மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
பக்தர்களின் மனம் என்னும் மலரில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர்கள். இந்த உலகில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்.
இறைவனை ஏன் வணங்க வேண்டும்? வணங்காமல் வாழ முடியாதா? என கேட்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் உண்டு.
ஏன் வணங்க வேண்டும்? என எண்ணிப் பார்த்தால் விளங்கும். இந்த உடல் ,உயிர், மண், விண் ,சூரிய ,சந்திர, வாயு மண்டலங்கள் என இந்த பூமியில் நாம் வாழ்வதற்காக எல்லாம் தந்திருக்கும் இறைவனுக்கு நாம் என்ன தரப் போகிறோம்? பொன்னையா! பொருளையா!
யாதும் உடையவன் இறைவன். அவன் பொன்னையும், பொருளையும் எதிர்பார்க்க மாட்டான். மெய் அன்பை மட்டுமே விரும்புபவன் இறைவன்.
நாம் நினைக்கிறோம் இறைவன் மனிதனை மட்டும் தானே படைத்தான். நாம் தானே நாகரிகமாக வாழ்வதற்கான பொருள்களை கண்டுபிடித்தோம் என எண்ணலாம்.
கண்டு பிடிப்பதற்கான மூலப்பொருள் இறைவன் படைத்ததாக தானே இருக்கிறது. அந்த மூலம் அவன் என அறியும்போது இறைவனை வணங்குவதால் தவறு ஒன்றும் இல்லையே!
விலங்குகளும், பறவைகளும் உண்ணுகின்றன, உறங்குகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன.
மனிதனும் அவ்வாறு உண்டு, உறங்கி, மடிவதில் என்ன பெருமை ? இறைவனை வணங்க வேண்டும். இறை நாமத்தைப் பாட வேண்டும், கேட்க வேண்டும் ,மெய்மறந்து நம்மையே அவன் பால் சரணடைய வேண்டும்.
அவ்வாறு… சரணடைவதால் இந்த பூமியில் நாம் பிறந்த பலனை இறைவன் மெய்யுருகி ஏற்றுக் கொள்வான்.
இதற்கு அடிப்படையாக இருப்பது தான் வழிபாடுகள். எங்கும் நிறைந்த பரப்பிரமத்தை மூலமாக எண்ணி வழிபடும் போது நிச்சயம் பலன் கிடைக்கத் தான் செய்யும் .
இயற்கையையும், தேவதைகளையும் வழிபடுவது அடிப்படை ஆரம்ப நிலை அவற்றிலும் இறைவன் இருக்கிறான். எங்கும் நிறைந்த இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறான் என எண்ணி வழிபடும்போதே இறைவனை நேரில் வழிபடுவதற்கான பலன் கிடைத்து விடும்.
யாருடைய இதயமும், ஆத்மாவும் இறைவனுக்கே அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறதோ அவனை “சாது” ஆவான்.
அவனுக்கு எல்லாம் ஒன்றே பொன்னும் ,பெண்ணும், மண்ணும் ஒன்றாக எண்ணக்கூடிய பக்குவம் அடைந்தவன். உலக மனிதர்கள் சாதாரணமாக நினைப்பது போல் நினைக்க மாட்டார்கள்.
அவர்களை விட்டு தூர விலகிய நிற்பார்கள். பெண்கள் அருகில் வர நேர்ந்தால் தாயைப் போல் வணங்கி தொழுவார்கள்.
எல்லா உயிரிடத்தும் இறைவனை காண்பதால் எல்லோருக்கும் தொண்டு செய்து யாரிடத்தும் வேறுபாடு காணாத மனதுடன் எல்லோருடன் அன்பு காட்டி தொண்டு செய்பவனே சாதுவாக இருக்கிறான்.
உடல் இறந்த பின்பும் சாதுக்கள் இவ்வுலகில் மக்களுக்கு அருள் செய்து அழியா புகழுடன் வாழ்கிறார்கள்.