எந்த மனிதனுடைய உள்ளத்தில் நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லாமல் அவனுடைய புத்தி உலகியல் பொருட்களிலும், செயல்களிலும் ஒட்டுவதில்லையோ, அவன் இந்த உலகங்கள் அனைத்தையும் கொன்றாலும், உண்மையில் கொல்வதில்லை. மேலும், பாவத்தினால் தளைப்படுவதும் இல்லை என்கிறார்.
அகங்காரம், மமகாரம், ருசி, தன்னலம் இவை இல்லை என்றான பிறகு பாவச் செயல் புரியக் காரணமே கிடையாது.
உலக நோக்கில் கர்மங்கள் அனைத்தையும் செய்வது போலத் தோன்றினாலும் அவனை அக்கர்மங்கள் எவையும் பந்தப் படுத்துவதில்லை.
அறிபவன், அறிவு, அறியப்படுவது இம்மூன்றும் ஒன்று சேர்ந்து கர்மத்தைத் தூண்டுவன. மனம், புத்தி, புலன்கள் மற்றும் செயல் என்ற மூன்றும் ஒன்று சேர்வதாலேயே கர்மம் உண்டாகிறது.
குணங்களின் எண்ணிக்கையைக் கூறும் சாங்கிய சாஸ்திரத்தில் ஞானமும், செயலும், செய்பவனும் குணங்களின் வேற்றுமையினால் மும்மூன்றாகவே சொல்லப்படுகின்றன அவற்றையும் நீ என்னிடம் இருந்து உள்ளவாறு கேட்டுத் தெரிந்து கொள் என்கிறார்.
அந்த ஞானத்தினால் மனிதன் தனித்தனியான உயிரினங்கள் அனைத்திலும் ஒன்றேயானதும், அழிவற்றதுமான பரமாத்மாவின் இருப்பைப் பிரிவற்றதாக பார்க்கிறானோ அந்த ஞானத்தை சாத்விகம் என்று தெரிந்து கொள் என்கிறார்.
எந்த ஞானத்தின் மூலமாக மனிதன் உயிரினங்கள் அனைத்திலும் தனித்தனியான, விதவிதமான இருப்புக்களைத் தனித்தனியாக அறிகிறானோ, அந்த ஞானத்தை ராஜசம் என்று தெரிந்து கொள் என்கிறார்.
பிரகிருதியின் காரியத்தின் விளைவான உடல் ஒன்றையே அனைத்தும் என்று பற்றுக் கொண்டுள்ள எந்த ஞானம் உண்டோ அது யுக்திக்குப் பொருந்தாது.
உண்மைப் பொருளை உணர்த்தாதது, அற்பமானது. ஆகவே, அந்தக் கருத்தை தாமசம் என்கிறார். இதில் ஞானம் என்றே கூறவில்லை. எனவே, இது அஞ்ஞானம் என்று புரிந்து கொள் என்கிறார்.
“நான் செய்கிறேன்” என்ற அபிமானம் இன்றி பயனில் விருப்பம் கொள்ளாத மனிதனால் விருப்பு, வெறுப்பு, இன்றிச் செய்யப்படுகிற செயல் சாத்விகம் ஆகும்.
சத்வ குணத்தினாலும், சாத்விக கர்மத்தினாலும் தான் ஞானம் உண்டாகும். பரமாத்மாவின் தத்துவத்தை அறிய விரும்புகின்ற மனிதர்கள் சாத்விகமான கடமைகளை ஆற்ற வேண்டும்.
ராஜச, தாமச கர்மங்களில் ஈடுபட்டு பிறவித் தளைகளில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது என்பதை புரிந்து கொள் என்கிறார்.
.
