கவிஞர் கிருபானந்தன்
என்ன! பெரிசே! சொல்லிவிட்டே வந்தீரா!
என்ன! பெரிசே! போவது தான் எப்போது!
இன்னபிற சொல்லெல்லாம் அக்கூவம் ஆற்றுமணம்!
அகராதியில் இடமில்லை! மிகவருத்தம் முதமைக்கு!
மலையைப் பார்த்து நாய்குரைத்தால் வலியெல்லாம்
மலைக்கல்ல! நாய்க்குத்தான்! அதனை நினைவாயா!
நிலையின் திரியாது அடங்கியவன் தோற்றம்தான்!
நிற்கும் நிலையாக அம்மலையினும் பெரிதாக!
பேசுவது நான்தான்!பெரியவரே! கவலர்க்க!
பேசாத காளியிடம் பாரதிதான் அன்று
பேசியது போலின்று பேசுகின்றேன் என்றே
பேசியது! அவர்வீட்டில் கரித்துணிதான் ஆறுதலாய்!
அன்று புத்தா டையென அலங்கரித்தேன்!
அப்புறம் அழுக்கு நீக்கும் கந்தல்துணி!
இன்றுநான் சமையலறைக் கரித்துணிதான்!
எல்லாம் எனக்கொன்றே! கவலை எனக்கில்லை!
காடுபோ என்றாலும் நாடுஆள் என்றாலும்
கவலை கொள்ளா இராமனென நமது
ஏடுசொலும்! இராமன்வழி என்வழிதான்! அதனால்
அப்போதும் இப்போதும் எப்போதும் கவலையிலை!
வாழ்ந்து கெட்ட கரித்துணிதான் பேசுகின்றேன்!
வீழ்ந்து விட்டேன் என்றுதான் நினைத்தாயோ!
தாழ்ந்தாலும் சங்கடத்தை மகிழ்வென மாற்றத்
தவறாதே என்றதுவே! நன்றிசொன்னார் பெரியவரே!

