
அழிந்து போவதாக காட்டுகிறீர்கள். இதை எதற்கு காண்பித்தீர்கள். நீங்கள் அடுத்தாற் போல என்ன செய்யப் போகிறீர்கள் என்ற ரகசியம் எனக்குத் தெரியவில்லையே” தயவுசெய்து இந்த ரகசியத்தை வெளிப்படுத்துங்கள் என்று வேண்டுகிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! உலகங்கள் அனைத்தையும் அழிக்கின்ற பெருகி வளர்ந்துள்ள மகா காலனாக இருக்கிறேன்.
இப்போது உலகங்கள் எல்லாவற்றையும் சம்காரம் செய்வதற்கு முனைந்திருக்கிறேன்.
நானே அகில உலகத்தையும் படைத்துக் காத்து ஒடுக்கிக் கொள்ளும் சாட்சாத் பரமேஸ்வரன், தற்போது எல்லோரையும் சம்கார மகா காலன் என்று என்னை அறிந்து கொள்.
எந்தப் போர் வீரர்கள் எதிரிப் படைகளில் இருக்கின்றார்களோ, அவர்கள் எல்லோரும் நீ போர் புரியாமல் இருப்பினும் இருக்கப் போவதில்லை. எல்லோரும் போரில் அழிந்தே போவார்கள் என்கிறார்.
கௌரவப் படையினரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதன் மூலம் அர்ச்சுனனை மேலும், உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக பேச்சு யுத்தியை கையாளுகிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! நீ எழுந்திரு! புகழைப் பெற்றுக் கொள் இந்த வாய்ப்பை நழுவ விடாதே என்கிறார்.
“நீ இரு கைகளாலும் அம்பு தொடுப்பதில் வல்லவன் ஆயிற்றே!” இந்த சூர வீரர்களை வெற்றி கொள்வது உனக்கு எம்மாத்திரம்.
இவர்களை யுத்தத்தில் நீ அடித்துத்தான் ஆக வேண்டும் என்பது இல்லை. எல்லோருமே முன்னாலேயே அடிக்கப்பட்டு விட்டதை நீதான் உன் கண் எதிரில் கண்டாயே!
“நீ அம்பு எய்து புகழ் பெறு. இவர்களைத் தாக்குவதற்குத் தயங்காதே, மாய்ப்பது நான், நீ, ஒரு நிமித்தம் தான். “ என்கிறார் கிருஷ்ணன்.
“நீ ஒரு நிமித்தம் தான்” என்று கூறுவதற்கு மற்றோரு பொருளும் உண்டு. இவர்களைக் கொல்வதால் பாவம் வருமோ? என்ற பயமும் உனக்கு வேண்டாம்.
ஏனெனில், சத்திரியத் தர்மத்திற்கு ஏற்றவாறு தானாக நேர்ந்த இந்த யுத்தத்தில் இவர்களைக் கொள்வதில் நீ ஒரு நிமித்தமாக மட்டும் இருக்கிறாய்.
எனவே, பாவம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மாறாக சத்திரிய தர்மத்தை கடைப்பிடித்த புண்ணியமும் உண்டு.
உன் உள்ளத்தில் எந்தவித ஐயமும் கொள்ளாமல் அகங்காரம், மமகாரங்களைத் துறந்து உற்சாகமாக யுத்தத்தில் ஈடுபடத்தான் வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.
