சத்தமிடுவது குடும்ப பெண்களின் குணமல்லவென்று
பொத்திப் பொத்தி வைத்ததில் என்
கால் கொலுசு முத்திழந்தது
கண்ணாடி வளவியைக் கையுமிழந்தது -என்
இதழ்கள் இயல்பாகவே
மௌனம் சுமக்கிறது
இதயம் மட்டும் ஓயாமல்
ஓலமிடுகிறது...
என் இதயத்தின் மௌனமொழி கேட்க
உன் இதயச்செவியை
கொஞ்சம் திறந்து வை...
ஒட்டுமொத்த அன்பையும்
கொட்டித் தீர்க்கிறேன் நீயோ
எட்டியாக எண்ணி எட்டிகூட பார்ப்பதில்லை -
கடமைக்கு திருமணம்
வழக்கமென தாம்பத்யம்
உன் ஆண்மையையும் என் பெண்மையையும்
உறுதிப்படுத்தவோர் மழலைச் செல்வம்...
அன்புக் கணவனே!
உன் தேவையெல்லாம் நீ சொல்லாமல்
தீர்த்து வைத்தேன் -என்
தேவை என்னவென்று
கேளாயோ ?
கருணை கொண்டு பாராயோ ?
காதல் கொண்டு என்னை சேராயோ ? - என்றே
சத்தமின்றி சத்தமிடுகிறது
என் மௌன மொழி....
Photo by Philippe Donn on Pexels.com
