ஏழாவது அத்தியாயம்
ஞான விஞ்ஞான யோகம்
பரமாத்மாவின் நிர்குண நிராகார தத்துவங்களின் பிரபாவம், பெருமைகளை முழுமையான விளக்கத்தை பெறுவதற்குப் பெயர் ஞானம் ஆகும்.
உருவமற்ற தத்துவம் மற்றும் குணமும் உருவமுள்ள தத்துவத்தின் லீலை, ரகசியம், பெருமை, குணம், பிரபாவம் ஆகியவற்றின் முழுமையான அறிவுக்குப் பெயர் “விஞ்ஞானம்” ஆகும்.
ஞான விஞ்ஞானத்தோடு பகவானின் சுயரூபத்தை அறிவது தான் முழுமையாக பகவானே அறிவதாகும்.
இந்த அத்தியாயத்தில் முழுமையாக பகவானின் சுயரூபமும் அதனை அறியக்கூடிய தகுதி பெற்றவர்களும், அதற்கான சாதனைகளும் விளக்கப்பட்டு இருப்பதால் இந்த அத்தியாயத்தின் பெயர் “ஞான விஞ்ஞான யோகம்” என்று வைக்கப்பட்டிருக்கிறது.
அர்ச்சுனா! என்னிடம் மிகுந்த அன்பும், முழுமையான ஈடுபாடும் கொண்ட மனத்துடன் என்னையே மேலான கதியாக் கொண்டு யோகத்திலேயே ஒன்றியவனாக…
விபூதிகள், பலம், ஐஸ்வர்யம், சகல கல்யாண குணங்களுடன் கூடியவனும், எல்லாவற்றிற்கும் ஆத்மாவானவனும் ஆன என்னை எவ்வாறு எவ்வித ஐயமும் இன்றி நீ அறிந்து கொள்வாயோ அவ்வாறு சொல்கிறேன் கேள் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா!இவ்வுலகத்திலும் மேலுலகத்திலும் எந்த ஒரு போகத்திலும் எவருடைய மனதில் சிறிதளவு கூடப் பற்று தங்கவில்லையோ அவன்…
நீரில் இருந்து சிறிது நேரம் பிரிவு ஏற்பட்டாலும் மிகவும் துன்பத்தை அடையும் மீனைப் போல, வினாடி நேரம் கூட பகவானிடம் இருந்து நினைவு அகன்றாலும் பொறுத்துக் கொள்ள முடியாதபடி பற்றுக் கொண்டுள்ளவன். என்னையே மேலான கதியாகக் கொண்டவனாவான் என்கிறார் கிருஷ்ணன்.

