எந்த தானம் மரியாதை இன்றி இகழ்ச்சியோடு தகாத இடத்திலும், தகாத காலத்திலும் தகுதி அற்றவர்களுக்குக் கொடுக்கப் படுகிறதோ அது தாமசம் எனப்படுகிறது.
கேசவா! மரியாதை இன்றி இகழ்ச்சியோடு கொடுக்கப்படும் தானம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்.
தானம் பெற வருபவர்களிடம் அன்புடன் பேசி அமர வைத்து உபசரிக்காமல் கடுகடுப்புடன் கொடுக்கப்படும் தானமே மரியாதை இன்றி கொடுப்பதாகும்.
அலட்சியமாகவும், கடுகடுப்பாக பேசி,மிரட்டி, இனிமேல் இந்தப் பக்கம் வரக்கூடாது என்று எச்சரித்து, கேலி செய்து அவமானம் செய்து கொடுப்பது இகழ்ச்சியோடு கொடுப்பதாகும் என்கிறார்.
மேலும், எவருக்கு அவசியம் இல்லையோ அவருக்கு கொடுக்கும் தானம் தாமசம் எனப்படும்.
அதாவது, கபடவேசம் போட்டு இருப்பவன், பிறரை இம்சை செய்பவன், வசை பாடுபவன், பிறர் வாழ்க்கையை கெடுப்பவன், கள்,புலால் உண்பவன், சூதாடி, திருடுபவன், விபசாரம் செய்பவர் இவர்களுக்கு கொடுக்கும் தானம் தாமசம் ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.
ஓம், தத், சத் என்ற மூன்று விதமாக சத்,சித், ஆனந்த மயமான பிரம்மத்தினுடைய பெயர் மொழியாக்கப் பட்டுள்ளது.
கர்த்தா, கர்மம், கர்மத்தின் விதி முறைகள் முதலிய எல்லாம் தோன்றியதற்கிடமான பரமாத்மாவைக் கூறுவது ஓம், தத், சத் என்ற மூன்று பெயர்கள்.
ஆகவே, இவற்றை உச்சரித்தால் கர்மம் செய்யும் வகையில் ஏற்படும் குற்றங்கள், குறைகள் நீங்கி கர்மம் முழுமை பெறும்.
ஆகவே, ஒவ்வொரு கர்மத்தை ஆரம்பிக்கும் போதும் ‘ஓம்’ என்று ஆரம்பித்து, முடிக்கும்போது ஓம், தத்,சத் என்று சொல்வது அவசியம் ஆகும்.
ஆகையினால், வேதம் ஓதும் பெரியவர்களுடைய சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்வி, தானம், தவம் முதலிய கர்மங்கள் எப்பொழுதும் ‘ஓம்’ என்கிற பரமாத்மாவின் திருப்பெயரை உச்சரித்துக் கொண்டே தொடங்கப் படுகின்றன.
‘தத்’ என்ற அழைக்கப்படுகின்ற பரமாத்மாவுக்கே எல்லாம் உரியது என்ற உணர்வுடன் பயனை விரும்பாமல் பலவிதமான வேள்வி, தவம் ஆகிய செயல்களும் தானம் ஆகிய கர்மங்களும் மோட்சமாகிய நலன் நாடும் நல்லோரால் செய்யப்படுகிறது.
