சுதாமா நினைத்தார், “பாவம் துயரம் தாங்காமல் இவள் கலக்கமுற்று பணத்திற்காக என்னை அங்கு அனுப்ப விரும்புகிறாள்” என்று.
இதற்காக நண்பருடைய வீட்டிற்குச் செல்வதில் அவருக்கு தயக்கமாக இருந்தது.
பேதையே!பணத்திற்காக நீ அங்கே அனுப்ப நினைக்கிறாய் பகவானை பஜனை பண்ணுவது தான் நம்முடைய கடமை பசி வந்தால் எங்கேயாவது பிட்சை எடுக்கலாம் என்றார் சுதாமா.
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால், பிட்சை
எடுப்பது கூட நடக்காது போலிருக்கிறது என் கந்தல் துணியையும், பசியினால் துடிக்கும் குழந்தைகளின் முகங்களையும் பாருங்கள்.
எனக்கு பணம் வேண்டாம், அவரிடம் சென்று ராஜ்யத்தையோ, அளவற்ற செல்வத்தையோ கேளுங்கள் என்று நான் சொல்லவில்லை.
கஷ்டமான இந்நிலையில் ஒரு தடவை அவரைப் போய் தரிசித்து வாருங்கள் என்று தானே கூறுகிறேன் என்றாள்.
சுதாமா மிகவும் தயங்கினார். முடிவில் இதை ஒரு காரணமாகக் கொண்டு சென்றால்…
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று நினைத்து போவதாக தீர்மானித்தார்.
வெறும் கையுடன் போகலாமா? என நினைத்தவர் ஏதாவது அர்ப்பணம் செய்யத் தக்க பொருள் வீட்டில் இருந்தால் கொண்டு வா! என்றார் சுதாமா.
கணவன் சொல்வது நியாயம் தானே. ஆனால், வீட்டில் ஒரு மணி அரிசி கூட கிடையாது ஏதாவது கொடுக்காவிட்டால் வெறுங்கையுடன் போக மாட்டார் என நினைத்த சுதாமாவின் மனைவி.
அண்டை வீடுகளுக்குச் சென்று தயக்கத்துடன் கேட்டாள். அவர்களும் பரிவோடு நான்கு பிடி அவல் கொடுத்தனர்.
ஒரு கந்தல் துணியில் ஒரு சிறு மூட்டையாகக் கட்டி
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் என்று சொல்லிக் கொடுத்தாள்.
சுதாமா துவாரகை சென்றார். விசாரித்துக் கேட்டுக் கொண்டே பகவானுடைய மாளிகையின் வாசல் வந்து சேர்ந்தார்.
வாயிற் காப்பாளர்கள் சுதாமாவை மிகவும் மரியாதையுடன் அங்கேயே உட்கார வைத்துவிட்டு செய்தியை சொல்வதற்காக பிரபுவிடம் சென்று கூறினார்கள்.
எங்கிருந்தோ வந்தார் அவர் ஊரின் பெயர் தெரியவில்லை,அங்கம்
எல்லாம் புழுதி,அரையாடை, ஒரே கந்தல், தலையில் ஒரு பாகை இல்லை, உடம்பிலும் ஒரு ஆடையில்லை, கால்களோ மிதியடியைக் கண்டதில்லை, ஒல்லியுடல், மாளிகையைக் கண்டு மருட்சிமிகக் கொள்ளுகிறார். ஏழைப் பங்காளர், தங்கள் திருப் பெயரைக் கூறுகிறார், வாசல் வந்த அந்தணர்தம் பேர்தான் ‘சுதாமா’ என்றார்.
கிருஷ்ணர் ‘சுதாமா’ என்ற பெயரைக் கேட்டதும் தம்மை மறந்தார். படபடப்புடன் எழுந்தார், கிரீடம் அங்கேயே இருந்தது. மேல் பீதாம்பரம் நழுவி விழுந்தது காலணிகளையும் அணியவில்லை, ஓடோடி வாசலுக்கு வந்தார்.
வெகுதூரத்திலேயே
சுதாமாவினுடைய பரிதாப நிலையைக் கண்டார் கிருஷ்ணர்.

