17-குழந்தையுடன் பழக்கும் விதம்
குழந்தை பிறந்தவுடன் கவனிக்க வேண்டியவை: 1-நன்குஅழுகிறதா?
2-ஒரே சீராக சுவாசிக்கிறதா?
3- கை, கால்களில் நிறம் என்ன? நீளமா, இளம் ரோஜா?
4- சிறுநீர், மலம் நன்றாகக் கழிக்கிறதா?
5- சரியான எடை உள்ளதா? 6-தாயின் இரத்த வகையை சேர்ந்ததா? என்பன போன்றவை முதலில் கவனிக்க வேண்டும்.
குழந்தைகளிடம் பழகும் விதம்:- குழந்தைகள் பூ போன்ற மென்மையான மனம் கொண்டவர்கள். பூவை எவ்வளவு மெதுவாக தொடுகிறோமோ அதுபோல் அவர்கள் மனதை நாம் மெதுவாக தொட வேண்டும்.
பெற்றோரின் பிரதிபம்பம் தான் குழந்தைகள். பெற்றோர் எவ்வழியோ? குழந்தைகளும் அவ்வழியையே பின்பற்றுகிறார்கள்.எனவே, குழந்தைகளிடம் நாம் நடந்து கொள்ளும் விதம் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
நாம் என்ன செய்கிறோம் என்பதை நம் குழந்தைகள் மிகக்கூர்ந்து பார்க்கக் கூடிய நுண்ணறிவை பெற்றவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
குழந்தை தானே இவர்களுக்கு என்ன தெரியும் என உதாசினப் படுத்தவும் கூடாது.
நாம் குழந்தைகள் குறும்புகளையும், வளர்ச்சிகளையும் ரசித்து அவர்களுடன் நாமும் ஒன்றி அவர்கள் போக்கில் போய் நல்ல கருத்துக்களை மெது, மெதுவாக அன்புடன் சொல்லும் போது அவர்கள் மனதில் நல்ல கருத்துக்கள் சிறுவயதில் இருந்தே பதிவு செய்து கொள்ளப்படுகிறது.
நமது முகத்தை எப்போதும் கடுகடுப்பாகவும் கோபமாகவும் வைத்துக் கொள்வது குழந்தைகளுக்குப் பிடிக்காது.
அவர்கள் அன்பை சிரித்த முகத்தை விரும்புவார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், ஒருவர் நமது வீட்டிற்கு வருகிறார் என வைத்துக் கொள்வோம். அவர் நன்றாக சிரித்து பேசுபவர் என்றால் அவர் சிரிப்பில், பேச்சில் நாமும் அவ்வாறே நல்ல மனநிலையில் பேசுவோம்.
மனக்கஷ்டத்துடன் வந்திருப்பவர் என்றால், அவரின் வேதனையில் நாமும் பங்கு கொள்ள வேண்டிய மனநிலையில் இருப்போம். அதுபோல்தான் குழந்தைகளும்.
பெற்றோரிடம் இருக்கும் சந்தோசமும் அல்லது துக்கம் தான் குழந்தைகளுக்கும் ஒட்டிக் கொள்ளும். எனவே, நாம் எதை குழந்தைகளிடம் விரும்புவோம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
அதன்படி நடக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. என்பதை பெற்றோர் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழ்நிலையில் உலகம் குறுகி வீட்டிற்குள் அடங்கிவிட்டது போல், குழந்தைப் பிறப்பும் குறுகி ‘ஒரு குழந்தை’ போதும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
இதனால், அக்குழந்தைக்கு செல்லம் அதிகம் கொடுத்து குருவி தன் குஞ்சுகளை எவ்வாறு பாதுகாக்குமோ! அது போல் பொத்தி… பொத்தி வளர்க்கிறார்கள்.
இதனால், குழந்தை தான் கேட்டது எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்கிறது. அம்மா.. இந்த பொருள் வேண்டும் என குழந்தை கேட்கிறது. வாங்கித் தர மறுத்தால் அடம்பிடித்து அழ ஆரம்பித்து விடும். தன் ஒரே குழந்தை அழுவது பொறுக்காத பெற்றோர் உடனே வாங்கி கொடுக்கிறார்கள்.
உடனே, குழந்தை என்ன நினைக்கிறது என்றால், நாம் அழுது அடம் பிடித்தால் எதுவும் கிடைத்துவிடும் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறது.
இந்த இடத்தில் பெற்றோர் சிறிது சிந்திக்க வேண்டும். குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான கட்டம்.
இந்த காலகட்டத்தில் கவனமாக இருக்க வேண்டிய தருணம். குழந்தைகளிடம் எத்தனை பொம்மைகள் இருந்தாலும் புதிதாக பார்க்கும்போது வாங்க வேண்டும் என நினைக்கும் குழந்தை மனம்.
எது தேவை, எது தேவையில்லை என்பது எல்லாம் அவர்களுக்கு தெரியாத பருவம்.
நாம் வேண்டாம் என்றால் அதை வாங்க வேண்டும் என அடம் பிடித்து வாங்கும் பருவம். வாங்கி கொடுத்துவிட்டு அடம்பிடித்து வாங்கி விடுகிறான் என்று பெருமையாக நாம் அடுத்தவர்களிடம் சொல்லும்போது…
உன்னிப்பாக கேட்கும் குழந்தை இதுதான் நமது குணம் என நினைத்துக் கொண்டு அடம்பிடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளும்.
இந்த விசயத்தில் மட்டும் அல்ல குழந்தைகளுடன் குழந்தைகள் விளையாடும் போது எதையும் பொறுத்துக் கொள்ளும் தன்மை வராமல் அடம்பிடிப்பதும், கோபப்படுவதும் அவர்களது குணமாகிவிடும்.
எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். ஒத்துப்போகும் தன்மை சிறுவயதிலேயே வராமல் போகும். ‘நான்’ என்ற அகந்தை வளர்ந்து பிறரை மதிக்கும் குணம் மங்கிப் போகும். எனவே, பிறரிடம் குழந்தைகளைப் பற்றி சொல்லும்போது நல்ல விதமாக சொல்ல வேண்டும்.
குழந்தை தானே என எண்ணாமல் அவர்களையும் மதித்து அவர்களை நல்லவிதமாக சொல்லும்போது உயரிய பண்பு தானாகவே வளர்ந்து விடும்.


