
வீரம் விளைந்த சிவகங்கை சீமையின்
வரலாற்று புறநானூற்றுக் காட்சி ஒன்றுண்டு
முதல் நாள், மறுநாள் நடந்த போரில்
கணவனையும், தந்தையையும் இழந்த பெண்
போர்ப்பறை கேட்ட வீரக்குடி மகள்
விளையாடிக் கொண்டிருந்த மகனை அழைத்து
வெள்ளையாடை உடுத்தி வேலோன்றை கையில்கொடுத்து
போர்க்களம் நோக்கிப் போய்வாமகனே/ என்றனுப்பினாள்
தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற பாடல்
பாடலை எழுதியவர் பெண்பாற் புலவர்
ஒக்கூரில் பிறந்த மாசாத்தியார் ஒக்கூர்மாசாத்தியாள்
என்றே அழைக்கப்பட்ட இலக்கியப் பெண்
வீரமங்கை வேலு நாச்சியார் மருதுபாண்டியர்
பிறந்த பூமி சிவகங்கை சீமை
”யாதும் ஊரே யாவரும் கேளீர் ”
உலகளாவிய சிந்தனையை உதிர்த்த இடம்
தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றன்
தமிழரிடம் நிலைத்த இடம் சிவகங்கை
மாசாத்தனார், கபிலர் வாழ்ந்த ஊர்
மங்கா புகழ் சேர்த்த சிவகங்கை
கவியரசு கண்ணதாசன், பண்டிதமணி கதிரேசன்
சுத்தானந்த பாரதியார் பிறந்த மாவட்டம்
சிவகங்கை கீழடி அகழாய்வில் கீழேதோண்ட
260௦ ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் …
தமிழி எழுத்துக்கள் தமிழ் பிராமியில்
குவிரன், ஆத(ன்) முழுமை பெறாத
உடைந்த பானையில் எழுதிய எழுத்துக்கள்
உலர்ந்த பின்பு பொறிக்கப்பட எழுத்துக்கள்
கி.மு.6ஆம் நூற்றாண்டில் தமிழ் மக்கள்
எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற விபரம்
குறியீடுகளுக்கு அடுத்ததாக தமிழ் பிராமி
எழுத்துக்கள் 56பானை ஓடுகள் சேகரித்துள்ளனர்
கீழடியில் பானை ஒடுகள் குவியல்
குவியலாகக் கிடைப்பதால் பானை வனையும்
தொழில் கூடம் இருந்ததை அறியமுடிகிறது
ரோம-நாட்டு வணிகர்கள் வந்ததைக் குறிக்கிறது
எலும்புத் துண்டுகளின் கிடைத்த நிலையில்
வேளாண்மைக்கு காளை, எருமை ,வெள்ளாடு
உறுதுணையாக இருந்ததை அறிய முடிகிறது
வெட்டுண்ட மான், வெள்ளாடு, காட்டுப்பன்றி
உணவுக்காக பயன்படுத்தியதை அறிய முடிகிறது
சங்ககாலம் முதல் வேளாண்மை தொழிலும்
கால்நடை வளர்ப்பும் பின்னிப் பிணைந்து
தொடர்ந்து வருவது ஆய்வில் தெரிகிறது
சிலிக்காவும்,பிணைப்புக் காரணியாக சுண்ணாம்பும்
கலந்து கட்டப்பட்ட சாந்து , செங்கற்கள்
கூரை ஓடுகள் சுடுமண் உறைகிணறு
இவற்றால் தரமான கட்டுமானப் பொருளறியப்படுகிறது
தக்களி, துணிகளில் வரையப் பயன்படும்
எலும்பிலான கூரிய முனையுடைய வரைகோல்
தறியில் தொங்கும் கருங்கல், குண்டு
செம்புஊசி ,சுடுமண் பாத்திரம் சாயத் தொழிலுக்கும்
நெசவுத் தொழிலுக்கும் சான்றாய் கிடைத்துள்ளன
தங்கத்தில் ஏழு ஆபரணத் துண்டுகள்
செம்பு அணிகலன்கள் , கல்மணிகள், கண்ணாடிமணிகள்
நேர்த்தியாக செய்யப்பட்ட வீட்டு உபகரணப்..
பொருட்கள் சங்ககால வளமையையும் பண்ட
பாத்திர நகைத் தொழிலை அறியமுடிகிறது
அட்டச் சில்லுகள் பாண்டி நொண்டி
விளையாட்டையும், தாயம் விளையாட பகடைக்காய்
இப்படி இன்றைய கீழடி காட்டும்
அன்றைய தமிழகம் வளமும் செழுமையும்
தமிழ் புலமையும் அன்னிய நாட்டு
தொடர்பும் அறிய வைக்கும் கீழ்அடி ஆய்வாகும் .
செந்தமிழ் வாணி ச. மல்லிகா .