கவிஞர் சோலை எழிலன்
விண்ணைத் தாண்டிப் பற!
விண்ணைத் தாண்டிப் பறந்திட நாமே
வெற்றியதே இங்கு நமதாகும்!
வீரம் நிறைந்த திறமை வாய்த்திட
வேதனை என்பது இலதாகும்!
வானத்தை அளக்கும் வல்லமை கைவர
வாழ்த்திடும் நெஞ்சம் பலவாகும்!
ஞானத்திருவுளம் நமக்கது வாய்த்திட
நானிலம் எங்கும் நலமாகும்!
எல்லைகள் இல்லா விண்வெளி மீது
ஏறுவதே நம் திறமாகும்!
எண்ணமும் உயர்வாய் இதந்தரு செயலே
இயற்றுவதே நல் அறமாகும்!
வானத்தைப் போலே மனமது அமைய
வாழ்த்திடும் உயிர்கள் வளம்பெறுமே!
வாழ்ந்திடும் காலம் வாதனை களைய
வாடிடும் உள்ளம் மகிழ்வுறுமே!
சாதனை புரிந்து சரித்திரம் படைத்திட
சத்திய வழியே முறையாகும்!
சமரசம் பழகி சமத்துவம் புரியும்
தத்துவமே உயர் நெறியாகும்!
வானத்தை எளிதாய்க் கடந்திட முனைந்திடு!
வகுத்திடு புதுயுகம் பிறந்துவிடும்!
வாகை சூடும் நாளதும் வரவே
வழிஅதும் நமக்கே திறந்துவிடும்!

