கேசவா! ‘ஏதாம் விபூதிம்’ என்பதன் பொருளை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! புத்தி அதன் குணங்கள், மகரிஷிகள், தம்மிடம் தோன்றியவை, தேவதைகளும், அவர்களின் தன்மைகள் இவை எல்லாம் தான் ‘ஏதாம் விபூதிம்’ என்ற சொல் குறிக்கிறது என்கிறார் கிருஷ்ணன்.
மேலும், அகில உலகமும் பகவானால் படைக்கப்பட்டது. எந்தப் பொருளுக்கும் ஏதாவது சக்தி இருந்தால், தனிப்பெருமை இருந்தால் அது பகவானுடைய ‘விபூதி’ ஆகும்.
பிரபஞ்சமே பகவானுடைய விபூதி தான். எல்லாம் அவன் செயலே என்பதை உணர்வதும், உணர்த்துவதுமே விபூதியையும், யோகத்தையும் தத்வ ரீதியாக அறிவதாகும்.
வாசுதேவனான நானே அனைத்துலகும் தோன்றுவதற்குக் காரணம் என்னாலேயே அகில உலகமும் இயங்குகிறது என்று புரிந்து கொண்டு நம்பிக்கையும், பக்தியும் கொண்ட அறிஞர்களான பக்தர்கள் என்னை இடையறாது உபாசிக்கிறார்கள்.
என்னிடமே மனம் செலுத்தியவர்களும், என்னிடமே உயிரை அர்ப்பணம் செய்தவர்களுமான பக்தர்கள்.
பக்தியின் விளக்கத்தின் மூலம் தங்களுக்குள்ளே என்னுடைய பிரபாவத்தை விளக்கிக் கொண்டும், பேசிக் கொண்டும் எப்போதும் மகிழ்கிறார்கள் என்னிடமே
இன்புறுகிறார்கள்.
தியானம், பக்தி, அன்போடு வழிபடுகின்றவர்களும் ஆன எனது பக்தர்களுக்கு, எந்த புத்தி யோகத்தின் மூலம் அவர்கள் என்னை அடைவார்களோ அந்தத் தத்துவ ஞான வடிவாகிய யோகத்தை அளிக்கிறேன்.
அவர்களுக்கு அருள் புரிவதற்காக அவர்களுடைய உள்ளத்தில் நிலைத்து நின்று அறியாமையினால் உண்டான இருளை ஒளிமயமான தத்துவ ஞான வடிவான விளக்கினால் நானே அழிகிறேன்.
ஞான தீப ஒளியினால் அஞ்ஞானம் அழிவதும், பகவானை அடைவதும் ஒரே நேரத்தில் நேர்கின்றன.
இதில் எது முன், எது பின் என்று பிரித்துப் பார்த்தோமானால் முதலில் அஞ்ஞான அழிவு ஏற்படுத்துகிறது. அதே கணம் பகவானை அடைவதும் நிகழ்கிறது என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! நீங்கள் பரப்பிரம்மம், பரமபதம் மிகவும் புனிதமானவர், ஏனெனில் எல்லா ரிஷிகளும் உங்களை என்றும் உள்ளவர், தெய்வீகமானவர், முழுமுதற் கடவுள் பிறப்பற்றவர், எங்கும் நிறைந்தவர் என்று கூறுகிறார்கள்.
அவ்வாறே தேவரிஷி யான நாரதரும் அஸிதரும், தேவரும், மகரிஷியான வியாசரும் கூடக் கூறுகிறார்கள். நீங்களும் அவ்வாறே என்னிடம் கூறினீர்கள் என நெகிழ்கிறான் அர்ச்சுனன்.

