கேசவா! ஒரு செயல் செய்யும் போது புத்தியையும், அறிவையும் கொடுப்பது யார்? என கேட்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! செய்யத் தக்கது, செய்யத் தகாதது, நல்லது, கெட்டது இவற்றைப் பகுத்தறிந்து தீர்மானம் செய்யும் மனதின் செயல்பாடே இங்கு ‘புத்தி’ எனப்படுகிறது. அவ்வறிவைக் கொடுப்பவன் நான் தான் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! பொறுமை, சத்யம் என்பதை விவரிங்கள் என்கிறார் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! பிறருக்குக் கெடுதல் நினைப்பது, தீங்கு செய்வது, பொருளை அபகரிப்பது, அவமானம் செய்வது, தாக்குவது, கடுமையாகப் பேசுவது, திட்டுவது, பலிப்பது, கோள் சொல்வது, தீ வைப்பது, விஷம் கொடுப்பது, கொல்வது, நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அழிவை உண்டாக்குவது இன்னும் குற்றங்கள் எவ்வளவு இருக்கிறதோ அவற்றில் நமக்குத் தீங்கு செய்பவர் யாராக இருப்பினும்,
அவரை எதிர்த்து பழிக்குப் பழி வாங்க நமக்குத் திறமை இருந்தாலும் கூடப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருப்பது.
பாவம் செய்த குற்றத்திற்காக இவ்வுலகிலோ, பரலோகத்திலோ எதிரிக்கும் தண்டனை கிடைக்க வேண்டாம் என்று நினைப்பது பொறுமையாகும்.
புலன்கள் மூலம் பார்த்து கேட்டு, உணர்ந்து கொண்ட பொருளை அவ்வாறே பிறருக்கு விளங்க வைப்பதற்காக இனிய மொழியில் எடுத்துச் சொல்வது ‘சத்யம் ‘ஆகும்.
கேசவா! ‘தம, சம’ என்பதன் பொருளை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! போகப் பொருட்களைத் தேடிப் போன வழியில் போகாமல் தடுப்பது தமம் ஆகும்.
மனதை நன்றாக அடக்கித் தன் வசத்தில் வைத்துக் கொள்வது சமம் ஆகும் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! சுகம், துக்கம் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா!பிரியமானதும், அனுகூலமானதுமான பொருள் வந்து சேர்ந்தாலோ, நாம் விரும்பாத பொருள் நம்மை விட்டு அகன்றாலும் ஏற்படுவது சுகம்.
விரும்பியது கைநழுவி விரும்பாதது வந்து சேர்ந்தால் மனதில் ஏற்படுவது துக்கமாகும் என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! பவ, அபாவ, பயம், அபயம் இவற்றை விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! படைப்பின் ஆரம்பத்தில் எல்லாச் சராசரங்களையும் உண்டாக்குவது ‘பவ’ தோன்றுவதாகும்.
பிரளய காலத்தில் மறைந்து போவது ‘அபாவம்’ அழிவதாகும்.
ஒன்றை இழப்பதும் யாராவது இறப்பதால் மனதில் உண்டாவது ‘பயம்’ ஆகும்.
பகவான் நிறைந்திருக்கிறார் என்ற எண்ணத்தின் உறுதியால் எதிலும் பயப்படாமல் இருப்பது ‘அபயம்’ பயமின்மையாகும் விவரிக்கிறார் கிருஷ்ணன்.

