ரத்தி தேவர்
ரத்தி தேவர் என்ற அரசன் இருந்தார். அவர் வீரமும், கருணையும் மிகுந்தவர். ஏழைகளின் துயரைத் துடைப்பதற்காக தம் செல்வத்தை எல்லாம் தானம் அளித்தார்.
பிறகு மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தினார். அப்பொழுதும் கூட தனக்கு எது கிடைத்தாலும், பிறருக்கு கொடுத்து பட்டினி கிடந்தார்.
அரசர் ஆண்டியாகி குடும்பத்துடன் துன்பப்பட்டார். ஒரு சமயம் நாற்பத்தெட்டு நாட்களாக அரசருக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை.
பசியும், தாகமும் மிகவும் சோர்வுறச் செய்தது அரசரை. அச்சமயத்தில்
நாற்பத்தொன்பதாவது நாள் அறுசுவை உணவு கிடைத்தது.
அவ்வுணவை குடும்பத்தினருடன் உண்ண அமரும்போது ஒரு அந்தணர் வந்தார். அந்த சமயத்தில் தங்கள் பசியை ஒரு பொருட்டாக நினைக்காமல் அந்தணரை வரவேற்று உணவைப் பரிமாறினார்.
அந்தணரும் உண்டு மகிழ்ந்து சென்று விட்டார்.
மீதம் இருந்த உணவை உண்ணலாம் என எண்ணும் போது ஒருவர் வந்தார். அவருடன் ஒரு நாயும் வந்தது. நாங்கள் இருவரும் மிகவும் பசியால் வாடுகிறோம் உணவு படையுங்கள் என்றார்.
இருந்த உணவை அவருக்கும், நாய்க்கும் கொடுத்து விட்டார் ரத்தி தேவர்.
ஒருவர் தாகத்தை தீர்க்கக் கூடிய அளவே தண்ணீர் இருந்தது. அதை பகிர்ந்து குடிக்கலாம் என எண்ணும் போது,
ஒரு சண்டாளன் வந்து தாகமாக இருக்கிறது தண்ணீர் ஊற்றங்கள் என்றான்.
அரசரும் அந்தநீரைக் கொடுத்து தாகம் தணித்தார்.
இவர்களுக்கு கொடுத்ததால் என்னுடைய பசி, தாகம்,களைப்பு,உடல் மெலிவு, இல்லா கொடுமை, சோர்வு, சோகம், துன்பம், மயக்கம் எல்லாம் நீங்கி விட்டன என்று தாகத்தில் உயிர் போகும் நிலையிலும் பிறருக்கு கொடுத்து திருப்தி அடைந்தார்.
இருப்பவர் கொடுப்பது எளிது. இல்லா நிலையிலும் கொடுப்பது என்பது அரிது இதை உலகுக்கு உணர்த்தவே பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே ரத்தி தேவனை சோதிப்பதற்காக வந்தார்கள்.
அரசருடைய உறுதியையும், பக்தியையும் கண்டு அவர்கள் மகிழ்ந்தார்கள். உண்மை உருவில் வெளிப்பட்டு காட்சி தந்தார்கள்.
ரத்தி தேவர் மும்மூர்த்தியின் தரிசனத்தை ஒருங்கே பெற்று அவர்களை வணங்கினார். அவர்கள் வற்புறுத்தியும் கூட வரம் கேட்கவில்லை.
ரத்திதேவரும், அவர் குடும்பத்தினரும் நாராயணனே கதியென இருந்து யோகிகளின் பரமநிலையைப் பெற்றார்கள்.
அர்ச்சுனா! எல்லா உயிரினங்களிலும் நான் ஒரே சமமாக நிறைந்து உள்ளேன். எனக்கு வெறுக்கத்தக்கவன், வேண்டியவன், வேண்டாதவன் இல்லை.
ஆனால், எவர்கள் என்னை பிரியம் கொண்டு பக்தியுடன் வழிபடுகிறார்களோ அவர்கள் என்னிடமும், நான் அவர்களிடமும் காணக்கூடியவனாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், மிகவும் தீய நடத்தை உள்ளவன் ஆனாலும், வேறு எதிலும் நாட்டம் இன்றி என் பக்தனாக வழிபடுகின்றவன் காலப்போக்கில் சாதுவாகி விடுவான்.
அவன் விரைவிலேயே தர்மாத்மாவாக ஆகிறான். அதனால், நிலையான அமைதியை அடைகிறான். என்னுடைய பக்தர்கள் அழிவதில்லை என்ற சத்தியத்தை உறுதியாக அறிந்து கொள் அர்ச்சுனா என்கிறார் கிருஷ்ணன்.

