நள்ளிரவைத் தாண்டி வெகுநேரம் ஆகி இருக்கும்….
ஊரே அமைதியாக இருந்தது மரங்கள் அசையும் சத்தங்களும், அவ்வப்போது சாலைகளில் செல்லும் வாகன ஒலிகள் மட்டுமே ஓசை எழுப்பிக் கொண்டு இருந்தன.
பறவைகள் அசையக் கூட மறந்து நல்ல உறக்கத்தில் இருந்தன.
அப்போது ஒரு குடிசையில் மட்டும் மெதுவாக ஒரு முணங்கள் சத்தம் கேட்டது.
அக்கா… அக்கா… கால் வலிக்கிறது அக்கா… ஐயோ! அக்கா! என படுக்கையில் இருந்து எழுந்து காலைப் பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டான் அசோகன்.
ஏண்டா சனியனே! பார்த்து வரக்கூடாது. காலில் ஆணியைக் குத்திக் கொண்டு வந்து மனுசனை தூங்க விடமாட்டேன் என்கிறாய்.
என தூக்கம் கலைந்து கோபத்தில் தீட்டினார் மாமா ராமு .
அழுகாதடா …
தம்பி! காலையில் மருத்துவமனைக்கு போகலாம் எல்லாம் சரியாகிவிடும்.
மாமா வேற திட்டுகிறார் பேசாமல் பொறுத்துக்கடா என அவன் காலை தூக்கி மடியில் வைத்துக் கொண்ட மீனா கைகளால் வருடிக் கொடுத்தாள்.
அக்கா… ரொம்ப வலிக்குது அக்கா! என கண்ணீர் தாரை…. தாரையாக வடிய தேம்பித் தேம்பி அழுதவன்.
அக்கா…. அக்கா கால் விறு…விறு என எண்ணமோ செய்யுது அக்கா !என காலைப் பிடித்துக் கொண்டு கதறினான் அசோகன்.
“கொஞ்சம் பொறுத்துக்கடா தம்பி” என்ற மீனா.
தம்பியின் கால்களை தன் கையால் தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.
கால் வீக்கம் ஆகி விகாரமாக இருந்தது. மீனாவும் பெரிய பெண் அல்ல. ஒன்பது வயது சிறுமி தான்.
இருந்தாலும் தாயைப் போல் கண் விழித்து ஐந்து வயது தம்பிக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு எங்கே என் தன் மாமா எழுந்து திட்டுவாரோ! என்ற பயத்தில்…
மாமா படுக்கையையும் மிரண்ட பார்வையுடன் பார்த்துக் கொண்டு விடிய விடிய தூங்காமல் உட்கார்ந்த படியே காலைத் தடவி கொடுத்தாள் மீனா.
அசோகனும் அழுது கொண்டே தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டான்.
தூங்கியும் முணங்கல் மட்டும் நிற்கவில்லை அசோகனுக்கு.
மீனாவும் தம்பியின் காலுக்கு அருகில் அப்படியே அயர்ந்து கண்களை மூடினாள்.
காலையில் சூரியன் புலர்ந்தான்… ஒளிக்கீற்று கூரை ஓட்டையின் வழியாக வீட்டில் பட்டு வெளிச்சம் பரவியது.
வீடு வெளிச்சமானது போல் மனம் என்று வெளிச்சம் ஆகும்.
அசோகன் பிறந்த வீட்டிலே அம்மா இறந்து போனாள்.
அன்றில் இருந்து தம்பியை தூக்கி வளர்த்து வருகிறாள் மீனா.
குடிகார தந்தை இருந்தார். அவரும் குடித்து… குடித்தே வயிறு அழுகி இறந்து போனார்.
மாமா மட்டும் இல்லை என்றால் என்றோ…! வீதிக்கு வந்திருக்க வேண்டியது. இன்று மாமா தயவால் குடிசையில் இருக்கிறோம் என எண்ணிய மீனா.
தயங்கி… தயங்கி மாமாவிடம் ஐந்து ரூபாய் கேட்டாள்.
ராத்திரி எல்லாம் கதறியது அரைகுறை தூக்கத்தில் கேட்டதால் ஒன்றும் சொல்லாமல் ஐந்து ரூபாய் காயன்சை எடுத்துக் கொடுத்தான் ராமு.
தம்பியை மெதுவாக வரச்சொல்லி கை தாங்கலாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றாள் மீனா.
காலில் உள்ள ஆணியை எடுத்து மருந்து போட்டு அனுப்பினார்கள் மருத்துவமனையில்.
ஒன்று, இரண்டு நாட்களில் கால் புண் குணமடைய தொடங்கியது. மீனா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
தம்பி! நான் பயந்து போயிட்டேன் டா! உன்னால் நடக்க முடியாமல் போய்விடுமோ? என்று… என கண்கலங்க கூறினாள் மீனா.
“அக்கா! எனக்குத்தான் இப்போ நல்லா ஆயிருச்சு தானே” என கால்களை ஊன்றி நடந்து காண்பித்தான் சிறுவன் அசோகன்.
தம்பியை தூக்கி மடியில் வைத்துக் கொண்ட மீனா. ‘தம்பி’ தனக்கு ஆறுதல் சொல்வதை நினைத்து கண் கலங்கினாள் மீனா.
அனாதையாகிப் போன இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லி விளையாடுவது மட்டுமே இன்பமாக இருந்தது.
மாமா வைத்துவிட்டுச் சென்ற சாப்பாட்டை தம்பியை சாப்பிட வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த ஒன்பது வயது தாய்மை உணர்வுடைய அக்கா மீனா.
