எவனிடம் இருந்து எந்த உயிருக்கும் பாதிப்பு இல்லையோ, எவன் எந்த உயிர்கள் மூலம் பாதிப்படைய மாட்டானோ,
அவன் மகிழ்ச்சி, பொறாமை, பயம், பாதிப்பு முதலியவற்றில் இருந்து விடுபட்டவனாக இருக்கும் பக்தன் எனக்குப் பிரியமானவன் ஆவான் என்கிறார்.
சாதாரண மனிதன் துன்பம் கண்டு துவண்டு போய்விடுவான். சாதாரண மனிதன் முதல் யோகி வரை மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்.
ஆனால், ஞானியான பக்தன் எங்கும் பகவானைக் காண்கிறான். அவன் எல்லா நிகழ்ச்சிகளையும் பகவானுடைய லீலை என்றே நினைக்கிறான்.
ஆகவே, அவனுக்குப் பொறாமையோ, பாதிப்போ, பயமோ ஏற்படுவதில்லை என விவரிக்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! என்னை அடைந்துவிட்ட பக்தனுக்கு எந்தப் பொருளாலும் எவ்விதப் பயனும் இருக்காது.
ஆகவே, வேறு எதிலும் சிறிது கூட விருப்பமோ, ஆசையோ, முன் பழக்கத்தினால் ஈடுபாடோ இருக்காது பூரணமாகி விடுவதால் எதையும் எதிர்பார்க்காதவன் ஆகிறான்.
கேசவா! விருப்பமோ, தேவையோ இல்லாமல் போனால் காரியத்திலும் ஈடுபட மாட்டானே! எப்படி செயல் புரியாமல் வாழ்வான் என விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! விருப்பமோ, தேவையோ இல்லாவிட்டாலும் கூட பிராப்தத்தின் விளைவாகச் செயல் நடைபெறும்.
அதாவது,அவனுடைய மனம், சொல், உடல் மூலமாக பிராப்தத்திற்கு ஏற்ப எல்லாச் செயல்களும் பற்றுதலோ, விருப்பமோ, திட்டமோ இல்லாமல் இயல்பாக நடைபெறும் அதனால், அவரது வாழ்வு நடைபெறுவதில் ஒரு தடையும் இருக்காது என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! பகவானுடைய பக்தன் உள்ளும், புறமும் தூய்மையோடு இருப்பான் என்று
கூறுவதான தூய்மை எப்படிப்பட்டது என விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! என்னுடைய பக்தன் தூய்மையின் எல்லை நிலமாக இருப்பான். அவனுடைய மனம், புத்தி, புலன்கள் அவற்றின் நடைமுறை உடல் அனைத்துமே மிகவும் பரிசுத்தமாக ஆகிவிடும்.
அவனுடன் பேசினாலும், தரிசனம் செய்தாலும், தொட்டாலும் கூடப் பிறர் பரிசுத்தமாவார்கள். இப்படிப்பட்ட பக்தர் எங்கு இருக்கிறாரோ அந்த இடம் பரிசுத்தம் ஆகும்.
பக்தனுடைய தொடர்பால் அங்குள்ள சூழ்நிலை, நீர், நிலம் முதலிய எல்லாமே தூய்மை அடையும் என்கிறார்.
மேலும், மனிதப் பிறவி பெற்றதற்கான நோக்கம் செவ்வனே நிறைவேறுமாறு நடப்பதே உண்மையில் திறமை மிக்கவர்.
மிகுந்த பக்தியின் மூலம் சிறந்த அன்பிற்கு உரியவரும், எல்லோருக்கும் நண்பரும் ஆன பரமாத்மாவை அடைவதே மனிதப் பிறவியின் முக்கியமான நோக்கம். பகவானை அடைந்து விட்டவன் அவனே திறமை மிக்கவன் என்கிறார்.
