம் செய்யும் செயலும் சரியாக வராது. என்பதை விளக்கவே நம் முன்னோர்கள் இப்படி ஒரு கதையைக் கூறி வைத்திருக்கிறார்கள்.
“நாமும் மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியை சிறிது சிறிதாக பயின்று வரலாமே!”