“விஸ்வரூபத்தின் மிக அதிசயமான காட்சிகளையும், சம்பவங்களையும் நினைத்து… நினைத்து… எனக்குப் பேராச்சரியம் உண்டாகிறது. ஆகா! பகவானுக்குத் தான் எவ்வளவு விசித்திரமான யோக சக்தி” என்கிறார் சஞ்சயன்.
அரசே! இங்கு நான் என்ன சொல்லப் போகிறேன் எங்கு யோகேஸ்வரனான பகவான் கிருஷ்ணனும், காண்டீபம் ஏந்திய அர்ச்சுனனும் இருக்கிறார்களா, அவ்விடத்தில் மகாலட்சுமியும், வெற்றியும், ஐஸ்வர்யமும், நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என்னுடைய கொள்கை என்ற சஞ்சயன்.
திருதராஷ்டிரரின் உள்ளத்தில் சமாதானத்தில் விருப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஸ்ரீ கிருஷ்ணனுடையதும், அர்ச்சுனனுடையதும் ஆன தனிப்பட்ட பெருமைகளைக் கூறும் அடைமொழிகளைச் சேர்த்துக் கூறியதன் மூலம் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி உறுதி என்பதைத் தெளிவாக சஞ்சயன் வெளிப் படுத்துகிறார்.
“பகவான் எல்லா யோக சக்திகளையும் ஆட்டிப் படைப்பவர். தம்முடைய யோக சக்தியினால் ஒரு கணத்தில் அகில உலகையும் படைத்து, காத்து, தம்முள் அடக்கிக் கொள்ளும் திறமை பெற்றவர்.” அவர் சாட்சாத் ஸ்ரீ நாராயணன்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தாமாகவே தர்மராஜன் ஆன யுதிஷ்டிரருக்கு உதவி செய்ய வந்திருக்கிறார் என்றால் யுதிஷ்டிரருடைய வெற்றியில் எப்படி சந்தேகம் இருக்க முடியும்.
அர்ச்சுனனும், நரரிஷியின் அவதாரம். பகவானுடைய உற்ற நண்பன், காண்டீபம் என்ற வில்லேந்தியவர்,
வீரபுருஷன் அவரும் தமையனார் யுதிஷ்டிரரின் வெற்றிக்குக் கச்சை கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆகவே, இன்று யுதிஷ்டிரருக்கு சமமாக வேறு யார் இருக்க முடியும். சூரியன் இருக்கும் இடத்தில் ஒளியும் உண்டு என்று சொல்லவும் வேண்டுமா?
அதுபோல யோகேஸ்வரனான ஸ்ரீ கிருஷ்ணனும், வில்லாளியான அர்ச்சுனனும் இருக்கும் இடத்தில் முழுமையான செல்வம், அனைத்து ஐஸ்வர்யம், அசைக்க முடியாத நீதி இவை எல்லாம் கூடி இருக்கும்.
தர்மம் இருக்கும் இடத்தில் வெற்றி நிச்சயம். ஆகவே, பாண்டவர்களின் வெற்றியில் எவ்வித ஐயமும் இல்லை.
“நீங்கள் இப்பொழுதும் உங்களுடைய நலனை விரும்பினால் உங்கள் புதல்வர்களுக்கு அறிவுரை கூறிப் பாண்டவர்களுடன் சமாதானம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறார் சஞ்சயன்.
ஆனால், விதி வலியது அல்லவா! போர் மூண்டது. கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையே நடந்த உரிமைப் போரில் பலர் மாண்டு போனார்கள். இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.
பதினெட்டாவது அத்தியாயம் நிறைவுற்றது.
கிருஷ்ணரின் கீதையைப் படித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.
பகவான் எல்லோருக்கும் உயர்வை கொடுக்கட்டும்.
