ஓடி வந்து பார்த்ததுமே
உளமுருகிக் கதறுகிறார். நண்பரே! இத்தனை நாள் வராமல் இருந்தீரே! கால் எல்லாம் முள்குத்தி காயங்கள் உண்டாயினவே! என்றுரைத்துக் கண்ணீரால் பாதங்களைக் கழுவி விட்டார். மார்போடு அணைத்து அவரை மாளிகைக்குள் அழைத்து வந்தார். சீர்மிகுந்த கட்டில் மிசை அமர வைத்து சிறப்பு செய்தார். கமலத் திருக்கரத்தால் திருப்பாத பூசை செய்தார். அமலன் தம் தலைமீதில் அந்நீரை தெளித்துக் கொண்டார். அன்புக்குரிய நண்பரின் மேனியில் திவ்ய பரிமளச் சந்தனம் பூசினார். நெற்றியில் கஸ்தூரி குங்குமம் இட்டார்.
மனம் நிறைந்த தூபம், நெய், தீபம் எல்லாம் காட்டி பூஜை செய்தார். சிறப்பாக விருந்து அளித்தார் தாம்பூலம் வழங்கினார்.
அந்தணர் சுதாமாவின் மேனி மிகவும் மெலிந்து அழுக்கடைந்து இருந்தது. மேனி முழுவதும் நரம்புகள் புடைத்திருந்தன. கந்தல் துணியை உடுத்தி இருந்தார்.
என்றாலும், மகாலட்சுமியின் அவதாரமான ருக்மணி தேவி தன்னுடைய தோழிகள் கூட இரத்தினம் பதித்த பிடியுடைய சாமரங்களை கையில் ஏந்தி பகவானுடைய உற்ற நண்பர் என்ற முறையில் அந்தப் பரம தரித்திரரான யாசகம் வாங்க வந்த அந்தணருக்கு மிகுந்த பரிவுடன் அவற்றை வீசி பணிவிடை செய்தாள்.
சுதாமாவின் கைகளைத் தம் கைகளில் கோர்த்துக் கொண்டு இளமைக் காலத்திய இனிய கதைகளைப் பேச ஆரம்பித்தார் கிருஷ்ணன்.
நண்பரே! எனக்கு அளிப்பதற்காக ஏதாவது கொண்டு வந்திருப்பீரே! பக்தர்கள் அன்புடன் அளிக்கும் சிறிய பொருளையும் நான் பெரிதும் மதிப்பேன். நான் அன்புக்காகத் தான் ஏங்குகிறேன்.
பக்தி இல்லாதவன் கொடுக்கும் விலை மதிக்க முடியாத பொருள் என்னை மகிழச் செய்யாது என்று கிருஷ்ணன் கூறுகிறார்.
இவ்வாறு கூறியும் சுதாமா அவல் பொட்டலத்தை அளிக்கத் துணியவில்லை.
கிருஷ்ணனுடைய எல்லையற்ற அரசுச் செல்வத்தையும், வைபவத்தையும் பார்த்த சுதாமா, அவருக்கு அவலைக் கொடுக்க நாணமுற்றார்.
அப்போது எல்லோருடைய உள்ளங்களையும் உணரும் இறைவன். அந்தணர் தாம் வந்த காரியத்தை அறிந்து கொண்டார்.
இவர் என்னை வணங்குபவர் இவருக்கு ஒருவித ஆசையும் இல்லை. தனது மனைவியின் தூண்டுதலினால் என்னிடம் வந்திருக்கிறார்.
“இவருக்கு போகங்களையும் கொடுப்பேன், மோட்சத்தையும் அளிப்பேன், தேவர்களுக்கும் கிட்டாத அருள் புரிவேன். “ என்று எண்ணினார் கிருஷ்ணன்.
இது என்ன என்று அவருடைய கக்கத்தில் மறைத்து வைத்திருந்த அவல் பொட்டலத்தை பலவந்தமாகப் பிடித்து இழுத்தார்.
பழைய கந்தல் துணி என்பதால் கிழிந்து விட்டது. அவல் நாற்புறமும் சிதறியது.
நெகிழ்ந்து போன கிருஷ்ணன், நண்பரே! எனக்குக் கொடுக்க வேண்டும் என்று அன்புடன் கொண்டு வந்த அவல் என்னை மிகவும் மகிழச் செய்தது.
இந்த அவல் என்னை மட்டுமின்றி அகில உலகையும் திருப்தி அடையச் செய்யுமே! என்று சொல்லிக் கொண்டே அங்கே சிதறிய அவல்களை பொறுக்கிப்…பொறுக்கி எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைக்க ஆரம்பித்தார்.
சில நாட்கள் மிகவும் ஆனந்தத்துடன் அங்கே தங்கி விட்டு சுதாமா தம் இல்லம் திரும்பினார்.
வீடு அடியோடு மாறி இருந்தது. குடிசை வீடு தங்க மாளிகையாக மாறி இருந்தது. எல்லாம் கிருஷ்ணனின் லீலை என்று உணர்ந்து கொண்டார் சுதாமா.
இவை எல்லாம் நான் கேட்கவில்லையே, செல்வம் கர்வத்தை அல்லவா தரும். பகவானின் நட்பும், பத்தியம் மட்டும் போதும் என்று எண்ணியவர். வாழ்நாள் முழுவதும் வீட்டில் வாழ்ந்தாலும் பற்றற்ற மனப்பான்மையுடன் வாழ்ந்து பகவானே அடைந்தார் சுதாமா.

