கிருஷ்ணன் கூர்ந்து பார்த்தார். பாத்திரத்தில் ஒரு கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை கையில் எடுத்த கிருஷ்ணன்.
ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தாயே! இந்தக் கீரை இலையினால், மூவுலகம் திருப்தி அடையுமே என்றவர் வாயில் போட்டுக் கொண்டு சொன்னார்.
“எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவான பகவான் உணவை ஏற்பவன். இந்த கீரை இலையினால், திருப்தி அடையட்டும்” என்கிறார் கிருஷ்ணன்.
சாப்பிட்ட பின் சகாதேவனை அழைத்து “ரிஷிகளை சாப்பிட அழைத்து வா” என்று கூறுகிறார் கிருஷ்ணன்.
அச்சமயம் ரிஷிகளின் வயிறு நிரம்பி விட்டன. ஏப்பம் வர ஆரம்பித்து விட்டது. சீடர்கள் துர்வாசரிடம் சொன்னார்கள். சுவாமி! எங்களுக்கு கழுத்து வரை உணவு நிரம்பி விட்டது அங்கு போய் என்ன சாப்பிடுவோம் என்றனர்.
துர்வாசருக்கும் அதே நிலைதான். குழந்தைகளே! இங்கிருந்து விரைவில் ஓடிவிடுங்கள். இந்தப் பாண்டவர்கள் சிறந்த தர்மாத்மாக்கள், ஞானிகள், நன்னடத்தை உடையவர்கள்.
கிருஷ்ண பக்தர்கள் அவர்கள் நினைத்தால் பஞ்சுப் பொதியைப் பொசுக்குவது போல் நம் எல்லோரையும் சாம்பல் ஆக்கி விடுவார்கள்.
கிருஷ்ணனை சரணடைந்தவர்களிடம் எனக்கு மிகவும் பயம் உண்டு என்றார் துர்வாசர். இச்சொல் கேட்ட சீடர்கள் அங்கிருந்து நாற்புறமும் ஓடிவிட்டார்கள்.
சகாதேவன் எங்கு தேடியும் எவரையும் காண முடியாமல் திரும்பி வந்தான்.
அதைக் கண்ட கிருஷ்ணன், இனி உங்களுக்கு எந்த தீங்கும் நேராது. நான் துவாரகைக்குச் செல்லட்டுமா! என்று விடை பெற்றார்.
கஜேந்திரன்
கஜேந்திரன் போன்ற யானையின் குரலுக்கும் ஓடி வந்தார். என்றால், உயிர்கள் எல்லாம் இறைவனுக்கு சமம். இதில் மனிதன், விலங்கு என்ற பாகுபாடு இல்லை என்பதை உணர்த்தும் நிகழ்வை விவரிக்கலாம்.
திரிகூட மலையில் கஜேந்திரன் என்ற யானை வசித்து வந்தது. ஒருநாள் கோடையின் கடுமை தாங்க முடியாமல் தவித்தன.
ருதுமான் என்ற வருண தேவனுடைய தோட்டத்தில் இருந்த மிகப்பெரிய அழகான தடாகத்தின் கரைக்கு பல பெரிய ஆண் யானைகளும், பெண் யானைகளும் சென்றன.
தடாகத்தில் இறங்கி அமுதம் போன்ற அதன் தண்ணீரை அருந்திவிட்டு… பெண் யானைகளுடனும், குட்டி யானைகளுடனும் விளையாட ஆரம்பித்தன.
தடாகத்தில் வலிமைமிக்க ஒரு முதலை வாசித்து வந்தது. அது கஜேந்திரனின் காலைப் பிடித்துக் கொண்டது.
கஜேந்திரன் முழு பலம் கொண்டு முதலையிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றது.
கூட இருந்த யானைகள் துதிக்கையோடு துதிக்கையாக இணைத்து கஜேந்திரனை விடுவிப்பதற்காகப் பற்றி இழுத்தன.
ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. நீண்ட காலம் இந்தப் போராட்டம் நடந்தது. கடைசியாக யானை பலம் இழந்து பகவானைச் சரணடைந்தது. கஜேந்திரன் மனம் உருகி பகவானைத் துதித்தது. பகவானே காக்க வல்லவர் என சரணடைந்தது.
கூக்குரலைக் கேட்ட நாராயணன் தன் திவ்ய ஆசனத்தில் இருந்து குதித்தார். காவலர்களைக் கூட கவனியாது கதை எங்கே… கதை எங்கே என்று கூறினார்.
பக்கத்தில் நின்ற மகாலட்சுமியும் பார்க்கவில்லை. மேல் உத்தரீயத்தையும் அணியவில்லை. கருடன் மேல் தாவி ஏறினார். கருடனின் மேலேறி தடாகத்தை வந்தடைந்தார்.
கருடன் மேல் வரும் பகவானை கஜேந்திரன் பார்த்ததுமே துதிக்கையால் தாமரை மலரை உயரத் தூக்கி மிகவும் துயரத்துடன் பிளிறியது.
மிகுந்த பிரியத்துடன் பக்தனால் அளிக்கப்பட்ட தாமரைப் பூவே பகவான் ஏற்றார்.
தம்முடைய சுதர்சனச் சக்கரத்தினால் முதலையின் தலையை கொய்தார்.
கஜேந்திரனை அதன்பிடியில் இருந்து விடுவித்து காப்பாற்றினார் கிருஷ்ணன்.

