பக்தி பிரதானமான கர்ம யோகம் செய்பவனின் உள்ளத்து உணர்ச்சி கண்டு கருணை கூர்ந்து அவனுக்கு அதிசயமான அருள்பாலித்து பகவான் தாமே அவனுக்குப் பரா பக்திரூபமான புத்தியோகத்தை அருளுகிறார்.
அந்தப் புத்தி யோகத்தின் மூலம் பகவானுடைய இயல்பான சுயரூபத்தை அறிந்த அந்த பக்தன் பகவானிடம் ஒன்றி விடுகிறான்.
சத்,சித் ஆனந்தமயமான பரமாத்மாவிடம் ஐக்கியமாகி விடுகிறான். இதுதான் பரமபதத்தை அடைவது என்பதன் பொருள் என விளக்குகிறார் கிருஷ்ணன்.
எல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக என்னிடம் அர்ப்பணம் செய்து அப்படியே சம புத்தியாகிய யோகத்தைக் கடைப்பிடித்து என்னையே அடைக்கலமாகக் கொண்டு மேலும் எப்பொழுதும் என்னிடம் உள்ளம் பதித்தவனாக இருப்பாயாக என்கிறார்.
கேசவா! “எல்லாக் கர்மங்களையும் மனப்பூர்வமாக எனக்கு அர்ப்பணம் செய்து” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! எவன் அவனுடைய புத்தி, மனம், உடலையும் அவற்றின் மூலம் செய்யப்படும் கர்மங்களையும், கிடைக்கும் எல்லாப் பொருட்களையும் பகவானுடையவை என்று அறிந்து…
எல்லாவற்றிலும் தன்னுடையது என்ற எண்ணம் பற்று ஆசைகள் இவற்றை அறவே துறந்து எனக்கு எதையும் செய்யச் சக்தி கிடையாது. பகவானே எல்லா விதமான சக்திகளையும் எனக்கு அளித்து என் மூலம் தன் விருப்பப்படி எல்லாச் செயல்களையும் செய்ய வைக்கிறார்.
“நான் எதையும் செய்யவில்லை என்று அறிந்து பகவானுடைய ஆணைப்படி அவருக்காகவே அவருடைய தூண்டுதலினால் அவர் எப்படிச் செய்கிறாரோ அப்படி ஒரு கருவியாக இருந்து…
அவருடைய கைப்பாவை போலச் செய்து கொண்டிருப்பது தான் பகவானிடம் நம் செயல்களை அர்ப்பணம் செய்வது ஆகும் என்கிறார்.
என்னிடம் உள்ளம் பதித்தவனாக நீ எனது அருளால் எல்லா
இன்னல்களையும் எளிதாகக் கடந்து விடுவாய். மேலும், அகங்காரத்தின் காரணமாக என்னுடைய சொற்களைக் கேளாவிட்டால் அழிந்து போவாய். அதாவது, பெருநிலை பெறமாட்டாய் என்கிறார்.
அதாவது, கர்மங்கள் அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்து என்னையே தஞ்சம் புகுந்து என்னிடமே இடையறாது மனதைச் செலுத்திய பிறகு நீ வேறொன்றும் செய்ய வேண்டுவது இல்லை.
என்னுடைய கிருபையினால் உன்னுடைய இவ்வுலக பரலோகத் துயரங்கள் அனைத்தும் எளிதில் விலகி விடும். தீயவை விலகி ஆனந்த மயமான பரமேஸ்வரனான என்னையே அடைந்து விடுவாய் என்கிறார்.
அர்ச்சுனா! நீ என்னுடைய பக்தன் இனிய நண்பன். ஆகவே, என்னுடைய ஆணையைத் தவறாமல் ஏற்றுக் கொள்வாய். ஆயினும் உன்னை எச்சரிக்கிறேன்.
என் ஆணையைக் கடைப்பிடிப்பதால் பெருத்த நன்மையை ஏற்படுவது போல, மீறுவதால் மிகுந்த தீமையும் விளையும்.
நீ அகங்காரத்திற்கு ஆட்பட்டு உன்னை புத்திசாலி என்றும், திறமை உள்ளவன் என்றும், நினைத்துக் கொண்டு என் சொற்களைக் கேளாதிருந்து விட்டால்….
என் ஆணைப்படி நடக்காமல், மனம் போனபடி நடந்தால் நீ அழிந்து போவாய். பிறகு உனக்கு இவ்வுலகிலோ, பரலோகத்திலோ உண்மையான சுகமும், அமைதியும் கிடைக்காது.
“உன் கடமையில் இருந்து வழுவி இப்பொழுது உள்ள நிலையில் இருந்து வீழ்ச்சி அடைவாய்” என்று எச்சரிக்கிறார்.
