ஏனோ பிறக்கவில்லை – பிரேமா
நான் பேசாத கவிதையாய் !
நான் கேட்காத இசையாய் !
நான் வரையாத ஓவியமாய் !
நான் தீண்டாத தென்றலாய் !
என ஏன் ஆனாய் ?
என் வயிற்றில் உதித்து
என் கையில் வரும் முன்
ஏனோ பிறக்க மறுத்தாய்
கருவறையே கட்டி வைத்தேன் உனக்கு
அதை ஏன் கல்லறையாய் ஆக்கிக்கொண்டாய் ?
உற்றார் உறவுக்கு உன்வருகையை கூறியபின்
ஏன் என் உறவை வேண்டாம் என கலைந்தாய்
பிறப்பிற்கு முன்னே உன் விதியை அறிந்தாயோ
கர்ப்பத்தில் கலைவதே சரி என நினைத்தாயோ
ஆயிரம் கனவுகளை கண்களில் ஏந்தி !
அடிவயிற்றை அவ்வப்போது தொட்டு ! நாட்கள் ஒன்றொன்றும் மனதால் கணக்கிட்டு !
இறங்காத சோற்றை உனக்காக சாப்பிட்டு ! வாய் வழியே குடலேவருமளவுக்கு வாந்தி எடுத்து !
சொல்ல முடியாத சோகங்கள் பல தாங்கி இருந்தாலும் !
என்று நீ வருவாய் !என்று உன்னை தூக்குவேன் !
என காத்திருந்த என்னை ஏன் ஏமாற்றினாய் ?
ஈரைந்து மாதம் சுமந்தால் ஓர்நாள் பிரசவவலி
பாதியில் களைந்ததால் ஒவ்வொரு நாளும் பிரசவ வலி
இன்னொரு பிறவி உனக்கு உண்டாயின் எனக்கு இன்னொரு வாய்ப்பை தா

